
தொடர்ந்து எழுதுவதன் உடல் சிரமங்களைப் பற்றி யாரும் எழுதிப் படித்ததில்லை (நோய்களைச் சொல்லவில்லை). என்னுடைய முதல் இரு நாவல்களை நான் எழுதும்போது என் வேலைகள் எழுதுவதற்கு ஏற்ப அமைந்திருந்தன. "கால்கள்" நாவலை ஒன்றரை ஆண்டுகள் எழுதினேன். அப்போது என் கல்லூரி வேலை காலையில் 8: 30க்கு ஆரம்பித்து மதியம் 1: 30க்கு முடிந்துவிடும். மதியம் வந்து சாப்பிட்டுத் தூங்கிவிட்டு மாலை 5-6 மணிக்கு மேல் தினமும் எழுதும் பழக்கம் இருந்தது. இதனால் சோர்வடையவில்லை. ஒரே சவால் மதியம் என் நண்பர்களுடன் மதுவருந்தும் பழக்கம். குடித்து சாப்பிட்டுவிட்டு ஆறு மணி வரைப் பேசுவோம். அதன் பிறகு அன்றைய தினம் எழுத்து அம்பேல்தான். அதனால் வேலை முடிந்ததும் எப்படியாவது மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். அடுத்த நாவல் "ரசிகன்" எழுதும்போது நான் முழுநேர முனைவர் பட்ட ஆய்வு பண்ணிக் கொண்டிருந்தேன். முழுநேர ஆய்வென்பது எழுத்துக்கு ரொம்ப வசதியானது. முதலாமாண்டு எழுத வேண்டிய அத்தியாயங்களை இரண்டே மாதங்களில் முடித்துவிட்டு மீத பத்து மாதங்களையும் வாசிப்புச் செலவிட்டேன். என் நெறியாளரின் அலுவலகத்தில் அருமையான நூலகம் இருந்தது. என் நாவலுக்கான தரவுகளுக்கு அது பயன் தந்தது. நெறியாளரிடமும் அவ்வப்போது பேசி தகவல் சேகரிப்பேன். அவர் பேசும்போதே எனக்குள் காட்சிகள் விரியும். நாவலை எட்டு மாதங்கள் ஒரேயடியாக எழுதும்போது நெறியாளரிடம் அனுமதி பெற்று அதிக நேரத்தை புனைவெழுத்தில் செலவழிக்க முடிந்தது. அவரும் நான் அத்தியாயங்களை நேரத்துக்குள் எழுதி முடிப்பதாலும் அடிப்படையில் அற்புதமான மனிதர் என்பதாலும் அனுமதித்தார். மூன்றாவது நாவல் "கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" ஏதோ ஒரு பத்து நாள் விடுப்பின்போது எழுதியது. தினமும் 12 மணிநேரம் எழுத்து, தூக்கம், எழுந்ததும் மீண்டும் எழுத்து.
அதன் பிறகே என் தொழில்வாழ்க்கை நெருக்கடியானதாக மாறியது. சாப்ளினின் "மாடர்ன் டைம்ஸ்" நாவலில் வருவதைப் போல எந்நேரமும் வேலை செய்யும் உணர்வு. தூக்கத்திலும் பாடம் எடுத்துக் கொண்டும் குறிப்பெழுதிக் கொண்டும்தான் இருப்பேன். அப்போதுதான் சின்னச் சின்ன ஓய்வுகளின்போது நாவல் எழுதும் பழக்கம் ஏற்பட்டது. அதாவது உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை எனக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சில நூறு வார்த்தைகளை அடித்துவிடுவது. பெங்களூரில் தினமும் மாலையானால் மழை ஆரம்பித்துவிடும். கொஞ்சம் நேரம் பிசகினால் வீட்டுக்குப் போக முடியாது. அலுவலகத்தில் இருந்து கண்ணாடி ஜன்னல் வழியே மழையைப் பார்த்தபடி எழுதிக் கொண்டிருப்பேன். வேலையும் எழுத்தும் சேர்ந்து என்னை அதிகப்படியாகக் களைப்படைய வைத்தன. பல நாவல்களை பாதி, முக்கால்வாசி மட்டும் எழுதி முடிக்காமல் விடுகிற நிலை ஏற்பட்டது அப்போதைய நேர நெருக்கடியால்தானா எனத் தெரியவில்லை. எப்போதுமே தூக்கமில்லாத உணர்வுடனே இருப்பேன். களைப்பு என் எலும்புகளுக்குள் துருவாக ஏறிக் கொண்டிருந்தது. மனம் எப்போதுமே அடைந்து கிடக்கும். நிறைய எண்ணங்கள், கருத்துக்கள், முன்னுக்குப் பின்னான உணர்வுநிலைகள் நான் எழுதுவதற்கான இடைவெளியை அளிக்காமல் கல்யாணப் பந்திக்கு முந்தி கதவோடு அழுந்தி நிற்கும் கூட்டத்தைப் போல நின்றன. அதோடு குறைந்த வெளிச்சம், குளிர் என் எழுத்து மனநிலைக்குப் பொருந்தவில்லை. (எனக்கு எழுதும்போது பளிச்சென்ற ஒளிப் பிரவாகத்தைக் காண வேண்டும். அல்லது சலனமற்ற நள்ளிரவாக இருக்க வேண்டும்.) அதன் பிறகு நான் பிஞ்ச் இணையதளத்தில் ஒரு நாவலை ("ஒரு முடிவற்ற துப்பறியும் கதை") எழுதி முடித்தது லாக் டவுன் காலத்தில். வேலையில் இருந்தாலும் இஷ்டத்துக்கு தூங்குகிற வசதி இருந்தது. அந்நாவலை நான் பாதி முடித்தபோது லாக் டவுன் முடிந்ததாக நினைவிருந்தாலும் எப்படியோ சமாளிக்க முடிந்தது. அதற்கு அடுத்து நான் முடித்த நாவல் "நிழல் பொம்மை" - அதையும் ஒரு கோடை விடுமுறையில்தான் பெரும்பாலும் எழுதினேன். விடுமுறை முடிந்து இன்னொரு பத்து நாட்கள் வேலை நாட்களின்போதும் எழுதினேன் என்றாலும் அதன் கணிசமான பணியை என்னால் ஓய்வின்போது எழுத முடிந்தது சௌகரியமாக அமைந்தது.
