கீழ்வரும் பொன்மொழிகள் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மேளாவில் கலந்துகொள்ளும் இளம் துன்பியல் நாயகர்களுக்குக்கானவை:
1. “நாம பிரிஞ்சிரலாம்” என மனைவி கோபத்தில் சொன்னதுமே அவரிடம் நேரடியாக விசாரித்து விடுங்கள். நீங்கள் விவாகரத்தின் போது பயப்பட மாட்டீர்கள் என்றும், எப்படி அதைச் சமாளிப்பீர்கள் என்றும் விளக்குங்கள். இதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக மாற்றி கோபப்படாமல் நிதானமாக நடைமுறையைப் பற்றிப் பேசுங்கள். உங்களுக்கு அவரிடம் எந்த வெறுப்பும் இல்லையென்றும், வழக்கின் போது உங்கள் தற்பாதுகாப்புக்காக எந்த நியாயமான எல்லைக்கும் போவீர்கள் என்றும் சொல்லுங்கள். கோபப்படும் அந்நொடியே நீங்கள் தோற்றுப் போவீர்கள். “ஏங்க நான் சும்மாதான் சொன்னேன், அதுக்கு ஏன் நீங்க இந்தளவுக்குப் போறீங்க?” என அவர் சொல்வார். ஆனால் அவருக்கு நீங்கள் சொல்கிற உண்மை அடிமனத்தில் போய் பதியும். தனிமையில் யோசிப்பார்.
2. நீங்கள் புது வணிகமொன்றை ஆரம்பிக்க ஐடியா தேட ஆரம்பியுங்கள்.
3. அடுத்தடுத்து அவர் பிரிவதாகப் பேசுகிறார் எனில் வக்கீலிடம் பேச ஆரம்பித்து விட்டார் எனப் பொருள். இப்போது புது வேலைக்கான நேர்முகங்களில் கலந்து கொள்ளுங்கள். சுமாரான வேலையாக இருந்தாலும் கவலையில்லை.
4. அடுத்து எதாவது ஒரு சாக்கு காட்டிப் பிரிந்து போய் விடுங்கள். விடுப்பெடுத்து ஊருக்குப் போங்கள். உங்கள் பெற்றோரிடம் சென்று சில நாட்கள் / வாரங்கள் இருங்கள்.
5. உங்கள் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குங்கள். பொதுவெளியில் உங்களைப் பற்றியுள்ள தகவல்களை அழியுங்கள். வங்கியில் உள்ள உங்கள் பணத்தை அப்படியே உங்கள் பெற்றோரின் கணக்குக்கு அனுப்பி விடுங்கள். உங்கள் பெயரில் சொத்திருந்தால் அதை பெற்றோர் அல்லது சகோதர சகோதரியின் பெயருக்கு பரிசாகக் கொடுப்பதாகச் சொல்லி மாற்றுங்கள். வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு சம்பளத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்காத ஒரு வேலையில் சேருங்கள். அதற்கு முன் பி.எப் தொகையை எடுத்து மேற்சொன்னோர் கணக்குக்கு அனுப்புங்கள். வேலை கிடைக்கவில்லை என்றால் எதாவது சின்ன வணிகம் செய்யுங்கள். அந்த வருமானத்தை வங்கியில் இருப்பு வைக்காதீர்கள். இவைத் தற்காலிக ஏற்பாடுகளே. இப்போது நீங்கள் முழு பூஜ்யம்.
6. உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பதாக மனைவிக்குத் தெரிவியுங்கள். அவர் உங்கள் முகவரிக்கு விவாகரத்து நோட்டீஸை அனுப்புவார். இது ரொம்ப முக்கியம்.
