பொதுவாக தவெக அரசு குற்றம் செய்தால் ஓராண்டு சலுகை கொடுங்கள் என 'நடுநிலை' ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அமைச்சர் ஆனந்தோ 35 ஆண்டு சலுகை கேட்கிறார்.
அமைச்சர் ஆனந்திடம் அவரது கட்சிப் பெண்கள் சென்று தவெக நிர்வாகிகள் தம்மைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதாகச் சொன்னால் அவர் "நீ சொன்னதுக்கு அவருக்கு எதிரா ஆக்ஷன் எடுக்க முடியாதும்மா. அவர் 35 வருசமா கட்சியில இருக்கிறாரு." இதைத்தான் சில எம்.எல்.ஏக்களைப் பற்றியும் அவர் மேடைகளில் சொல்கிறார். கட்சி ஆரம்பிச்சே ரெண்டு வருசம்தானே ஆகுது எனக் கேட்டால் ரசிகர் மன்றமே கட்சிதான் என்கிறார். அதாவது அவர் மனதில் தவெக ஒரு கட்சியே அல்ல. இவ்விசயத்தில் அவர் நேர்மையாக இருக்கிறார் - உண்மையிலே தவெக ஒரு கட்சியே அல்லவென்றுதான் அதில் சிறிது காலம் இருந்து வெளிவந்தவர்களும் சொல்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றால் எப்படி நியாயமாகும்? ஒருவர் 35 வருடங்களாக ஒரு அலுவலகத்தில் பணி செய்கிறார் என்பதால் அவர் ஒரு பாலியல் குற்றமிழைத்தால் நடவடிக்கை இல்லை என எந்த ஊர் சட்டமும் சொல்லவில்லை. ரசிகர் மன்றமோ, ஆன்மீக அமைப்போ எதுவென்றாலும் தலைமையும் நடைமுறையும் விதிமுறைகளும் உண்டெனில் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். எனில் 35 வருடங்கள் அனுபவம் உள்ளதால் நடவடிக்கை கிடையாது என்பதன் உண்மையான பொருள்தான் என்ன?
தவெகவில் ஏகப்பட்ட நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் உள்ளன. நடவடிக்கை எடுப்பதாக ஆனந்த் முடிவெடுத்தால் பல தலைகள் உருளும். அது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட பிற பெண்களும் புகார் அளிக்க முன்வருவார்கள். அதற்கென்ன எல்லார் மீதும் விசாரித்து நியாயமிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என நீங்கள் கேட்கலாம். பிரச்சினை இவர்களில் பலரிடமும் ஆனந்த் பணம் வாங்கித்தான் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார் என புகார் உள்ளது. பதவியில் இருந்து தூக்கினால் அவர்கள் பணத்தையும் தானே திரும்பக் கேட்பார்கள்? இதனால்தான் விஜய்யும் தன் நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களைக் கேட்டதாகவே பாவிப்பதில்லை. அவருக்கும் இந்த பண விவகாரம் தெரியும் போல.
அடுத்து, தவெகவில் முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளில் பெண்கள் இல்லை. பொறுப்பிலுள்ள ஆண்களும் ஏற்கனவே நிர்வாக அனுபவம் பெற்றவர்கள் அல்லர். அவர்கள் வட்டிக்கு விடுவோராகவும், பிளாக் டிக்கெட் விற்பவர்களாகவும், அல்லது வெட்டியாக திரிபவர்களாகவும் இருந்து திடீர்ப் பதவி பெற்றவர்கள். உழைத்து போராடி அனுபவம் பெற்று பதவிக்கு வந்தவர்கள் அல்லர். ஆகையால் அவர்களுக்கு அதன் அருமை தெரியவில்லை. விஜய்யுடன் செல்பி எடுத்துத் தருகிறேன். பதவி வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி பல பெண்களை ஏமாற்றுகிறார்கள். கட்சிக்குள் அதிக எண்ணிக்கையில் பெண் நிர்வாகிகளை விஜய் நியமித்து நிர்வாகிகளுக்கு நேர்முகம், உட்கட்ட விசாரணை போன்ற நடைமுறைகளை உருவாக்கியிருந்தால் இம்மாதிரி கழிசடைகள் நிறைந்திருக்க மாட்டார்கள். இது ஒரு திடீர்க் கட்சி என்பதால் கிடைத்தவர்களை எல்லாம் பிடித்து பணம் வசூலித்து பதவி போட்டுக் கொடுத்து விட்டார்கள். இப்போது குற்றச்சாட்டு வரும்போது "இருந்தால் இரு" என்று பெண்களிடம் சொல்கிறார்கள். தாம் செய்வது சட்டவிரோதம் என்று கூட தறுதலை தலைவர்களுக்குத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒருநாள் தர்ம அடி வாங்கப் போகிறார்கள்.
இதில் பெண்கள் அமைப்பினர் ஏன் தலையிடவில்லை என்பது எனக்கு இதுவரையிலும் புரியவில்லை?
கருத்துகள்