யோசித்துப் பார்த்தால், ஒரு நாவல் கோருகிற முழுமையான ஓய்வுக் காலம், அவகாசம் என் படைப்பு மனத்துக்கு இடைவெளிகள் இன்றி தேவைப்படுகிறது எனப் புரிகிறது. படைப்பு மனம் உடல் நலத்துடன் சம்மந்தப்பட்டது. ஆகையால் உடல் சோர்வடைந்து துவளும்போது புனைவு எழுதும் ஆவேசமும் குறைகிறது. அதையும் மீறித்தான் நான் கடந்த ஓராண்டாக எழுதி வருகிறேன். பகலில் புனைவு எழுதும் அவகாசம் இருப்பதில்லை. நான் சிறுவயதில் இருந்தே ஒரு 'இரவுப் பறவையென்பதால்' இரவு 11 மணிக்கு மேல்தான் எழுதத் தோன்றுகிறது. முடிக்கும்போது இரவு 2-3 ஆகிவிடும். அதன் பிறகு நான்கு மணிநேர தூக்கம்.
மார்சல் புரூஸ்ட் தன் In Search of Lost Time நாவலை தன் வாழ்வின் கடைசி 15 ஆண்டுகள் இரவு முழுக்க எழுதி பகலில் தூங்கித்தான் முடித்தார். டோனி மோரிசன் இரவில் எழுதுவதே படைப்பூக்கமான செயல் என்றார். ஆனால் அவருக்குக் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்கள் எழும் முன்னர் எழுதி முடிப்பதற்காக காலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்தினார். காப்கா ஒரு இன்ஷுரன்ஸ் அலுவலகத்தில் பணி செய்தார். இரவெல்லாம் எழுதி காலை நான்கு மணிக்குத் தூங்கப் போவார். பகலில் ஓரிரு மணிநேரங்கள் உறங்கி ஓய்வெடுக்கும் அவகாசம் அவருக்கு இருந்ததால் சமாளித்தார்.
எனக்கு முன்பு காலை 8: 30 வரை தூங்கும் வாய்ப்பு இருந்ததால் ஓரளவுக்குப் பரவாயில்லை என இருந்தேன். இப்போது தூங்கி சற்று நேரத்திலே விழிப்பதால் பகலெல்லாம் ஏதோ ஒரு பறவையின் கால்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஆகாயத்தில் பறக்கிற உணர்வு. அசைவுகளில் கனம். பார்வையில் கனம். மூளை மீது இருளின் அழுத்தம். அதை ஈடுகட்ட மாலையில் சற்று நேரத் தூக்கம். மீண்டும் இரவு 11 மணியானால் எனக்கு புதிதாக நாள் ஆரம்பிப்பதைப் போலிருக்கும். பளிச்சென்று அமர்ந்து எழுதுவேன். கடும் சோர்வுடன் படுப்பேன். அதன் மோசமான தாக்கத்தை அடுத்தடுத்த நாட்கள் உணர்வேன். என் பிரச்சினை நேர மேலாண்மையும் தூக்கமின்மையும் மட்டுமல்ல. நான் ஒழுங்காகத் தூங்கும் நாட்களிலும் கூட புனைவு எழுதுவது என்னை அதிகப்படியாகக் களைக்க வைக்கிறது. கோடை வெய்யில் காய்ந்த மண்னை உறிஞ்சுவதைப் போல அது என்னை உறிஞ்சிச் சக்கையாக்கி விடுகிறது. சனி, ஞாயிறு புனைவெழுதினால் திங்கட் கிழமை நரகமாகி விடுகிறது.
தமிழில் பல எழுத்தாளர்கள் அரசு வேலையிலோ வங்கி வேலையிலோ இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அடுத்த இருபதாண்டுகள் எழுதிக் குவிப்பது ஏன் என இப்போது புரிகிறது. இன்னொரு பக்கம் புனைவெழுதுவதற்கான உறைவிடத் திட்டங்களில் விண்ணப்பித்து கலந்து கொண்டு எழுதப் போகிறவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் எப்படி இவ்வளவு நேரம் வாய்க்கிறது? எப்படி இவ்வளவு அதிர்ஷ்டத்துடன் பிறக்கிறார்கள்? வேலைக்குப் போய் பார்த்துக் கொள்கிற, "நீ வீட்ல இருந்து எழுது" எனச் சொல்லுகிற மனைவி கிடைக்கிறவர்களும் பயங்கர அதிர்ஷ்டசாலிகளே.
இரவுப் பட்சி எழுத்தாளர்கள் காலையில் எழுந்து நிலநடுக்கம் வந்ததைப் போல வேலைக்கு மக்கள் ஓடுகிற உலகில் வாழ்வது பெரிய துரதிஷ்டம்.
கருத்துகள்