வன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா ? இதனாலே சாருவின் உலகில் பெண்கள் மறைமுக வன்முறையாளர்களாய் தோன்றுகிறார்கள் . சாருவின் நாவல்களில் வன்முறையை ஒரு மையமாய் கொண்ட நாவல் “ தேகம் ”. “ தேகம் ” நாவலின் மைய பாத்திரம் பாலியல் குற்றவாளிகளை வதை செய்யும் ஒரு வல்லுநன் . வதையை ஒரு கலையாக மாற்றியவன் . அவனது மனைவியாக வரும் பெண்ணோ ஒரு எறும்பைக் கொல்வதைக் கூட ஏற்காதவள் . கடுமையான அஹிம்சாவாதி . ஆனால் அவள் அவனை தொடர்ந்து உளவியல்ரீதியாய் வதைத்துக் கொண்டிருப்பாள் . அவள் செலுத்தும் வன்மத்தின் முன் அவன் சிறுத்துப் போவான் . அவனை விட ஆகப்பெரிய வதையாலள் அவளே என சாரு முத்தாய்ப்பாய் முடிப்பார் . சாருவின் ஆண்களிடம் இந்த முரண் - எதிர்வு தொடர்ந்து வரும் . சாருவின் ஆண் பாத்திரங்கள் அடாவடித்தனம் பண்ணுவார்கள் . ஆதிக்கமாய் தெரிவார்கள் . இன்னொரு புறம் பெண்களிடம் புள்ளப்பூச்சியாகி விடுவார்கள் . அவர்கள் சதா பாலுறவு கொண்டாட்டங்களில் திளைப்பார்கள் . இன்னொரு புறம் பாலிய...