
1) தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்துக்கும், பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத்துக்கும் எதிராகப் போராட்டம் பண்ணுகிறீர்கள். அரசு உங்களைத் துளியும் பொருட்படுத்துவதில்லை. அதே நேரம், நீங்கள் ஆதரவைத் திரும்ப பெறுவோம், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் எனச் சொன்னால் இறங்கி வருவார்கள். அதைச் செய்யாமல் நீங்கள் ஏன் பம்முகிறீர்கள்?
2) அரசின் முடிவில் தலையிடக் கூடாது, ஆனால் அறிவுறுத்துவோம், விமர்சிப்போம், போராடுவோம் என்றால் என்ன மாதிரி ஆதரவு நடவடிக்கை இது?
3) உங்கள் நோக்கம் பெயருக்குப் போராடுவதா அல்லது அரசின் மீது அழுத்தம் போட்டு மக்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதா? பின்னது எனில் உங்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டை நீங்கள் ஏன் எடுப்பதில்லை?
4) பாஜகவின் ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் தவெக அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்காரர் ஒருவரே சட்டத்துறை அமைச்சராக உள்ளார். பாஜகவை விமர்சித்து ஒரு சொல்லைச் சொல்லக் கூட தவெகவினர் தம் கூட்டணிக் கட்சி அமைச்சரை அனுமதிப்பதில்லை. சபாநாயகர் உடனே நேரடியாகத் தடை போடுகிறார். அமித் ஷா வந்ததும் விஜய் ஓடிப் போய் பணிகிறார். பாஜகவின் திட்டங்களை இங்கே ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். நேரடியாக கிறிஸ்துவ போதனையை, மதநூல்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதன் வழியாக மதவாதத்தை தவெகவினர் இயல்பாக்கப் பார்க்கிறார்கள். இதை பாஜக பேச்சாளர்கள் யுடியூபில் ஆதரித்து ஏன் இந்து மதக் குறியீடுகளை பயன்படுத்தக் கூடாது எனக் கேட்கிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் மதத் தலைவர்களாக அமைச்சர்களை முன்வைக்கிற பாஜகவின் அரசியலுக்கு தவெக அடியெடுத்துக் கொடுக்கிறது. நாங்கள் பாஜகவுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார் முதல்வர் விஜய். நீங்கள் பாஜகவைத் தடுக்க தவெகவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னால் நேரெதிராக தவெக பாஜகவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து அவர்களுடைய மதவாதக் கலாசாரத்தைப் பரப்பும் வேலையைப் பார்க்கிறார்கள். அதாவது நீங்கள் சொன்னது ஒன்று, அங்கே நடப்பதோ மற்றொன்று - நீங்கள் வெளியில் இருந்து ஒரு பாஜக பிராக்ஸி அரசை இங்கே ஆதரிக்கிறீர்கள்? உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன? பாஜகவைக் கொண்டு வருவதா, கொண்டு வருவோரைக் கொண்டு வருவதா?
5) உங்கள் நோக்கம் பாஜகவின் ஆளுநர் ஆட்சியைத் தடுப்பதா தவெக அரசை, அது என்ன செய்தாலும் கூட, ஒரு போலி பாஜகவாக, முதலீட்டிய கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சியாக இருந்தாலும் கூடக் காப்பாற்றுவதா?
6) "எங்களால் தவெக அரசுக்கு எந்த பாதிப்பும் வராது" என்கிறீர்கள். இந்த அரசின் மீது உங்களுக்கு எந்த மாறுபாடும் இல்லை, இது ஒரு சிறந்த அரசு என நீங்கள் நினைத்தால் ஏன் தனித்துப் போட்டியிட வேண்டும்? ஆகையால் இடைத்தேர்தலில் நீங்கள் தனித்துப் போட்டியிடுவதே தவெகவுக்காக எதிர்க்கட்சியினர் வாக்குகளைப் பிரிப்பதற்குத்தானோ எனும் ஐயம் எழுகிறது. உங்கள் உண்மையான நோக்கம்தான் என்ன?
