முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு உலகங்கள்

நான் கடுமையாக வெறுப்பது ஒரு நாவலில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில், தினமும் பல நூறு சொற்களை அனாயசமாக எழுதிக் கொண்டிருக்கையில், அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத மற்றொரு வேலையை சில நாட்கள் தொடர்ந்து செய்ய நேர்வதே. அதாவது நாவல் எழுத ஒரு சில மணிநேரங்கள் கூட கிடைக்காதபடி வேலை நெருக்கடி அதிகமாவதே. பயணங்களையும் இதில் சேர்க்கலாம். திரும்ப நாவலில் விட்ட இடத்துக்குத் திரும்பும் போது மீண்டும் மனநிலை கூடி வர நேரமெடுக்கிறது. பனிமூட்டத்தில் வழி மறைந்து விட்டதைப் போலத் தோன்றுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் போராடி மீண்டும் சரளமாக எழுத ஆரம்பிக்கலாம் என்றாலும் சில நாட்களை இழந்து விட்ட கோபம் உள்ளிருந்து அரித்துத் தின்னுகிறது.

 அதை விடக் கொடுமை என்னவென்றால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல தினந்தோறும் பற்பல வேலைகளை செய்தபடி மனிதர்கள் இருப்பதைக் காண்கிறேன், அவர்களுக்கு இதைப் போல எந்த கவலையும் இல்லை, அன்றாட நெருக்கடிகளைக் கையாண்டால் போதுமென இருக்கிறார்கள். எனக்கு தண்ணீரில் இருந்து ஒரு மீனைப் பிடித்து கரையில் போட்டதைப் போலிருக்கிறது; அவர்கள் எனதுலகதுக்கு சற்றும் சம்மந்தமில்லாததைப் போல இயல்பாக சிரித்தபடி கடந்து போகிறார்கள். அப்போதைய மனநிலையில் எனக்கு இவர்களைப் பார்க்கையில் வேற்றுலகவாசிகளைப் பார்ப்பதைப் போலிருக்கிறது. 

எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இவர்களுடைய உலகம் நிஜமாகவே உண்மையானது தானா என ஆச்சரியம் கொள்கிறேன். என் நாவலை எழுதி முடித்த பின்னர் என் மனநிலையே எனக்கு விசித்திரமாக இருக்கும், நானும் அவர்களிடைய உலகில் ஜாலியாக இணைந்து கொள்வேன். அதுவரை எனக்கு இந்த அன்றாட உலகின் நியதிகள், அவசியங்கள், நெருக்கடிகள் அபத்தமாகத் தோன்றுகின்றன. எதுவும் எனக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. உடற்பயிற்சியில், டயட்டில் ஆர்வம் இழக்கிறேன். எவ்வளவு நினைவுபடுத்தினாலும் அந்ந்த நாளைக்கான வேலைகள் நினைவில் இருந்து நழுவிச் செல்லுகின்றன. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சற்றும் வருத்தம் ஏற்படுவதில்லை. எப்போதும் ஒரு மந்தமான சுகானுபவ நிலை. இதற்காகவே நான் சில மணிநேரங்களாவது நாவலை எழுத விரும்புகிறேன். அதை ஏதாவது ஒரு வேலை வந்து தடுக்கும் போது உலகை தொடர்ந்து சபித்தபடி அதைச் செய்கிறேன். என்னையே கடுமையாக வெறுக்கிறேன். எல்லாரையும் முறைத்தபடி இருக்கிறேன். என்னைப் பார்த்தால் அப்போது எல்லாருக்கும் கிறுக்கு என்றே தோன்றும். எனக்கும் அவர்களைப் பார்த்தால் அப்படியே இருக்கும்.


இப்படி ஒரு உலகம். அதன் கதவு மூடி விடக் கூடாதே என பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...