முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காப்காவின் நாட்குறிப்புகள்



அங்கங்கே புரட்டிப் படிக்க ஏற்ற புத்தகம். காப்காவின் நாவல்கள், சிறுகதைகளைவிட வாசிக்க எளியவை அவரது நாட்குறிப்புகள். படித்துக் கொண்டு வந்தபோது சில விசயங்கள் ஆச்சரியப்படுத்தின:

1) தொனி - இதில் வழக்கமான காப்காத்தனமான இருண்மை, அச்சம், நிலைகுலைவில் இருந்து ஒளியை நோக்கிச் செல்கிறவரின் சுழலில் சிக்கிக் கொண்ட குழப்பம், அவநம்பிக்கை இல்லை. உருவகத்தன்மை குறைவு. விளையாட்டுத்தனம், பகடி, காமம் பீறிடும் இடங்கள், ஒழுங்கீனம், மீறல் சார்ந்த அசூயை, பிரிட்டீஷ் படைப்பாளிகளிடம் நாம் காண்கிற அடங்கின தொனியிலான கேலி, கிண்டல், மிகை மீதான பகடி உண்டு. இதனாலே இது நிஜமாகவே காப்காதானா எனஆரம்பத்தில் தோன்றும். ஆனால் போகப் போக இந்த எண்ணம் மாறும்.

2) அந்நியமாதல் - காப்கா தன் நாவல்களில் அலுவலகம், நீதிமன்றம், குடும்பம், அதிகாரத்துவ அமைப்புகள் ஆகிய நிறுவனங்களிடம் நவீன மனிதர் அந்நியமாவதை, அதன் நகைச்சுவையை, அவலத்தைப் பேசினார். இக்குறிப்புகளில் பெரும்பாலும் தனிநபர்களிடத்து அவர் அந்நியமாக உணரும் பல சந்தர்ப்பங்கள் வருகின்றன. குடும்பச் சிக்கல்கள், மனைவியுடன் பாலுறவு, நண்பர்களின் நடத்தை, உணவகத்தில் காண நேரும் பருத்த உடல் கொண்ட பெண், அழகால் சிறந்த தன் தோழியை விட சாமான்ய தோற்றம் கொண்டிருக்கிற பெண்ணின் கவர்ச்சி, பூங்கா நடைபாதையில் வினோதமாக விசிலடிக்கும் முதிய மனிதர் என விதவிதமான அனுபவங்களில் அவர் ஈடுபடுவதோ உணர்வுவயப்படுவதோ கருத்துருவாக்குவதோ இல்லை. அவை அர்த்தமற்றவை, உண்மையில் இருந்து நம்மை அந்நியப்படுத்துபவை என நம்புகிறார் என நினைக்கிறேன். இவ்வாறு தாம் அந்நியப்பட்டிருக்கிறோம் என நவீன மனிதருக்குத் தெரியாததே அவர்களை வேடிக்கையானவர்களாக்குகிறது என அவர் நினைக்கிறார். இப்படி அந்நியமாதலின் புறவயமான சித்திரங்கள் இந்த குறிப்புகளில் வருகின்றன.

3) மொழி - மிக லாவகமான மொழிநடை தெரிகிறது. அதாவது இக்குறிப்புகளை அவர் ஒரு வாசகராக ரசித்தபடி எழுதியிருக்கிறார். நாட்குறிப்பை இரவு தூங்கும் முன்பு அலட்சியமாக எழுதுகிறவராக அல்லாமல் ஒரு எழுத்தாளராக தன்னைக் கருதி எழுதியிருக்கிறார் என்பது வாக்கிய அமைப்பிலும் அணிகளின் பயன்பாட்டிலும் தெரிகிறது. இதிலுள்ள சிலாக்கியமான போக்கை அவரது நாவல்களிலும் பார்க்க முடியாது.

4) அந்தரங்கத்தன்மை - குடும்பமாக ஒரு பெண்ணுடன் இருப்பதற்கு நாம் கொடுக்கிற தண்டனை பாலுறவு கொள்வதுதான் என ஒரு வாக்கியத்தை எழுதுகிறார். அதைப் படித்து அதிர்ந்து போனேன். அவர் பாலுறவைத் தன்னளவில் எதிர்க்கவோ கீழாக நினைக்கவோ இல்லையென்றாலும் குடும்ப உறவாக அதில் வரும் அதிகாரத்துவம், நிபந்தனைகளைக் குறித்துக் கவலைப்படுகிறார். குடும்பம் அலுவலகத்தின் நீட்சியாகும்போது இரவென்பது செயற்திறன் மதிப்பீட்டுக்கான வேளையாகிறது. பாலுறவு அப்போது ஒரு தண்டனையாகிறது. மீண்டும் சொல்கிறேன் - மேற்சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் அவ்வாறாகிறது. மேலும், பாலுறவு சார்ந்த உறவுகளில் நாம் நமது அந்தரங்கத்தைத்தான் விலையாகக் கொடுக்கிறோம் என்பது நகைமுரணானது. இதுவும் காப்காவைத் தொந்தரவு பண்ணுகிறது என நினைக்கிறேன்.

