அடுத்த மாதம் ஆறாம் தேதி நான் புனைவு எழுதும் பயிற்சிப் பட்டறையை ஆங்கிலத்திலேயே நடத்த இருக்கிறேன். சொல்லப் போனால் தொடர்ச்சியாக சில பட்டறைகளை இவ்வாறு புனைவெழுத்து குறித்த சின்னச்சின்னத் தலைப்புகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கிலத்தில் நடத்தலாம் என இருக்கிறேன். என் உத்தேசம் தமிழைக் கடந்து உள்ள இளம் படைப்பாளிகளிடம் பயிற்சியை எடுத்துச் செல்வது. ஒரு தமிழ்ப் படைப்பாளியாக தமிழின் எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டும் எனும் விருப்பம் எனக்கு உள்ளது. நான் ஒரு ஆங்கில ஆசிரியராகவும் உள்ளது இதற்கு உதவுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு புனைவெழுதும் வகுப்புகளை நடத்திய அனுபவமும் உண்டு. இந்த எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் சாரு நிவேதிதா. அவரைப் பாருங்கள் இந்த வயதில் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறார். நாவலை இரு மொழிகளில் பிரசுரிக்க நினைக்கிறார். ஏனெனில் ஆங்கிலம் வழி நாம் அடையக் கூடிய உலகம் மிகப் பெரிது.
அதே நேரம் நான் தமிழ்ப் புலத்துக்குள் இத்தனை ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வந்துள்ளதால் சட்டென விரிவான ஒரு வாசகப் பரப்பை ஆங்கிலம் வழியாக அடைய இயலாதுதான். நிறைய இளம் படைப்பாளிகள் தமிழுக்கு வெளியே என்னை அறியாதவர்கள். அவர்களுக்கு புனைவெழுதும் பயிற்சி தேவையுள்ளது எனினும் அவர்களைப் போய் எட்டும் புகழும் செல்வாக்கும் இப்போது என்னிடம் இல்லை. மெல்ல மெல்ல அதை உருவாக்க முடியும் என நம்புகிறேன். நமக்கென எந்த வழிகளும் இல்லாதபோது நாமே நமக்கான பாதைகளை உருவாக்க வேண்டும். இந்தப் பட்டறைகள் அதற்கானவையே.
கருத்துகள்