முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதி



கமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட கோவையாகப் பேசுவதைக் கண்டு பதற்றமாகிய கமல் மீண்டும் மைக்கை எடுத்து குழப்படியாக பேசிய ஜம்பத்தையும் கவனித்திருப்பீர்கள். பத்திரிகையாளர்களின் கேள்விகள் அவரை எப்படி பதற்றமாக்குகிறது, உடனே சின்ன பயத்துடன் சிரித்தபடி சமாளித்து மீண்டும் சம்மந்தாசம்மந்தமில்லாமல் எப்படி பேசுகிறார் என்பதையும் பார்த்திருப்பீர்கள். தான் அளிக்கும் வாக்குறுதி ஒன்று குறித்த அடிப்படை புரிதல் கூட ஒருவருக்கு இல்லையா, அதை நியாயப்படுத்த ஒரு பள்ளிக்குழந்தை தெரிந்த அளவுக்குக் கூட ஒருவருக்குத் தெரியாதா எனவும் யோசித்திருப்பீர்கள். 


குறிப்பாக, பொறியியல், மருத்துவம், பல்வேறு பட்டப்படிப்புகள் முடித்த பெண்கள், பள்ளிக் கல்வி வரை முடித்தவர்கள் என பல்வேறு கல்விப் பின்னணி, தகுதி கொண்ட மனைவியருக்கு எப்படி சம்பளம் வரையறை பண்ணுவது என்பதே கேள்வி. அதற்கு மிக எளிய பதில் “கல்வித்தகுதி அடிப்படையில் அல்ல, குடும்பத்திற்காக செலுத்து உழைப்பின் அடிப்படையிலே சம்பளம், அனைவருக்கும் ஒரே சம்பள வரையறை தான்.” என்பதே. ஆனால் கமல் இன்னொரு டிராக்கில் போய் தான் சார்ந்த சினிமாத் துறையில் எப்படி லைட் பாய்க்கு, நடிகருக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என ஒவ்வொரு அளவிலான சம்பளம் உண்டு, ஆனால் அதே நேரம் அத்தனை பேரின் பங்களிப்பும் முக்கியம் என நீண்ட ஒரு பதிலை அளித்தார். இதைக் கேட்கையில் என்னதான் சொல்ல வருகிறார் எனும் குழப்பம் ஏற்படும். ஏன் குழப்பம் என்றால் கமல் எந்த கேள்வியையும் யோசித்து புரிந்து கொண்டு பதிலளிப்பதில்லை, மாறாக அவர் சிந்தித்தபடியே பேசுகிறார். அவரது மனம் இயல்பாகவே ஒழுங்கற்று தடம் புரண்டு சிந்திப்பது. மனிதன் நிலவில் கால் பதித்ததைப் பற்றி கேட்டால் கூட அவர் அப்படியே ரைமிங்காக ஆரம்பித்து ஒரு யுடர்ன் எடுத்து தனது படங்களைப் பற்றி பேசி, பாலசந்தர், தன் அப்பா, தன் அம்மா, அண்ணா, தாத்தா என முக்கால் மணிநேரம் பேசுவார். சரி வேண்டாம், அணு விஞ்ஞானம் பற்றி கேளுங்கள். அதற்கும் அப்படியே தன் சினிமாவில் வந்த ஒரு வசனத்தில் இருந்து ஆரம்பித்து தனது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டு எனக்கு அணு விஞ்ஞானமும் தெரியும், அனுஹாசனையும் தெரியும் என பஞ்ச் சொல்வார். ஆனால் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் மண்டையை பிய்த்துக் கொள்வீர்கள். கமல் அளவுக்கு வாசிப்போ, மொழி சாமர்த்தியமோ இல்லாத எடப்பாடியார் கூட கமலை விட சிறப்பாக எதிர்-விமர்சனக் கேள்விகளை எதிர்கொண்டு பதறாமல் குழப்பாமல் பதிலளிப்பதைக் காண்கிறோம். ஆனால் உலக மகாஞானியான கமலுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பிரச்சனை? இப்படியான ஒருவரின் பொறுப்பில் ஒரு மாநிலத்தை விட்டால் அவரால் எந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்? ஆட்சி என்பது என்ன நடிப்பா, திரைக்கதை, வசனப்படி செயல்பட?