5) அம்மணம், நோய்மை, சுயதணிக்கை - தன்னுடல் குறித்து மக்களுக்கு உள்ள பிரக்ஞை அவர்களைத் சுயதணிக்கையில் ஈடுபட வைக்கிறது. அவர்கள் தம் உடலை வருத்தியும் சேஷ்டைகளில் ஈடுபடுத்தியும் தாம் எவ்வாறு இருக்கிறோம் எனக் கண்காணிக்கிறார்கள்; அதைப் பிறருக்கும் காட்டி தம்மை மதிப்பிட வைக்கிறார்கள். இவ்வாறு உடலை ஒரு பொம்மையைப் போல அசைத்து உள்ளும் (சுயம்) புறமுமாக (சமூகம்) மதிப்பீடு செய்கிறார்கள். மனிதர்களின் துன்பம் அதிகமாகும்போதெல்லாம் இத்தணிக்கை அதிகப்படுகிறது. உதாரணமாக, தன் அப்பா கடனில் சிக்கி பொருளாதார ரீதியாகத் துன்பப்படும்போது அவர் நோய்வாய்ப்பட்டு தன் வலியைப் பல விதங்களில் வெளிப்படுத்துவதை காப்கா சித்தரிக்கிறார். அக்குறிப்பின் முடிவில் "இன்று அம்மா சென்று (ஒரு நபரின் பெயரைச் சொல்லி) அவரிடம் கெஞ்சப் போகிறார்" என எழுதுகிறார். அப்பாவின் நோய்மையும் அம்மாவின் இந்த கௌரவ நிலையிறக்கமும் தொடர்புள்ளவை. இதுவே அவரை மனிதர்களின் அம்மணம் குறித்து அதிகம் சிந்திக்க வைக்கிறது - அம்மண உடல் அதிகாரத்தின் முன்பான மனிதரின் சரணடைதலாக உள்ளது. ஏனென்றால் உடல் ஒரு குறியீடு. நான் இதுதான், நான் வெறும் சதைத்திரட்சி, நான் ஒரு வடிவம், இதற்கு மேல் ஒன்றுமில்லை, பார்த்துக் கொள் எனும் கூற்றே அம்மண உடல். அதாவது ஆன்மாவில் உள்ளார்ந்து நம்பும் காப்காவுக்கு உடலின் அம்மணமும் அதன் நிலைமாற்றமும் அதைக் காட்டி மனிதர்கள் அடையும் துன்பமும் மகிழ்ச்சியும் ஒரு கைதியின் தப்பித்தல் முயற்சிகளே.
பாலியல் கவர்ச்சியையும் அவரால் தனிமனிதரின் உடல் குறித்த தணிக்கை நடவடிக்கையாக அன்றி வேறுவிதமாகப் பார்க்க முடிவதில்லை. என்னதான் பெண்களை அவர் ரசித்தாலும் முடிவில் இவர்கள் பார்க்கப்படும் பொருட்கள், தான் பார்க்கிற பிரக்ஞை, இவர்களுடன் தன் ஆன்மாவால் பேச இயலாது, தான் உடலழகின் ஒரு மதிப்பீட்டுக் கருவியே, இரு தரப்புமே அந்நியப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு அவருக்கு வந்து விடுகிறது. அழகுக்கும் அம்மணத்துக்கும் சுதந்திரத்துக்கும் அதிகாரத்துக்குமான சிக்கலான உறவுமுறையை அவர் சிந்தித்திருக்கிறார். நேரடியாக அல்ல, தன் விவரணைகளின் வழியே.

