முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணத்தை மெல்ல பற்றி




காலை வெயிலுக்கு பின்னரும்
தங்கிடும் கொசுக்கள்
எண்ணிக்கையில் குறைவானவை
உருவத்தில் பெரியவை
போதையில் சலம்பும் நள்ளிரவு குடிகாரர்களை போல்
அவை உடலில் அமர்ந்திருக்க
காற்றில் மெல்ல நடுங்குகின்றன
அவை கடிப்பதே இல்லை
அல்லது தெரியாதபடி மிருதுவாக கடிக்கும்
பரிணாமத்துக்கும் அழிவுக்கும்
நடுவிலான
இக்கொசுக்கள்
அடிக்கப் போகும் நம் கையின்
நிழலை
காண்பதில்லை அல்லது அலட்சியப்படுத்துகின்றன
நீங்கள் வேகமாகவோ மெல்லவோ அசைந்தபடியோ
அடிக்கலாம்
திட்டமிடலும் சூழ்ச்சியும் வஞ்சகமும்
அவை முன் தோற்கின்றன
அடித்த உடன்
அவை ரத்தம் சிந்துவதில்லை
கொசுவின் ரத்தம் எவர் ரத்தம்?
ரத்தம் தெறிக்கும் போது
நாம் இதை கேட்பதில்லை
நம்மிடம் இருந்து
மிக காருண்யமான ஒரு அடியையே
அவை வேண்டுகின்றன
அதனால்
ஒரு செல்லப்பிராணியை போல்
நாம் அதை அன்பாக தட்டுகிறோம்
அடிபட்ட பின்
அவை சிதைவது இல்லை
உருண்டோடி பக்கத்தில்
எங்காவது விழுந்து
காணாமல் போகின்றன
சிறிது நேரம் தேடி விட்டு ஓய்கிறோம்
வற்புறுத்தாமல் வலியுறுத்தாமல் எதையும்
உறுதி செய்யாமல் உயிர் பிரியும் அவை
ஒரு வேளை நம்
முழங்கையில் இருந்த போதே
இறந்து விட்டிருந்தனவா
என்று நினைக்கும் போது
நமக்கு லஜ்ஜை ஏற்படுகிறது

காலை வெளிச்சத்தை அருந்தியபடி இருக்கும்
கொசுக்கள்
உறுதியின்மையால்
நம்மை வியப்பூட்டுகின்றன
மரணத்தின் விரலை
அவை
மிருதுவாக பற்றி இருக்கின்றன
எதையும் எதிர்பார்த்து இருக்கும் போது
எதுவும் நிகழ்வதில்லை
என் நாளை ஆரம்பிக்கும் பரபரப்பு
தொற்றும் முன்
இதோ அடுத்த கொசு
கட்டை விரலில் அமர்ந்து
மெல்ல தியானிக்கிறது

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக வந்து இருக்கிறது.
ஆனந்தி.. இவ்வாறு கூறியுள்ளார்…
அபி..நீங்க நல்லா குணமாகிட்டிங்க தானே இப்போ?? உடம்பை நல்லா பார்த்துக்கோங்க..
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சித்ரா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
குணமாகி விட்டேன் ஆனந்தி. பழைய உடல் நலத்தை சிறுக சிறுக மீட்டு வருகிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.