ஆட்சிக் கவிழ்ப்பையும் ஆளுநர் ஆட்சியையும் (அதாவது ஜனாதிபதி ஆட்சி) நான் கதையாடல்களாகக் கருதுவதற்கு முக்கிய காரணம் அவை சுடுகாட்டுப் பேய்க் கதைகளைப் போலிருப்பதனால்தான். யாரும் சுடுகாட்டுப் பேயைப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் யாரோ ஒருவர் பார்த்ததாக வைத்து எல்லாருமே மனதுக்குள் பார்த்துக் கொண்டு பயந்து கொண்டிருப்பார்கள். யாராவது அதை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டால் பயம் போய்விடும். பிரச்சினையே யாராலும் பார்க்க முடிவதில்லை என்பதே. நாம் கடைசியாக எப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை, ஆளுநர் ஆட்சியைப் பார்த்தோம்? யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் பிற மாநிலங்களில் என்ன நிகழ்கிறது எனக் கேளுங்கள். மணிப்பூரில் 2025இல் கலவரம் காரணமாக நடந்தது. மகாராஷ்டிராவில் 2019இல் பெரும்பான்மை கிடைக்காததால் மூன்று வாரங்கள் நடந்தது. ஜம்மூ காஷ்மீரில் அங்குள்ள வரலாற்றுச் சூழல் காரணமாக 2018-19இல் நடந்தது. உத்தராகண்டிலும் அருணாச்சல பிரதேசத்திலும் 2016இல் சொற்ப காலம்தான் நடந்தது. உச்சநீதிமன்ற S.R. Bommai v. Union of India (1994) தீர்ப்பு காரணமாக சட்டப்பிரிவு 356ஐப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை அமைத்து நடத்துவது இப்போது கடினமாகி உள்ளது. ஆகையால் இந்தியா முழுக்க ஆளுநர் ஆட்சியின் நிகழ்தகவு குறைந்து வருகிறது. அப்படியே அமைந்தாலும் சில வாரங்களில் தேர்தல் நடந்து அடுத்த ஆட்சி அமைகிறது.
தமிழ்நாட்டில் நான்கு முறைகள் (77, 80, 89, 91) கவிழ்க்கப்பட்டுள்ளன. மூன்று முறைகள் சட்டம் ஒழுங்கைக் காட்டி அராஜகமான முறையில். ஒரே ஒருமுறைதான் எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின் பெரும்பான்மை இல்லை எனக் கலைக்கப்பட்டது. அதுவும் 1994 தீர்ப்புக்குப் பின் அத்தகைய பயம் குறைந்துவிட்டது. இம்முறை தவெக பெரும்பான்மைக்கு வெகுநெருக்கத்தில் வந்தது. ஆக, அதைத் தவிர பிற கட்சிகள் ஆட்சி அமைப்பது கடினமே. இச்சூழலில் ஆளுநர் ஆட்சியும் வர முடியாது. ஏனென்றால் ஏற்கனவே சொன்னதைப் போல இன்று ஆளுநர்கள் ஆட்சியை அமைக்க விடத்தான் விரும்புவார்கள். அடுத்து, மறுதேர்தல் தவெகவுக்கு சாதகமாகப் போகக் கூடும் என எதிர்க்கட்சிகள் நம்புகிறார்கள். பாஜகவுக்கு மிகவும் இணக்கமான கட்சியாக தவெக உள்ளது. கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்ப்போம் எனச் சொன்னாலும் விஜய் பாஜகவைக் கண்டு அஞ்சுபவரே. ஆகையால் மறைமுகப் பேரங்களாலும் சில வினோதமான படிவத்தைச் சமர்ப்பிக்கிற காரணங்காலும் ஆட்சி அமைவதற்கு தாமதமான போது பாஜக சார்பு அலைவரிசைகளே அதைக் கண்டித்தன. அதாவது 'பாஜகவே' ஆளுநர் மீது அழுத்தம் போட்டது. பாஜக ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால் அவர்களுடைய பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு இங்கு கடும் எதிர்ப்பு வரும். ஆனால் விஜய் அதையே பல கவனத் திருப்பல் உத்திகளைக் கொண்டு செய்யும்போது மக்களின் எதிர்ப்பு ஒரு புள்ளியில் நிலைப்பதில்லை. ஒருவித குழப்பம் நிலவுகிறது. அதைக் கொண்டு இங்கு பல பாஜக சார்பு / மக்கள் விரோதச் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வர, முடிவுகளை எடுக்க முடியும். எப்படிப் பார்த்தாலும் மக்களின் ஆதரவு பெற்ற கட்சிதானே என ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சகித்துக் கொள்ளும். அதாவது ஆளுநர் ஆட்சியால் சாதிக்க முடியாதவற்றை பாஜகவால் சுலபத்தில் விஜய்யை வைத்துச் செய்ய முடியும்போது எதற்கு ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறார்கள்?
கடைசியாக இந்த ஆட்சி அமைய நிதி வழங்கிய கார்ப்பரேட்டுகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக அப்பணத்தைத் திரும்ப எடுக்கிறார்கள். அதனாலே கட்டணம் அதிகரிக்கிறது, ஊழல் நடக்கிறது, மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படுகிறது. இதை நீங்கள் ஆளுநர் ஆட்சி அமைந்தால் செய்ய முடியாது. அவரிடம் நீங்கள் நிதியளிக்கவில்லையே! ஆகையால் ஆளுநர் ஆட்சிச் சூழல் வராமல் முதலில் தடுப்பவர்கள் பெரும்பணக்காரர்களாகவே இருப்பர். இந்தியா முழுக்க இவர்களுக்குச் செல்வாக்கு இருக்கும்.
