முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடி மன்னன்


 

இந்த சுபாஷ் சந்திரா எப்படி 22,000 கோடியை யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற்று அது தள்ளுபடி செய்யப்பட்டு அதை வைத்து ஒரு லாபம் ஈட்டியிருக்கிறார் என நேற்று தேடிப் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. கொயிங்கா குடும்பம் தானிய வியாபாரிகள். நீண்ட காலமாக அப்படித்தான் இருந்தார்கள். சுபாஷ் சந்திரா வந்த பின்னர்தான் உற்பத்தி, ஊடகம், டிவி எனப் பெரும் வளர்ச்சி அடைகிறார்கள். அதிலும் அவர் நிதியைப் பெற்றதிலும் கடனை வாங்கி தன் நிறுவனங்களுக்குள் சுற்ற விட்டதிலும் பல ஊழல்கள் பண்ணியுள்ளார். அவர் மட்டுமல்ல மேலும் சில பெரும் கார்ப்பரேட்டுகளின் தலைமையில் உள்ள குடும்பங்கள் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் சந்திரா விசயத்தில் ஒரு தனித்துவம் இவர் பத்து பதினைந்து கம்பெனிகளை எஸல் எனும் பெயரில் ஆரம்பித்து அவற்றுக்குக் கடன் கொடுக்க தானே உத்தரவாதமளிப்பதாக ஒப்பமிட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் இவ்வளவு ஆயிரம் கோடிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு இவரிடம் சொத்தோ பணமோ இல்லை. இதை விசாரிக்காமல் அல்லது பொருட்படுத்தாமல் கடனை அள்ளிக் கொடுத்ததுதான் மோசடியின் ஆரம்பம். ஏனென்றால் வங்கியின் நிர்வாகிகளுக்கு இதில் ஏதோ ஒரு லாபம் இருந்திருக்கிறது. இவர் பாஜகவுக்கு பயங்கர கூஜாவாக இருந்ததால் வங்கிகளுக்கும் நம்பிக்கை பிறந்தது. இப்படி ஒரு வஞ்சகர் கூட்டம் தோன்றித் திருடியிருக்கிறார்கள். இப்போது அவர்களே எட்டாயிரம் கோடிக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டாம், ரத்து பண்ணலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். எல்லாம் மக்கள் பணம்.

சந்திரா என்ன செய்கிறார் என்றால் ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனிக்கு கடன் கொடுத்ததாகவும், அக்கம்பெனி இன்னொரு கம்பெனியில் முதலீடு பண்ணுவதாகவும் ஆவணங்களில் கணக்குக் காட்டுகிறார். இந்தப் பரிவர்த்தனையின் சங்கிலியில் பணம் எங்கோ நட்டமாகி மறைந்து விடுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கடன் கொடுத்த, வாங்கிய, செலவழித்த நிறுவனங்கள் எல்லாமே சந்திராவுடையதே. அதாவது இவற்றின் அதிகப் பங்குகள் கொயிங்கா குடும்பத்தினரிடமே உள்ளன.
இதையே நீங்கள் செய்தால் எப்படி இருக்கும் என யோசிங்கள்: உங்கள் நண்பரின் கம்பெனி பத்து கோடி கடன் வாங்க நீங்கள் உத்தரவாதம் அளிக்கிறீர்கள். இந்த நண்பர் அப்பணத்தை இன்னொரு நிறுவனத்திடம் கொடுத்து முதலீடு பண்ணிட அது நட்டமாகிறது. இப்போது நீங்கள் என்னிடம் பணமில்லைங்க என வங்கியிடம் கையை விரித்து விடுகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த மூன்று நிறுவனங்களுமே உங்களுடையதுதான். இதை ஒரு குழந்தையே கண்டுபிடித்துவிடும். உங்களைத் தூக்கி உள்ளே வைப்பார்கள். ஆனால் நீங்கள் வங்கி நிர்வாகம், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாரிடமும் ஒரு மறைமுக ஒப்பந்தம் போட்டு பல ஆயிரம் கோடிகளை வாங்கி விகிதம் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு மிச்சத்தை முழுங்கிவிட்டால் உங்களை உள்ளே வைக்க மாட்டார்கள். ராஜ்ய சபா எம்.பி ஆகிவிடுவார்கள். ஊரெல்லாம் போய் "நான் கடன் வாங்கவில்லை, தெரியாமல் உத்தரவாதம் மட்டுமே கொடுத்தேன்" என்று கூலாகச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பத்திரிகைகள் இதை அப்படியே "எஸல் நிறுவனங்களுக்காக உத்தரவாதம் அளித்து சந்திரா மாட்டிக் கொண்டார்" என்று கூச்சமே இல்லாமல் எழுதுவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...