7. இப்போது ஒரு மொக்கை வக்கீலைப் பிடியுங்கள். உங்களுக்கு வழக்கு நடத்த விருப்பமில்லை என்றும் செட்டில்மெண்ட்தான் இலக்கு என்றும் ஆரம்பத்திலேயே சொல்லுங்கள். நீங்களே நீதிமன்றத்தில் உங்கள் மனைவியின் வக்கீலைச் சந்தித்து நிலைமையை விளக்குங்கள். நீங்கள் ஒரு பூஜ்யம் எனச் சொல்லுங்கள். உங்கள் பெற்றோரிடம் உங்களுக்குச் சண்டை ஏற்பட்டதால் தனியாக இருப்பதாகச் சொல்லுங்கள். ஒரு சின்ன தொகையைக் குறிப்பிட்டு பேரம் பேசுங்கள். படியாது.
8. தொடர்ந்து நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள். என்ன நடந்தாலும் மனைவி எவ்வளவு உணர்ச்சிவயப்பட்டாலும் கல்லைப் போலிருங்கள். குழந்தை, குளவி எதைப் பற்றி அக்கறை இல்லாததைப் போல நடியுங்கள். அடுத்த கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவதாக, வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி அவரை வெறியேற்றலாம் என நினைத்து எதையாவது மொக்கையாகப் பண்ணி சொதப்பாதீர்கள். அது பேரத்தில் உங்கள் தரப்பை பலவீனமாக்கும்.
9. உங்கள் தரப்பு நிதி ஆதார ஆவணங்களைத் தாக்கல் பண்ணும்போது உங்களுக்கு வேலை இல்லை, வணிகமோ ப்ரீலேன்ஸோ போதுமானதாக இல்லை, கடனில் இருப்பதாகச் சொல்லுங்கள். கடனுள்ளதாக பொய் ஆதாரம் தயார் பண்ணுங்கள். எதிர்த்தரப்பு வக்கீலிடமும் இதை வலியுறுத்துங்கள். நம்ப மாட்டார்கள். ஆனாலும் சொல்லுங்கள்.
10. உங்களைப் போன்றே அவர்களுக்கும் இந்த நடைமுறை அலுப்பாகத்தான் இருக்கும். நேரம் செல்லச்செல்ல பேரத்தொகை நிச்சயமாகக் குறையும்.
11. நடுவே அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேச முயலாதீர்கள். ஒரு வாடகை வீட்டு ஓனரிடம் அட்வான்ஸ் தொகைக்கு பேரம் பேசுவதைப் போன்றே கையாளுங்கள். வீட்டுக்குச் செல்லும்வரை அவருக்கும் உங்களுக்கும் எவ்வித பந்தமோ பிணைப்போ இல்லையென்பதைப் போல உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வழக்கைத் தவிர வேறு எந்த இணைப்புப் பாலமும் இருக்கக் கூடாது. (அவரும் இப்படித்தான் உங்களைக் கையாள்வார் என்பது வேறு விசயம். பெரும்பாலான பெண்களுக்கு இயல்பிலேயே சாமர்த்தியம் ஆண்களைவிட அதிகம்.)
12. யார் என்ன சொல்லிச் சீண்டினாலும் கோபம், கொந்தளிப்பு இன்றி நடைமுறைப் பயனை மட்டும் பாருங்கள். விவாகரத்துக் கோரும் மனுவில் உங்களையும் உங்கள் பெற்றோரையும் சகோதர சகோதரியையும் பற்றி கேவலமாக எழுதியிருப்பார்கள். அந்த ஆவணம் ஒரு டெம்பிளேட் நகல். உங்களிடம் உள்ள அதே ஆவணமே பல லட்சம் ஆண்கள் கையிலும் இருக்கும் என நினைவு கொள்ளுங்கள். அதன் நோக்கம் உங்களை உளவியல் ரீதியாக உருக்குலைய வைப்பது. அதைப் படிக்காதீர்கள்.
13. அதே போல, வழக்குக் காலத்தில் புதிய வண்டி, புதிய ஆடைகள் வாங்கி தம்பட்டம் அடிக்காதீர்கள். பேரம் படிவதே உங்கள் இலக்கு.
14. மனைவி அல்லது அவரது தரப்பினர் முன்னிலையில் எதிர்க்கட்சி வக்கீலிடம் பேசாதீர்கள். அவரது அலுவலகத்துக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். ஊரில் இல்லையென்று தள்ளிப் போடுங்கள். சண்டையை வளர்ப்பதே உத்தேசமாக இருக்கும். சிக்காதீர்கள். தனியாக எதிர்க்கட்சி வக்கீலிடம் பொதுவிடத்தில் பேசுங்கள். பேரம் படிவதே உங்கள் இலக்கு.