இவ்வளவு விசயங்கள் இருந்தும் ஆட்சி கலைந்துவிடும், இதோ இப்போது கலைந்துவிடும் எனும் அச்சத்தை ஒரு பக்கம் தவெக ஊடகங்களே கட்டி அமைத்தன. தம்மைப் பாதிக்கப்படுபவர் எனும் இடத்தை வைத்து இரக்கத்தை சம்பாதிக்க இது உதவியது. திமுக தரப்பை ஆட்சி நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம் என சொல்ல வைத்தது. தவெகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுக்கு இந்த அச்சம் தமது பேரங்களை, ஊழலை மறைக்க உதவின. எப்போதுமே பேய், பூதம் எனக் கவனத்தைக் கலைத்தால் மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். குறிப்பாக இடதுசாரிகளும் விசிகவும் இதை முக்கிய காரணமாக முன்வைத்தனர் (விசிக பின்னர் தேவைக்கு ஏற்ப காரணத்தை மாற்றிக் கொண்டே போனது.). திமுகவினர் தம் தொண்டர்களை உற்சாகப்படுத்த விரைவில் தேர்தல் என சில சமயங்களில் சொல்கிறார்கள். திமுக சார்பு யுடியூபர்கள் தம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த இத்தகைய கிளிக் பெய்ட் ஆட்சிக் கலைப்புத் தலைப்புகளை வைப்பார்கள். இப்போது இவையெல்லாம் ஒருவித விளையாட்டாகி விட்டன. யாரும் சீரியஸாக எடுப்பதில்லை. இடதுசாரிகளைத் தவிர. ஏனென்றால் அவர்கள் மட்டுமே கொள்கை ரீதியாக தவெகவை எதிர்க்கிற ஒரே கட்சி. ஏனென்றால் அவர்கள் தமக்கு எல்லாவிதங்களிலும் எதிரான தவெகவை வெளியில் இருந்து ஆதரிக்கிற முடிவை மேற்சொன்ன பூச்சாண்டிக் கதையைக் காட்டி எடுத்து தவெக மெல்ல மெல்ல வலுவடைய தாம் பலவீனப்பட்டுக் கொண்டே வருவதை உணர்ந்து வெளியேறவும் முடியாமல் ஆதரிக்கவும் இயலாமல் சிக்கிக் கொண்டார்கள்.
அடுத்தடுத்து வரப் போகிற இடைத்தேர்தல்களில் தவெக பெரும்பான்மையை நெருங்குவதும் கம்யூனிஸ்டுகளும் ஓரளவுக்கு விசிகவும் கூட்டணியில் பலமிழப்பதும் நிச்சயம். அப்பதற்றமே தவெக வென்றுவிடக் கூடாது என இப்போது இடதுசாரிகளைப் பிரார்த்திக்க வைக்கிறது என அரசியல் விமர்சகர்கள் சிலர் சொல்கிறார்கள்.
அதிகாரப் பகிர்வற்ற கூட்டணியால் கட்சிக்காரர்களுக்கும் லாபமில்லை, கொள்கை ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியில்லை. மேலும் இடதுசாரிகள் வெளியே இருந்து அவ்வப்போது போராடுவதால் முதல்வர் விஜய்க்கு கடும் எரிச்சல்தான் வரும். ஆக, இது ஒரு ஆரோக்கியமான உறவு அல்ல.
இதற்குப் பதிலாக இவர்கள் நடைமுறை சார்ந்து ஒரு முடிவெடுத்து (real politik) நேரடியாக அமைச்சர் பதவி பெற்று ஆதரவு கொடுத்திருந்தால் அதை வைத்து கட்சியை சிறிதேனும் பலப்படுத்தியிருக்க முடியும். ஆம், சிறிது பெயர் கெடும். அதேநேரம் அடுத்த தேர்தலில் சில இடங்களைக் கூடுதலாக வெல்லவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். நவீனப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டு அதில் குறுக்கீடுகள் செய்பவர்களாகத் தம்மைத் தகவமைத்திருக்கலாம். இது மக்களிடையே மீண்டும் நம்பிக்கையைப் பெறவும் தொழிற்சங்கப் போராட்டம், முதலாளித்துவ எதிர்ப்பு தாண்டி வளர்ச்சி, சமத்துவம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளை நோக்கி நகரவும் உதவியிருக்கும். அடுத்த தேர்தலுக்குப் பின் இன்னொரு கூட்டணி அமையும்போது அங்கும் அதிகாரப் பகிர்வு கோரிக்கை வைக்க ஏதுவாக இருந்திருக்கும் (விசிக இதைச் சரியாகச் செய்தது. இதை முழுமையாக விமர்சிக்க முடியாது). அல்லது கடுமையாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துக் களமாடி ஒரு விளிம்பு நிலைக் கட்சியாக அடுத்த தேர்தலை நோக்கிப் பயணிக்கலாம். எதோ ஒரு வடிவத்தில் (நேரடி அரசியல் பண்ணும், இன்றைய சமூகப் பொருளாதார நிபந்தனைகளுக்கு ஏற்பத் தகவமையும் கட்சி அல்லது கொள்கை அரசியல் பண்ணும் கடுமையான நிலைப்பாடுள்ள கட்சி) இருக்க வேண்டும். இரண்டுமாக இருப்பது, நடுவில் நிற்பதாக நடிப்பது முழுமையாக ஒரு எதிர்மறையான முடிவு. இதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
கருத்துகள்