ரசிக மனநிலை இன்று தமிழ்நாட்டு அரசியலைச் சாக்கடைக்குள் தள்ளிவிட்டதுதான். ஆனால் அதற்குத் தீர்வுதான் என்ன? அணில்கள், தறுதலைகள் என ரசிக மனநிலையைக் கண்டு அஞ்சி அதைப் பகடி செய்யாமல் அதனுடன் உரையாடலாம். அவர்களை உருவாக்கும் கட்டமைப்பைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் நான் தோழர் பல்லவியிடம் அவர் ஏன் சிறுவயதில் விஜய் ரசிகராக இருந்தார், பின்னர் எவ்வாறு திருந்தினார் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தெளிவாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். எனக்கு ஒரு ரசிகரின் உளவியலை, அவர் முன்னாள் ரசிகராக இருந்தாலும், தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் எனத் தோன்றுகிறது. அப்போதே தற்போதைய ரசிகர்களுடன் உரையாட முடியும். ஒவ்வொரு உரையாடலும் ஏதாவது ஒருவிதத்தில் பலனளிக்கும்.
உண்மையான பலன் என்பது சினிமா மோகம் அரசியலை விட்டு ஒழிவதுதான். அதற்கு ஒரு தீர்வு தமிழ்நாட்டில் வணிக சினிமாவுக்கு எதிராக ஒரு இயக்கம் தோன்றுவது. வங்க, மலையாள மொழிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த அத்தகைய இயக்கங்கள் ஏனோ தமிழில் நிகழவில்லை. இங்கு இடதுசாரி ஆதரவாளர்களும் மாஸ் சினிமா இயக்கத்துடன் கைகோத்தார்கள். அவர்கள் சினிமா எடுக்கவே விரும்பினார்கள். அவர்கள் மக்களின் சினிமாவை, எதிர்-ஹீரோ சினிமாவை எடுக்க முயலவோ முயன்று வெற்றி பெறவோ இல்லை. காங்கிரஸும், அதன் பிறகு திராவிட இயக்கமும் சமூகச் சீர்திருத்தவாதத்தில் தத்தமது கொள்கைப்படி செயல்பட்டனர். திராவிட இயக்கம் மூட நம்பிக்கைகளை ஒழிக்கப் பிரச்சாரம் பண்ணிவிட்டு அதனிடத்தில் நாடகங்களையும் பின்னர் சினிமாவையும் அரசியல் ரீதியாக முன்னெடுத்தது. அதன் வழியாக அது வணிக சினிமாவுக்கு ஒரு கலாச்சார, சமூக இடத்தைப் பெற்றுத் தந்தது. வணிக சினிமாவின் பிரச்சினை அது மனிதரைத் தம் பகுத்தறிவைப் பயன்படுத்த அனுமதிக்காது, செயலற்றவர்களாக்கும் என்பது. சினிமா சமூக மாற்றம் நிஜ சமூக மாற்றத்தைக் கொல்லும். சினிமா காதல் நிஜக் காதலைக் கொல்லும். சினிமா சாதி ஒழிப்பு நிஜத்தில் சாதிப் படிநிலையை வலுப்படுத்தும். திராவிட இயக்கம் செய்த தவறை எம்.ஜி.ஆர் தன் வழியில் பயன்படுத்தி ஒரு புது வகை சினிமாவை உருவாக்கினார். அவரிடம் இருந்து ரஜினி அதை இன்னொன்றாக்கினார், விஜய் ரஜினியைப் பின்பற்றி இப்போது முதல்வராகி இருக்கிறார். சினிமா மனநிலையை அரசியல் மனநிலையாக கிட்டத்தட்ட அவர் உருமாற்றி விட்டார். அதாவது வாக்களிப்பதை அவர் திரையரங்கில் டிக்கெட் எடுப்பதாகவும், முதல்வரின் செயல்களை மக்கள் எதிர்கொள்வதை சினிமா பார்ப்பதாகவும் மாற்றிவிட்டார். இதன் விளைவு நம் கற்பனைக்கும் அப்பாலானதாக இருக்கும். தனிமனித வழிபாடு, கல்ட் மனநிலை, பக்தி, மதவாதம், போதைக் கலாச்சாரம், வன்முறை என ஒரு தலைமுறையே வீணாகிவிடும். சிந்தனையும் உயர் பண்பாடும் அறிவும் கற்பனையுமே ஒரு விலங்கை மனிதராக்குகிறது. இவற்றை வணிக சினிமா அழிக்கிறது. அதுவும் மிகையான சினிமா நுகர்வும், சினிமாவாவே அரசியலாவதும் நாம் விலங்காவதைத் துரிதமாக்கி நமது ஏற்றத்தாழ்வுகளை, சுரண்டலை கேள்வியின்றி ஏற்க வைக்கும். சினிமா மக்களாட்சிக்கே விரோதமானது என ஆய்வுகள் சொல்கின்றன; ஆனால் வினோதமாக இங்கு ஒரு மிகப்பெரிய மக்களாட்சி இயக்கம் சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது. வணிக ஊடகம் லாபத்துக்காக அதை ஊதிப் பெருக்கியது. இன்று விஜய் முன்னால் தமிழ்ச் சமூகம் மண்டியிட்டிருக்கிறது.
