டபிள்யு ஹெச் ஆடனின் கவிதைகளை முதலில் நான் வாசித்தது என் கல்லூரிப் படிப்பின்போது. அடுத்து நான் ஆசீரியரானபோது. அதிகச் சிக்கல் இல்லாத நேரடியான ஒரு பகடிக் கவிஞர் என்றே புரிந்து வைத்திருந்தேன். அண்மையில் நான் ஹேனா ஆரெண்டின் "ஹெச் ஆடனை நினைவுகொள்வது" எனும் கட்டுரையைப் படித்தபோதுதான் அவரது அருமை விளங்கியது. குறிப்பாக மொழியை அவர் எப்படி விளையாட்டுத்தனத்தோடு (அதாவது நெகிழ்வுடன்) பயன்படுத்துகிறார், அன்றாட வழக்காறுகளை எப்படி மிகவும் சரளமாக நகைமுரணுடன் கையாள்கிறார் என விவரித்திருந்தார். அதன் பிறகு நான் அவரது தொகுப்பினை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
என்னை மிகவும் கவர்ந்தது அவரிடம் உள்ள ஒரு பூடகம். சொற்றொடர்களை முழுமை பெறாமல் பயன்படுத்துவது, சில தகவல்களை பின்னணியின்றிப் பயப்படுத்துவது, சொல்லப்பட்டவற்றுக்கு இறுதியில் ஒரு முழுமை கொண்டு வருவதுதான் அவரது உத்தி. இது அவரது கவிதைகளை பலமுறைப் படிக்கவும் அதில் தோயவும் வைக்கிறது. அக்கவிதைகளுக்குள் நாம் கற்பனை பண்ணவும் பேசவும் பல்வேறு சாத்தியங்களும் பரந்த வெளியும் உள்ளன. இதைச் சொல்லாவிட்டால் வாசகருக்குப் புரியாதோ எனும் அச்சம் பல சமயங்களில் நாம் கவிதைக்குள் அதிகமான உவமைகளை, விவரணைகளை ஏற்றி வைக்கச் செய்கிறது. ஒழுங்காக, சீராக, தெளிவாக, முழுமையாகச் சொல்வது சில நேரங்களில் கவிதையை திருவிழா வெளிச்சம் நிறைந்த தெருவைப் போலாக்குகிறது. டபியூ. ஹெ ஆடன் இதற்கு நேர்மாறான ஒரு சொல்முறையைத் தேர்வு பண்ணுகிறார். தமிழில் இதற்கு விதிவிலக்கு தீவிரமான படிம, குறியீட்டுக் கவிதைகளை எழுதிய பிரமிளைப் போன்ற சிலர் மட்டுமே. மற்றபடி பெரும்பாலான நவீனத் தமிழிக் கவிதைகளில் பூடகத்தன்மை குறைவே. மொழிபெயர்ப்பில் நான் வாசித்த இந்தியக் கவிதைகளும்கூட இப்படித்தான். நான் வாசித்தவரையில் இம்பிரஷனிஸத் தன்மை கொண்ட பிரஞ்சுக் கவிதைகளில் டீ கோட் செய்துவிட்டால் பூடகத்தன்மை இராது. ஆனால் அமெரிக்க நவீன / பின்நவீனக் கவிதைகளில் சில நேரங்களில் இடைவெளிகள் அதிகமுள்ள கவிதைகளைக் கண்டிருக்கிறேன் (எமிலி டிக்கின்ஸன், வாலஸ் ஸ்வீடன்ஸ், ஆஷ்பரி போன்று பலர்). டபிள்யு ஹெச் ஆடன் இவர்களிடையே தன் எளிமையால் இன்னும் தனித்து நிற்கிறார்.
எனக்கு அவரிடம் பிடித்த மற்றொரு விசயம் காலம், மரணம் குறித்த விசாரணை. வாழ்க்கை தற்காலிகமானது என்று சொல்லாமல் அது நிஜம்தானா, நாம் விரைவில் இறந்து விடுவோமா, அது எப்படித் தெரியும் எனும்படியாக அவர் சந்தேகப்பட ஆரம்பிக்கிறார். நமது சின்னச்சின்ன சமாதானங்களை நமது பாரம மொழியில் எழுதிக் காட்டி புன்னகைக்கிறார். அதேநேரம் அந்த சமாதானங்களுக்குள் தானும் இருப்பதாகக் காட்டுகிறார். இந்த நுட்பமான விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுவே என்னை அவரை அடுத்தடுத்து மொழிபெயர்க்க வைத்தது; அப்போதே அவரை இன்னும் அணுக்கமாக ஆழமாகப் புரிந்துகொள்ள இயல்கிறது.
கருத்துகள்