முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கால் நூற்றாண்டு விழா

மூன்று சரித்திரக் கதைகள் – ஜெயமோகன் – மதுரம்

 எனக்கு ஒரு ஆசை. ஜெயமோகனின் கருத்துக்களுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிப்போர் அதற்கு ஒரு கால் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும். முடிந்தால் சென்னையிலே ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் ஒரு சிலரை அங்கீகரித்து கேடயமும் வழங்க வேண்டும். அல்லது இதை ஒரு பகடி நிகழ்வாகவும் நடத்தலாம்.

ஏனென்றால் அவரை என்னதான் கண்டித்தாலும் விமர்சித்து ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதினாலும் அவர் அவற்றில் இருந்து எதையும் பெறுவதோ தன்னைப் பொருட்படுத்துவதோ இல்லை. காதில் வாங்கிக் கொள்வது கூட இல்லை. அவர் தனக்கான ஆற்றலையும் இவ்வாறுதான் உருவாக்கிக் கொள்கிறார். என்ன சொன்னாலும் அவருக்குப் புரியாது என்பது யாருக்கும் புரிவதில்லை (என்னையும் சேர்த்துதான்). அவரது கருத்துக்கள் பொதுவெளியை மாசாக்கிவிடக் கூடாது எனும் அக்கறையிலேயே பலரும் இப்படி தனியே நின்று சண்டை செய்கிறார்கள். இவர்கள்தாம் என்றில்லை, ஜெயமோகன் இதுவரை யாருடனும் கருத்து விவாதமே பண்ணியதில்லை. அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவர் யாரைக் குறித்தும் எதைக் குறித்தும் இதுவரைக் கேள்வியே எழுப்பியதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்க முடியும். அவருக்கு கேள்வியில் நம்பிக்கை இல்லை. சுந்தர ராமசாமியைப் பற்றிக் கூட அவர் இறந்த பின்னரே விரிவாக எழுதி (பெரும்பாலும் வசைகள்) அஞ்சலி எனும் பெயரில் சு.ராவைச் சிறுமைப்படுத்தி இருந்தார். அவரது அஞ்சலிக் கட்டுரைகளும் இவ்வாறு பதில் சொல்ல இயலாதவர்களிடம் அவர் எழுப்பும் கேள்விகளே. அவருக்கு உயிருடன் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்பி பதில் பெறுவதில் நம்பிக்கை இல்லை. அவர் ஒரு குரு, அவரிடம் யாராவது கேள்வி எழுப்பினால் ஒன்று அது அவரிடம் ஞானம் பெறுவதற்கு அல்லது வசை வாங்குவதற்கு.
கேள்வி பகுத்தறிவாளர்களின் ஆயுதம். ஜெயமோகன் பகுத்தறிவாளர் அல்லர். அவர் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் பதிலாக கருத்தியல் எதிரொலி அரங்கொன்றைக் (ideological echo chamber) கட்டமைக்கிறார். அதற்குள் அவரது எதிரொலிகள் மட்டுமே கேட்கும். அவரிடம் கேள்வி கேட்போரின் ஒலிகள் அதற்கு வெளியே மட்டுமே கேட்கும். அவரது விஷ்ணுபுரம் அமைப்பின் கூட்டங்களிலும் இதுவே நடக்கிறது. அவர் அதில் கேள்விகளையும் விவாதங்களையும் அனுமதிப்பதில்லை. தானோ தன் அமைப்பினரோ "தேவைற்ற சச்சரவுகளில்" ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்கிறார்.
இது ஜெயமோகனின் நிலைப்பாடு மட்டுமல்ல. பொதுவாகவே இரு தரப்பினர் இவ்வாறுதான் இருப்பர். முதலில், கல்ட் அமைப்புகளும் வலதுசாரி அமைப்புகளும். டிரம்ப், மோடி, ஜக்கி வாசுதேவ் ஆகியோரிடம் நீங்கள் விவாதம் பண்ணவே முடியாது. "நான் சொல்றேன் நீ கேளு" என்றே அவர்கள் சொல்வார்கள். ஜெயமோகன் கூடுதலாகத் தான் சொல்வதை நீங்கள் நம்புவதற்கான கருத்தியல் சட்டகத்தையும் புனையப்பட்ட வரலாற்றுக் காரணங்களையும் எடுத்துத் தருவார். அவரை ஒரு cult idealogue என்று அழைக்கலாம். அடுத்து, தீவிர மனப்பிறழ்வு கொண்டோரும் கூட இப்படியே இருப்பார்கள். என் ஊரில் ஒருவர் தன் கழிப்பறை கமோடுக்குள் இருந்து எதிரி நாட்டு விமானப்படையினர் ஏவுகணைத் தாக்குதல் பண்ணுவதாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரிடம் யாரும் மறுத்துப் பேசுவதில்லை.
துயரம் என்னவெனில் ஜெயமோகனுக்குப் பதில் பேச விழையும்போது நாமும் ஒருவித எதிரொலிக் கூடமாக மாறுகிறோம் என்பதே.
ஆகையால் இதையெல்லாம் கொண்டாடி ஒரு பாராட்டு விழாவை நாமே எடுத்தால் ஓரளவுக்கு இந்த அபத்தத்தை நாம் முற்றுப் புள்ளி வைக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...