இதற்கு பதில் காண நாம் அரசியல்வாதிகளின் ஒரு பொது இயல்பை புரிந்து கொள்ள வேண்டும் - அது அனைத்து வித மக்களுடனும் சகஜமாக பேசிப் பழகுவது, எல்லாவித எதிர்வினைகளையும் போகிற போக்கில் லைட்டாக எடுத்து கொள்வது. ஆனால் கமல் இதற்கு நேரெதிரான ஆளுமை கொண்டவர். மிகை-நுண்ணுணர்வும், சுயமோகமும் மிக்க அவர் அடிப்படையில் ஒரு தனியரும் கூட. தான் மிக சௌகர்யமாக உணர்கிற, தன்னை தொடர்ந்து ஜால்ரா அடிக்கிறவர்களிடமே அவர் இணக்கமாக உணர்கிறார். மற்றவர்கள் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் எனும் பிரக்ஞையும் அவருக்கு மிக அதிகம். கமல் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அதை பின் தொடர்ந்து பதிவு செய்ய ஒரு பத்திரிகையாளர் கூட செல்கிறார். ஒருநாள் காலையில் நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் கமலை பேட்டி எடுக்கிறார். கமல் காலையில் எழுந்து செய்கிற வேலைகளைக் காட்டி விட்டு உணவு மேஜையில் அவரது காலையுணவு விளம்பப்பட்டிருக்க கமல் பேட்டியை துவங்குகிறார். அடிப்படையான நாகரிகம் தெரிந்தவர்கள் தாம் உணவருந்தும் போது யார் பேசினாலும் அவருக்கு ஒரு கோப்பை பழச்சாறோ தேநீரோ ஆவது வரவழைத்துக் கொடுப்பார்கள், அல்லது சாப்பிடுகிறீர்களா என்றாவது கேட்பார்கள். ஆனால் இவர் கவலையே இல்லாமல் நிருபரை பார்க்க வைத்து பூரியை தன்பாட்டுக்கு உள்ளே தள்ளியபடி கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். கமல் ஒரு பொது வெளியில் சகஜமாக எல்லாருடனும் பழகும் இயல்பற்றவர். ஏனென்றால் தன் மக்களைத் தவிர பிறர் மீது ஒரு பயம் அவருக்குள் படிந்திருக்கிறது. அதனாலே அவர் முடிந்தவரையில் பொதுமக்களின் கேள்விகளை, ஊடகங்களை தவிர்க்கிறார். மாறாக - மோடி ஜியைப் போல - பதிவு செய்யப்பட்ட கருத்தாடல்களையே விரும்புகிறார். இதுவும் சுயமோகம் மிக்க சர்வாதிகாரிகளின் இயல்பே. அவர்கள் தானொரு கண்ணாடி மாளிகைக்குள் வாழ்கிறோம் எனத் தெரிந்திருப்பார்கள், அதனாலே அதில் விரிசல் ஏற்படக் கூடாது என அதீத அக்கறை காட்டுவார்கள்.


இவ்வருட பிக்பாஸில் பாலாஜி கமல் அணிந்து வந்த கூர்க்கா சீருடையை நோக்கி சிரித்து விட்டார். அதை போகிற போக்கில் எடுத்துக் கொள்ள முடியாமல் கமலின் முகம் சிவந்து விட்டது. “என்ன? என்ன?” என பாலாஜியை அழைத்து கோபமாக கேட்கிறார். பாலாஜி நிலைமையை புரிந்து கொண்டு “உங்க டிரஸ் சூப்பரா இருக்கு” என சலூட் அடித்துக் காட்டி சமாளித்து விட்டார். இதற்கு முன்பு கமல் குறித்து ஒரு கிண்டலான கருத்து சொன்னதற்காக அவர் நடிகர் சரவணனை வெளியேற்றினார் என கேள்விப்பட்டிருக்கிறோம்.


 ஒரு பேட்டியில் நடிகர் ஜெயராம் “தெனாலி” படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார் - கமலுக்கு ஜெயராம் சொல்லும் ஜோக்குகள் ரொம்ப பிடிக்கும். படத்தளத்தில் அவர் ஜெயராமை அழைத்து உட்கார வைத்து ஜோக்குகளைக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு காட்சி எடுக்கும் நேரம் வருகிறது. எல்லாரும் தயார். இயக்குநர் கமல் பக்கத்தில் வந்து நின்று அவரது கவனத்தைக் கவர முயன்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் பொறுமை இழந்து “சார்” எனக் குறுக்கிடுகிறார். அப்போது கமல் கோபமாகி அவரை நோக்கி கத்துகிறார்: “பேசிக்கிட்டிருக்கோமில்ல, ஏன் தொந்தரவு பண்றீங்க?” இயக்குநர் உடனே ஓரமாய் பதுங்கிக் கொள்கிறார். அடுத்து ஜெயராம் சொல்கிற பல ஜோக்குகளைக் கேட்டு ரசித்து சிரித்த பின்னரே அவர் காட்சிக்கு தயாராக நடிக்க வருகிறார். இது சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களுக்கு வழக்கமாக இருக்கலாம், ஆனால் கமல் 24 மணிநேரமும் இந்த மூடில் தான் இருக்கிறார். 


