நூல் : மனுஷ்ய புத்திரன்: எளிய மனங்களில் பாணன் ஆசிரியர் : ஆர். அபிலாஷ் வெளியீடு : உயிர்மை பக்கங்கள் : 80 வகை : கட்டுரை நூலாசிரியரான ஆர். அபிலாஷை முகநூலின் வழி அழுத்தமான, கவனக்குவிப்பை கோரும் நீண்ட கட்டுரைகளுக்காக எனக்குப் பரிச்சயம். அவ்வகையில் இந்நூலும் ராணுவ கட்டுப்பாட்டோடு எழுதப்பட்டது எனலாம். மனுஷை யாருக்குத்தான் பிடிக்காது?. எனக்கான அவரின் முதல் அறிமுகமே ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியே. நீண்ட வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அதில் பெருத்த சத்தத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார். அதைத் தாண்டியும் அவரிடம் ஈர்த்தது, குடைராட்டினத்தில் வரிசையாய் தொங்கவிடப்பட்ட நூலிழையாய், சீராக அங்குமிங்கும் அலைபாயும் கேசமே. முதலில் நான் அவரின் ஹேர் ஸ்டைலின் ரசிகன். பின்பே அவரின் கவிகளுக்கு. என் பள்ளி மாணவனொருவன் மூலம் அறிமுகமான அவரின் ‘காதலின் நூறு சம்பவங்கள்’ நூல்தான் எனக்கு அவரின் முதல் நூல். அதற்கு முன்னதாக முகநூலில் கவிதைகளை வாசித்திருக்கிறேன். இந்த அறிமுகங்களைக் கொண்டே அவருக்கான ஒரு கவிதையையும் புனைந்தேன். மனுஷும், ஆர். அபிலாஷும் பொறுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். வெட்டிப்பறிக்கும் வலிக...