மரக்கொப்புகள் வரிசை வரிசையாக
இடுங்கின பாதையில் இரு மருங்கும்
சத்தமே எழாமல்
விழுவதே தெரியாமல்
போர்க்காட்சிகளைத் துல்லியமாக வர்ணங்கள் தழுவிட
காட்டும் டிவி கடை எல்.இ.டி திரையில்
இடைவிடாமல் பொழிகிற குண்டுகளை,
எய்யப்படுகிற ஏவுகணை போல
மழை என்னை அச்சுறுத்துகிறது
நான் இரு பக்கமும் பார்த்துக் கொண்டே
அவசரமாக நடக்கிறேன்
என் புறங்கையில் ஈரம் படிகிறது
ஒரு குழந்தை ஒப்புவிக்கும் எழுத்துக்களைப் போல
என் சப்பாத்துகளைத் தொட்டுத்தொட்டு
துளிகளின் வரிசை
சப்தங்கள் திரும்பிப் பார்க்கையில்
மறைகின்றன
என் சிறுவயது மழைகள் நினைவுக்கு வருகின்றன
சரளைக் கற்களை வாரி அடித்ததைப் போன்ற மழை
கண்ணாடிச் சில்லுகள் காற்றின் குறுக்கே பறப்பதைப் போன்ற மழை
இடிமுழக்கமும் குளத்துக்குள் யாரோ தொபுக்கெனக் குதிப்பதான ஒலிகளும் நிரம்பிய அடைமழை
வானின் கதவைப் படாரெனச் சாத்தியதைப் போன்ற மழை
நினைவுகளைத் துலக்கமாகக் கழுவி திகைத்து நிற்க வைக்கும் மழை
தேம்பலை, கண்ணீர்க் கசிவைக் கேட்டபடி பேசிக்கொண்டே போகும் மழை
போகிற போக்கில் ஜன்னல்களுக்குள் அள்ளித் தெளித்துப் போகும்
கதவின் விளிம்பின் வழி விரல்கள் நுழைத்து எட்டிப் பார்க்கும் மழை
வீடு முழுக்க வீச்சம் அடிக்கும் மழை
மனம் முழுக்க சொற்களைக் கவிழ்த்துக் கலைத்துப் பார்க்கிற மழை
எப்போதுமே ஒழுங்குகளைக் குலைக்கும் மழை
கொலைத் தடயங்களை முன்னுக்குப் பின்னாய் விட்டு
அலங்க மலங்க விழித்தபடிச் சரணடையும் குற்ற மழை
என் சிறுவயதில் மழையைக் குறித்த சித்திரம்
நான் அதை வேடிக்கைப் பார்த்து நிற்கையில்
சட்டென யாரோ பின்னிருந்து தொட்டதைப் போல
திடுக்கிட்டுத் திரும்புவதே.
ஏன் பார்த்தாய், ஏன் அதையே பார்த்தாய்?
ஏதோ ஒரு குரல் வினவ
நான் பதிலற்றுப் போய் அழுகிறேன்.
மரக்கொப்புகள் திரையிட்ட இடுங்கின பாதையின் முடிவில்
பட்டென வெளிச்சம் வந்து அடிக்கையில்
கூச்சம் தாளாமல்
கைகளால் மூடிக் கொள்கிறேன்
மென்மையாய் இளவெயிலை ஒரு கையால் தழுவிபடி
பொழிகிறது மென்மையான மழை
காதலியின் காதில் கிசுகிசுக்கப்படும் போன்ற மழை
ஊடுருவும் துகிலை அசைக்கும் காற்றைப் போன்ற மழை
நெடிதுயயர்ந்த நீளக்கண்ணாடிச் சுவர்கள் மினுங்கும்
அடுக்கு மாடிக் கட்டிடங்கள்
குண்டு குழிகளில் தேங்கிய நீல வண்ணத் துளிகள்
கடைகளின் ஜன்னல் கதவுகளின் வழியே
கசியும் இனிமையான சிரிப்பொலி
காற்றில் நிறைந்து மிதக்கும் உணவக எண்ணெய் வீச்சம்
கடை அலமாரி வரிசையில் அடுக்கப்பட்டு
கண்ணாடி வழியே மழையை வேடிக்கைப் பார்க்கும்
யாரும் வாங்காத பொருட்கள்
வழுக்கி நீரைப் பாய்ச்சும் கார்கள்
நேரந்தவறி ஒளிரும் சாலை விளக்குகள்
சாய்ந்து சாய்ந்து நிமிரும் கிளைகள்
தத்திப் பறந்து எழுந்து கிளைகளில் அமரும் சிறுபறவைகளைத்
திகைப்புடன் பார்க்கும் பள்ளிக் குழந்தை
சாலையில் நீல, சிவப்புக் குடைகளுடன்
நவநாகரிக தேகங்களின் ஒழுங்கற்ற அலைவுகள்
உடல்களின், நகரத்தின், நிழல்களின்
மென்மையான முணுமுணுப்புகள்
திறக்கும் கதவுகளுக்குள் அவசரமாய்
நுழையும் மழையின் காலடிகள்
எங்கெங்கும் கேட்கும் ஓசையற்ற அழைப்பொலிகள்
ஆகாயத்தை மறந்து
பார்வை மட்டத்தில் பெய்யும் மழை
மரக்கொப்புகள் திரையிட்ட இடுங்கின பாதையின் முடிவில்
திரும்பிப் பார்க்கிறேன்
இருளுக்குள் தனித்து தயங்கி நிற்கிறது
இளம் பிராயத்தின் சின்னச்சின்னக் குற்றங்களின், அவமானங்களின்
மழையில் தோன்றிய சின்னஞ்சிறு வானவில்
கருத்துகள்