முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்னத்தனங்களின் காலம்




 
நண்பரொருவர் இன்று விமர்சனக் கூட்டங்கள் குறைந்து வருவதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தார். சென்னையில் நான் வாழ்ந்த காலத்தில் கலந்துகொண்ட கூட்டங்கள் பெரும் உத்வேகத்தை அளித்தது நினைவுக்கு வந்தது. அதே நேரம், கூட்டங்கள், இதழ்கள் நடத்தப்படும் எண்ணிக்கையும் தொடர்ச்சியும் ஒருவித தற்காலிகப் போக்கு என நினைக்கிறேன்.

அதேநேரம் எனக்கு மற்றொரு சமூகப் பண்பாட்டுப் போக்கும் நினைவுக்கு வந்தது - சின்னத்தனங்களின் எழுச்சி. இதை நான் ஒழுக்கப் பண்பின் அடிப்படையில் சொல்லவில்லை. தரத்தின் அடிப்படையில் சொல்கிறேன்: இன்று ஒருவர் பண்பாட்டு வெளியில் அங்கீகரிக்கப்பட, அதிகாரத் தளத்தில் வெற்றி பெற திறமை குறைந்தவராக, அதிக சாதனைகள் படைக்காதவராக இருப்பதே வசதியானது. அரசியலில், சமூகத்தில், வேலையிடத்தில், இலக்கியத்தில் இப்போக்கு ஊடுருவி உள்ளது.
அண்மையில் ஒரு மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது திருட்டு டிக்கெட் விற்றவர்கள், கந்துவெட்டிக்காரர்கள், பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவோரே அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றார். அவரது பேச்சில் ஒரு வேதனை இருந்தது. எதையும் பேசவோ வாசித்துக் காட்டவோ தெரியாதவர்களே அதிக முன்னுரிமை பெறுகிறார்கள் நாம் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுடைய பின்னணி மட்டுமல்ல அறிவுப் போதாமை, ஆர்வமின்மை, பத்தாம்பசலித்தனம் எல்லாமே பிரச்சினைகளாகப் பிறருக்குத் தோன்றும்போது அதிகாரத் தளத்தில் இவையே அனுகூலங்களாகின்றன. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒன்றிய அரசிலேயே நடக்கிறது - அங்கு அறிவு, அனுபவம், மக்களிடையே நன்மதிப்பு ஆகியவை எதிர்-தகுதிகளாகப் பார்க்கப்பட்டு இவையில்லாதவர்களே அமைச்சர்கள் ஆகிறார்கள். அறிவுஜீவிகளை அண்மையில் பிரதமர் அறிவுத் தீவிரவாதிகள் என அழைத்ததையும் நாம் நினைவு கொள்ள வேண்டும். அடுத்து, வேலையிடம். நான் கவனித்தவரையில் அனுபவமும் திறமையும் படைத்தவர்களை விட ஒன்றும் தெரியாத, ஆர்வமற்ற இளைஞர்களுக்கே இன்று பெரிய நிறுவனங்களில் அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள். இவர்களே உடனடியாகப் பதவி உயர்வும் பெறுகிறார்கள். அடுத்து இலக்கியம். இங்கும் அண்மையில் பல விருதுகள், விழாக்களில் இடங்கள் சிறந்த படைப்பாளிகளை விட தற்காலிக எழுத்தாளர்களுக்கே ('gig writers') வழங்கப்படுவதைப் பார்க்கலாம். இலக்கிய முகவர்களாகச் செயல்படுவோரே இன்று யார் எங்கே போய் நிற்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். முன்பு விமர்சகர்களும் இலக்கிய மேதைகளும் தீர்மானித்த விசயங்களை இன்று இலக்கியத்தில் இருந்து விலகிப் போனவர்களே தீர்மானிக்கிறார்கள். பொட்டு மாமாக்கள், அலுவலக மாமாக்கள், இலக்கிய மாமாக்கள்.