6) நிரந்தரக் குழந்தைமை - காப்காவுக்குள் ஒரு நிரந்தரக் குழந்தை என்றும் இருந்திருக்கிறார். சமூகமானது அலுவலகத்தின் குடும்பத்தின் நீட்சியாக இருந்து பல்வேறு மனிதரைத் தொடர்ந்து கண்காணித்து மதிப்பிட்டு தன் விதிமுறைகளின் பரிசீலனைக்கு உட்படுத்துகிறது. அதாவது காப்கா வீட்டை விட்டு வேலைக்காக வெளிக்கிளம்பும் போதும் பின்னரும் குடும்பத்தினுள்ளேதான் இருக்கிறார். குடும்பத்தில் அவர் எப்போதும் ஒரு மகன் அல்லது சகோதரனாக இருக்கிறார். குடும்பம் தொடர்ச்சியான சுய-தணிக்கையிலும் பரஸ்பர தணிக்கையிலும் ஈடுபட்டுத் தன்னைத் தக்கவைக்கிறது. வெளியிலும் அப்படித்தான் நிகழ்கிறது. அவர் மனதளவில் இதை ஏற்றுக் கொண்டு இதைத் தனக்குள் பகடி செய்யப் பழகிக் கொள்கிறார். இதை ஒரு குழந்தைக்கும் பதின்வயதுக்கும் இடைப்பட்ட மனநிலை என்றும் சொல்லலாம். அதாவது அவர் வளர்ந்தவரான பின்னரும் ஒரு குழந்தையின் மனநிலைக்குள் இருக்கவே விரும்புகிறார். வீட்டின் வாசலைத் தாண்டாமல் கதவைப் பற்றிக் கொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டே ஒருவர் நிற்பதைப் போல அவர் வாழ்க்கையில் இருக்கிறார். காப்காவின் குழந்தைமை அப்பழுக்கற்ற ரொமாண்டிக்கான குழந்தைமை அல்ல. அது ஒரு அரசியல் தேர்வு.

தனிமை - இவ்வளவு பேர்களை அவர் தினம் தினம் பார்க்கிறார். உரையாடியிருக்கிறார். நண்பர்கள், அலுவலக வாழ்க்கை என பிஸியாக இருந்திருக்கிறார். ஆனாலும் அவர் யாருடனும் இல்லாமல் தனித்திருக்கிற ஒரு உணர்வே இக்குறிப்புகளில் வெளிப்படுகிறது. இதைப் படிக்கையில் நான் பெரும் தொந்தரவை உணர்ந்தேன். எப்படி ஒருவரால் தான் நினைக்கிற எதையும் பேசுகிற, வெளிப்படுத்துகிற ஒரு வெளியின்றி இருக்க முடியும்? இகேள்வி என் சிந்தனையைக் காப்கா சித்தரிக்கிற பிற மனிதர்களிடம் இட்டுச் சென்றது. அவர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள். எல்லாருமே பேசிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால் யாராலும் இதயத்தில் இருந்து வெளிப்படுத்த முடிவதில்லை. அவர்கள் தமக்குள்ளே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வெளிப்பேச்சு ஒரு நிகழ்த்துதல் மட்டுமே. அவர்களுக்கு தம்மால் ஒருபோதும் தம்மை வெளிப்படுத்த முடியாது எனத் தெரியும். காப்காவுக்கும் இது தெரியும். இவ்வளவு சலசலப்புகளுக்கும், இரைச்சலுக்கும் மத்தியில் எல்லாரும் தனியாக இருப்பது இப்படித்தான்.

நவீன வாழ்க்கை ஒரு பெரிய சிறையென்றும், நாம் தினம் தினம் நம் முயற்சிகளால் இதைக் கட்டமைத்து, கண்காணித்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம் என நினைக்கவே பயமாக இருக்கிறது. காப்காவின் அடிப்படையான பிரச்சினை வாழ்க்கையின் உண்மையற்ற தன்மைதான்.
வாழ்க்கையில் அசலாக உணர்வதெப்படி (authenticity) என ஹைடெக்கர் பேசியது இச்சந்தர்ப்பதில் பேசத்தக்கது எனத் தோன்றுகிறது. காப்காவின் உலகில், அல்லது நவீன உலகில், 'அங்கே இருத்தல்' எனும் da sein இல்லை. ஒவ்வொரு கணமும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறோம், சாகப் போகிறோம், மரணத்தின் நிழலில் இருக்கிறோம் எனும் உணர்வு, பதற்றம், நம்மைப் போலியாக்கி நம்மை அடுத்தவர்களுக்கு ஏற்ப நிகழ்த்தி நிரந்தரமாக முயல வைக்கிறது. காப்கா சித்தரிக்கும் அபத்தம் இதில் இருந்து வருவதும்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...