ஒரு இலக்கிய சம்பவம் சொல்கிறேன் - கமலின் ஒரு படத்தைக் குறித்து ஒரு முக்கியமான இலக்கிய பத்திரிகையில் சாரு நிவேதிதா ஒரு கட்டுரை எழுதி அதில் கமலை கிழித்து தொங்க விட்டு விடுகிறார். அப்பத்திரிகைக்கு சந்தா எடுத்துள்ள கமல் உடனே பத்திரிகையின் எடிட்டரை தன் வீட்டுக்கு அழைத்து கத்த ஆரம்பித்து விடுகிறார். அவர் அதற்கு சொன்ன காரணமே விசித்திரமானது - “தமிழ் சினிமா உலகில் உங்க பத்திரிகை சந்தா எடுத்துள்ள ஒரே கலைஞன் நான் தான். அப்படிப்பட்ட என்னை விமர்சித்து எப்படி அதில் கட்டுரை வரலாம்?” இதெல்லாம் ஒரு காரணமா? நீங்கள் ஒரு பத்திரிகைக்கு சந்தா எடுத்தால் பிறகு அதில் உங்கள் படைப்புகளை புகழ்ந்து மட்டுமே கட்டுரைகள் வர வேண்டுமா? இப்படி வினோதமாக நம்மில் யாராவது இதுவரை யோசித்திருக்கிறோமா? நாமெல்லாம் சந்தா எடுத்த பின் அதில் நம் படைப்புகள் வர வேண்டும் என்று கூட கோர தயங்குவோம். ஆனால் கமல் யோசிப்பார்.

அவருக்கு இந்த உலகமே பணிவிடை செய்ய வேண்டும். தன்னை எப்போதும் எல்லாரும் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும். இவர் நாளை முதல்வரான எப்படியெல்லாம் நடந்து கொள்வார் யோசியுங்கள் - சட்டமன்றத்தில் துணை நடிகர்களும், அடிபொடிகளும் எழுந்து நின்று கமல் பட வசனங்களை சொல்லி, அவரது நடிப்பை பாராட்டியபடியே இருப்பார்கள். அதைத் தாண்டி அவருக்கு ஒன்றும் தெரியாது, புரியாது, அக்கறையும் இல்லை.


ஆனால் தனி உரைகள் ஆற்ற சொன்னால் அதை நன்றாக எழுதி வைத்து மனனம் பண்ணி நிகழ்த்தி விடுவார். இதை அவர் எடப்பாடி மற்றும் ஸ்டாலினை விமர்சித்து அண்மையில் பேசிய காணொலி ஒன்றில் கண்டோம். திரும்ப யாராவது கேள்வி கேட்டால் அந்த நொடியே அவர் ஸ்தம்பித்து நின்று விடுவார். “டாஸ்மாக்கை மூடி விடலாம், உங்களிடம் உள்ள மாற்றுத் திட்டமென்ன எனக் கேட்டால்” குழப்பமாகி அப்படியே அதே சினிமா, பாலசந்தர், தன் குடும்பம் என ஜல்லியடிக்க ஆரம்பித்து விடுவார். ஏனென்றால் எதையும் அவர் யோசித்து வைப்பதில்லை, தன்னைச் சுற்றி வாழும் மக்களைக் குறித்த கவனமோ அக்கறையோ இல்லை. அவர் ஒரு நல்ல சினிமாக்காரர், அதைத் தவிர வேறெதையும் யோசிக்காதவர்.

 வாழ்க்கையை சினிமாவாக காண்கிற ஒரு ரசிகர் மட்டுமே கமலை ஒரு அரசியல் தலைவராக, முதல்வர் வேட்பாளராக ஆதரிக்க முடியும். அதனாலே சொல்கிறேன்: வரும் தேர்தலில் “மய்யத்துக்கு” கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளி விடும். நாம் சர்வாதிகாரத்துக்காக இந்த மண்ணை தயாரிக்கத் தொடங்கி விடுவோம்.

கருத்துகள்

பாகை இறையடியான் இவ்வாறு கூறியுள்ளார்…
முழுக்க, முழுக்க ஆணித்தரமான கமல் பற்றிய கருத்துக்கள் இன்னொன்றையும் சேர்த்து இருக்கலாம் அந்த வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு ஒரு ஐந்து நிமிடம் தொடையை செருமி கனைப்பாரே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...