இது ஏனென்று பார்த்தால் ஒன்று விளங்கும் - இத்தகையோருடனே இன்றைய தலைமைகள் சௌகர்யமாக இருக்கின்றன. ஏனென்றால் இன்றைய அரசியல், தொழில்சார், இலக்கியப் பண்பாட்டுத் தலைமைகள் தகுதியற்றவர்களாகவும், சர்வாதிகார மனநிலைப் படைத்தவர்களாகவும் உள்ளார்கள். தாம் கேலி செய்யப்படுவோமோ, எதிர்க்கப்படுவோமோ எனும் அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. அதனாலே அவர்கள் மிகவும் பணிவானவர்களாக நடிப்பார்கள். அதேநேரம் எப்போதுமே உடனடி அடிபணிவைப் பிறரிடம் எதிர்பார்ப்பார்கள். இன்றையச் சூழலில் எதையும் சாதிக்க சின்னச்சின்ன காய்நகர்த்தல்கள், மலினமான நோக்கம், சுயநலமே போதும். இவற்றை மீறி நீங்கள் உயர்ந்த நிலையில் சிந்தித்தாலே நீங்கள் ஆபத்தானவர்களாகப் பார்க்கப்படுவீர்கள். இதையே நான் 'சின்னத்தனம்' என்கிறேன். ஒரு கரப்பான் வெளிச்சம் பட்டதும் போய் ஒளிந்து கொள்வதைப் போல நடந்துகொள்வோரே இன்று வெல்ல முடிகிறது.
நேற்று "மகாபாரதத்தின்" விராட பர்வம் படித்துக் கொண்டிருந்தால் அதில் தலைமறைவாக வாழும் பொருட்டு மாறுவேடம் பூண்டு விராட தேசத்திற்குச் செல்லும் பாண்டவர்களுக்குத் தரப்படும் அறிவுரையானது தற்செயலாக மேற்சொன்ன விசயங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது: மன்னரின் அவையில் எப்படி இருந்தால் பிழைக்கலாம் என அறிவுரை சொல்லப்படும்போது முக்கியமாக வலியுறுத்தப்படுவன தன்னெழுச்சியாக செயல்படவோ வாதிடவோ கூடாது, மன்னரின் மனநிலை உணர்ந்து அதற்கு ஏற்பப் பேச வேண்டும், மன்னருக்கு விரோதம் உள்ளோரைப் பார்க்கவோ அவர்களிடம் உரையாடவோ கூடாது, மன்னர் எப்போது அழைத்தாலும் புறப்பட்டுப் போய் விட வேண்டும், மன்னர் அழைக்காதபோது அவர் பார்வையில் படாமல் பதுங்கி நிற்க வேண்டும் ஆகியவை. சைரந்திரி எனும் பெயரில் ராணிக்கு வேலைக்காரியாகச் செல்லும் திரௌபதி பின்னர் ஒரு காட்சியில் பீமனிடம் இதைக் குறித்துப் புகார் சொல்லி அழுகிறாள். எப்போதும் ராணியின் பார்வைக்கு அஞ்சி, மன்னரின் மனநிலை கோணி விடக் கூடாதே எனக் கருதி வாழ்வது ரொம்பவும் துயரமாக இருக்கிறதே என்கிறாள். எனக்கு இதுதானே இன்றைய மனநிலை எனத் தோன்றியது. ஏன் நாமும் தலைமறைவு வாழ்க்கை வாழும் பாண்டவர்களைப் போல உணர்கிறோம் என்றால் மக்களாட்சி விழுமியங்கள் காலில் போட்டு மிதிக்கப்படும்போது ஒரு மன்னராட்சி சூழல் எல்லா இடங்களிலும் பரவுகிறது. இலக்கியவாதிகள், மேலதிகாரிகள், முதல்வர், பிரதமர், அமைச்சர்கள் எல்லாம் மன்னர்களாகவும் அதே சமயம் தாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனும் அச்சத்துடனும் நடந்து கொள்கிறார்கள். துணிச்சல் திமிர்த்தனமாகவும், படைப்பாற்றல் போதாமையாகவும் காணப்படுகிறது. சமூகமாக்கல், ஜால்ரா, நைச்சியம் வெற்றிப் பண்புகள் ஆகின்றன. இத்தலைமைகள் தமக்குக் கீழ் உதவாக்கரைகளை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். இவர்களைக் கண்டு பிறரும் பணிவாகவும் நைச்சியமாகவும் நடிக்கிறார்கள். புது சிந்தனைகள், எதிர்க்கருத்துக்கள், விமர்சனம், புதிய படைப்பாக்கப் பரிசோதனைகள் காணாமல் போகின்றன.
எல்லா போக்குகளையும் போல இதுவும் ஒரு தற்காலிகப் போக்கே. விராட பர்வம் முடிந்ததும் இயல்பு நிலைக்கு மீள்வோம். மரங்கள் மீது ஒளித்து வைத்த ஆயுதங்களைத் தரித்து பாண்டவர்களால் போய் செய்ய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...