7) இதுவரைக்கும் நீங்கள் இந்த அரசை விமர்சிக்கிறீர்கள் எனினும் உங்கள் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தாமல் வலிக்காமல் அதைச் செய்கிறீர்கள். அமைச்சர் ராஜ்மோகனும் "தோழர்கள் மூத்தவர்கள், அவர்கள் விமர்சனத்தைக் கேட்டுக் கொள்கிறோம்" என்கிறார். அதற்கு அவர்கள் வயதானவர்கள், ஒரு பக்கமாக இருந்து பேசட்டும், நாங்கள் இன்னொரு பக்கம் எங்கள் வேலையைப் பார்க்கிறோம், அவர்கள் சொல்வதைக் கேட்போம், ஆனால் பொருட்படுத்த மாட்டோம் எனப் பொருள். உங்களுக்கு இதைக் கேட்க அவமானமாக இல்லையா? ஒரு இடதுசாரி ஆதரவாளராக எனக்கு அவமானமாக இருக்கிறது!
9) ஆட்சி கவிழ்ந்து விடக் கூடாது, அதனாலே பொறுமை காக்கிறோம் எனக் கூறுகிறீர்கள். நிஜத்தில் அது ஒருபோதும் நடக்காது என உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் பாஜகவின் மறைமுக ஆதரவுடன் தவெக அதிமுக எம்.எல்.ஏக்களைத் தம் பக்கம் ஆதரவு தர வைத்து ஆட்சியைக் காப்பாற்றுவார்கள். தவெக மீது பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்த முதலிட்டு சக்திகள் அது கவிழ்வதை விரும்ப மாட்டார்கள் (சிறுபான்மை என்.ஜி.ஓக்கள் வழியாகக் கொண்டு வரப்பட்ட கறுப்புப் பணம் கூட இதில் உள்ளதாக ஒரு வதந்தி உள்ளது.) பாஜகவும் தமக்கு இணக்கமான இந்த ஆட்சியை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டார்கள். ஆக நீங்கள் எதற்காக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறீர்கள்?
10) அதிமுக எம்.எல்.ஏக்களைக் கட்சித் தாவல் பண்ண வைத்து கட்சிக்கு ஆதரவு நாடினால் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக நீங்கள் எச்சரிக்கிறீர்கள். ஏன் மக்கள் பிரச்சினைகளுக்காக இதே மிரட்டலை நீங்கள் விடுப்பதில்லை? உங்கள் அக்கறை மக்களைக் காப்பாற்றுவதிலா அல்லது வெகவுக்கு ஆதரவு கொடுக்கும் உங்கள் 'ஆற்றலைக்' காப்பாற்றுவதிலா?
11) இடைத்தேர்தலில் தவெக வெல்லக் கூடாது, மெஜாரிட்டியை நெருங்கக் கூடாது என நீங்கள் நினைத்துப் போட்டியிடுவது மக்களுக்காகவா அல்லது உங்களது இந்த பேரம் பேசும் துருப்புச் சீட்டைக் காப்பாற்றவா? அல்லது வாக்குகளைப் பிரிக்கவா?
12) தவெகவுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவானது நீங்கள் பெற்றுள்ள சொற்ப இடங்கள் மற்றுமல்ல, அது தார்மீக ஆதரவும்தான். நீங்கள் இக்கட்சியை ஆதரித்துக் கொண்டே எதிர்த்துப் போராடும்போது மக்களுக்கு 'இந்த அரசு ஒன்றும் மோசமில்லை, தார்மீக நிலைப்பாட்டில் இருந்து வழுவதில்லை, ஏனெனில் இடதுசாரிகளே உடனிருக்கிறார்களே' எனும் பிரமையை ஏற்படுத்துகிறது. தார்மீக விரோதமான ஒரு கட்சிக்கு இப்படி ஒரு போலி அங்கீகாரத்தை நீங்கள் வழங்குவது உங்கள் கொள்கைக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?
கருத்துகள்