அண்மையில் ஜக்கி வாசுதேவ் தன் பக்தர்களை ஒரு குழுவாக நேபாளத்துக்குப் பயணம் அனுப்பினார். ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா நாற்பது லட்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு கையில் ஒரு தாயத்துக் கட்டிவிட்டு அவரது ஆன்ம ஆற்றல் அத்தாயத்தில் உள்ளதால் அவர்களை இயற்கைப் பேராபத்துக்கள் தாக்காது என்றார். அவர்களும் நம்பிப் போய் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். இதைக் குறித்து விமர்சனங்கள் வர ஜக்கி ஒரு விளம்பரம் வெளியிட்டார். அதில் அவர் பைக்கிலும் காரிலுமாக வருகிறார். இருபது பக்தைகள் கையெடுத்து தொழுது பதுமைகளைப் போல நிற்கிறார்கள். அவர்களிடம் அவர் நேபாள விபத்தினால் தான் மனம் உடைந்து ஆன்ம ஆற்றல் குறைந்து சமநிலை இழந்திருப்பதாகவும், தனக்குள் நேர்ந்த ஏதோ ஒரு ஆன்மீக ஆற்றல் இழப்பே விபத்தில் மக்கள் இறந்ததற்குக் காரணம் என்றும், அடுத்து தான் இதைச் சரிசெய்யப் போவதாகவும் சொல்கிறார். இது ஒரு விளம்பர உத்திதான். ஆனால் இதைக் கேள்வி கேட்கும் ஆற்றல் அவரது பக்தர்களுக்கு இல்லை. அவர்கள் அவரை மீண்டும் நம்புவார்கள். ஏனென்றால் அது ஒரு கல்ட் அமைப்பு. விஜய்யின் தவெக ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை. இருவருமே ஒன்றுதாம். விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்ந்து வென்றால், அவர் நிலைத்தால் ஜக்கியைப் போன்ற பலரையும் அடுத்த சில பத்தாண்டுகளில் இங்கு உருவாக்கும். ஆகையால் இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நேர்ந்த ஆகப்பெரிய மானுட நெருக்கடி. இது ஒரு அரசியல் பிரச்சினை மட்டுமல்ல.
இதற்கு மாற்று நான் ஏற்கனவே சொன்னதைப் போல மாஸ் சினிமாவை ஒழிப்பதுதான்.
ஹீரோக்கள், ஹீரோயின்கள், மாஸ் சினிமாவின் பிம்பங்களுக்கு எதிராக சாதாரண மனிதர்களின், நடிகர்களை முன்னிறுத்தாத கருத்துக்களின் சினிமாவை உருவாக்க வேண்டும்.
சினிமா வணிகத்தில் உள்ள முதலீடு (முக்கியமாக, கறுப்புப் பணம்) வேறு தொழில்களுக்கு (வெள்ளைப் பணமாக) நகர வேண்டும். இது நம் அரசியலுக்கு பெரும் நல்விளைவுகளைத் தரும். அது மட்டுமல்ல நமது ஒழுக்கம், பண்பாட்டுணர்வு, அறிவு மேம்படும். சிந்தனை வளர்வதால் ஏற்றத்தாழ்வு குறையும். ரசிகர்களை ஒழிக்காமல் வணிக சினிமா எனும் மாடலை எப்படி முதலில் ஒழிப்பது எனச் சிந்திக்க வேண்டும். அந்த மாடல் மக்களின் பங்கேற்புடனான கலையாக மாறினால் ரசிகர்கள் தேவைப்பட மாட்டார்கள்.
கருத்துகள்