15. நீங்கள் தற்போது பூஜ்யம் என்றாலும் எதிர்த்தரப்பிடம் செட்டில்மென்றாக ஒன்றுமே தர முடியாது எனச் சொல்லாதீர்கள். சந்தையில் எப்படி ஒரு பொருளை வாங்க எப்படி ஒன்றுமே தராமல் முடியாதோ அதே போலத்தான் விவாகரத்தும். சில நேரங்கள் மனைவி தரப்பு பணமே வேண்டாம், விவாகரத்து போதும் என்பார்கள். எதாவது அவசரமாக இருக்கும். ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்தி ஒப்புக் கொள்ளக் கூடாது. எதாவது ஒரு நியாயமான தொகையைக் கொடுங்கள். அதை நீங்கள் சிரமப்பட்டு கடன் வாங்கித் தருவதாகப் பதிவு பண்ணுங்கள். நம்ப மாட்டார்கள். ஆனால் திரும்பத்திரும்பச் சொல்லுங்கள். அவர்கள் கேட்கிற தொகைக்கு கால் வாசியோ அதைவிடக் குறைவாகவோ கொடுங்கள். பதிவுப் பத்திரத்தில் இதை ஒரு ஆவணமாக எழுதி அவர்களை ஒப்பமிட வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இப்போது ஒன்றும் கொடுக்காவிட்டால் பிறகு அவர்கள் நீதிமன்றத்துக்கு வருவார்கள், பெரிய தொகையைக் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். இப்போதே முடித்துக் கொள்வது நல்லது.
16. குழந்தை உள்ளவர்கள் அவரைப் பார்க்கத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விவகாரத்துக்குப் பின்னர் அதைச் செய்வதே நல்லது. இல்லாவிட்டால் தொகையை அதிகரிப்பார்கள். தனியாக விண்ணப்பிக்கும் போது நிச்சயமாக திரும்பவும் பணம் கேட்க வாய்ப்புள்ளது. கேட்டால் கொடுத்து விட வேண்டியதுதான் - இப்போது உங்களுக்கு நல்ல வேலையும் வீடும் உள்ளதாகக் காட்டினால்தான் குழந்தையைப் பின்னர் உங்களுடன் அழைத்துச் சென்று வீட்டில் சில நாட்கள் வைத்துக் கொள்ள அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் அதே பஞ்சப்பாட்டைப் பாடிக்கொண்டு குழந்தையை மனைவியின் இடத்தில் சென்று சந்திக்கக் கிடைக்கும் உத்தரவை மட்டும் பயன்படுத்தலாம்.
17. குடும்ப நல நீதிமன்றத்தில் வக்கீல்களும் நீதிபதிகளும் அதிகாரமற்றவர்களே. நீங்கள் விதிமுறைச் சரியாகப் பின்பற்றி விளையாடினால் அவர்களால் உங்களை ஒன்றுமே பண்ண முடியாது. ஆனாலும் அங்குள்ள நடைமுறைகளைப் பார்க்க ஆரம்பத்தில் பயமாக இருக்கும். வக்கீல்களின் தோரணையே கொக்கி குமாரைப் போலத்தான் இருக்கும். பயப்படாதீர்கள். தனியாக இருக்கும்போது நினைத்துச் சிரித்துக் கொள்ளுங்கள். நீதிபதி பாரபட்சம் காட்டுவார். அது அவர்கள் தொழில் தர்மம். கோபப்படாதீர்கள். அது ஒரு அரசு அலுவலகம், நிதிபதி ஒரு அதிகாரி, வக்கீல்கள் முகவர்கள், செட்டில்மெண்ட் லஞ்சப் பணம் என நினைத்துக் கொள்ளுங்கள். நியாயம் நீதியை எல்லாம் அங்கு தேடாதீர்கள்.
கருத்துகள்