Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பகடியை வெறுக்கும் மனநிலை

சமீபத்தில் புத்தக புரொமோஷனின் சங்கடங்களையும் அதில் எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சனைகளையும் பகடியான தொனியில் எழுதியிருந்தேன். அதில் இணையத்தில் எழுதுகிறவர்கள் புரொமோஷன் செய்யும் முறையும் இணையத்தில் ஜனரஞ்சகமாய் எழுதுபவர்களுக்கு புரொமோஷன் எப்படி சுலபமாய் அமைகிறது என்பதையும் சொல்லி இருந்தேன். அதை ஒரு பதிவர் நான் அவரை கேலி பண்ணினதாய் கருதிக் கொண்டு ராப்பகலாய் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.
 பொதுவாய் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் hyper sensitive ஆக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைத்தாலே கேலி செய்கிறோமோ என வெகுண்டெழுவார்கள். அந்த பதிவர் என் மொத்த பதிவுமே தன்னைப் பற்றியது எனும் சித்திரத்தை உருவாக்கி தன் மீதே சேற்றை வாரி இறைத்துக் கொண்டார்.
 இலக்கியத்தில் இல்லாத கேலியா? சு.ராவுக்கு நகுலனுக்கும் இடையிலான “நாய்” கவிதை பரிமாற்றங்கள் பிரபலம். அதை ஒட்டி நாற்பதுக்கு மேல் நாய்க் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும். யாரும் கெட்டவார்த்தையால் திட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பேஸ்புக் போன்ற சமூக வலைதள நடவடிக்கைகளால் மனிதர்கள் சிறிதும் கிண்டலை பொறுக்க முடியாதவர்கள் ஆகி விட்டார்கள். நாயே பேயே எனத் திட்டிக் கொள்கிறார்கள். கிண்டல் பண்ணுவதென்றால் தமமுடன் நேரடிப் பழக்கமில்லாத கேப்டன் போன்ற பிரபலங்களை வச்சு செய்கிறோம். ஆனால் கூட இருப்பவர்களை மாறி மாறி காது புளிக்கும் வரை புகழ்கிறோம். இது பேஸ்புக் அளிக்கும் மிதமிஞ்சிய சுயபிரக்ஞையால் விளைந்துள்ள வியாதி.
சமீபமாகவே மனுஷ்யபுத்திரன் என்னை “மூத்த எழுத்தாளர்” என பகடி செய்து வருகிறார். என் நூல் வெளியீட்டு விழாவில் கூட இதை சொல்லி “உன் வாரிசு யார்?” என கேள்வி கூட கேட்டார். இதை நானும் ரசித்தேன். பார்வையாளர்களும் சிரித்து ரசித்தனர். ஜெயமோகனுடன் உள்ளவர்கள் அவரை பகடி செய்வதை பார்த்திருக்கிறேன். சாருவுடன் உள்ளவர்களும் அவரை ஓட்டும் போது மனிதர் குழந்தை போல் சிரிப்பார். இன்று நட.சிவகுமார் ஊரில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தார். அப்போது ஊரிலுள்ள இன்னொரு கவிஞரான ஹமீம் முஸ்தபா அவரை போனில் அழைத்தார். இவர் உடனே “தமிழில் உள்ள மிக முக்கியமான எழுத்தாளனுடன் இருக்கிறேன் தெரியுமா?” என்று விட்டு போனை கொடுத்தார். அது ஒரு கிண்டல். அதன் பொருள் நேர்மாறானது என எனக்குத் தெரியும். சிரித்தபடியே முஸ்தபாவிடம் பேசினால் அவர் இன்னொரு படி மேலே போய் “நீ ஒரு legend. உன்னைப் போய் முக்கிய எழுத்தாளன் என்கிறால் எப்படி?” என ஓட்ட ஆரம்பித்து விட்டார். இது தான் எங்களுக்குள் உறவை லகுவாக்குகிறது. ஆனால் இதையே பேஸ்புக்கில் செய்தால் அங்கு இனக்கலவரமே நடக்கும்.
 எழுத்தாளர்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு பகடியும் சுயபகடியும் ஒரு ஆசுவாசம் தரும் விளையாட்டு.
தன்னை பிறர் பகடி செய்வதை தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் பண்பாட்டு நுண்ணுணர்வு இல்லாதவர்கள் என நினைக்கிறேன். இனி எல்லாரும் எல்லாரையும் பற்றி நேரடியாய் பேர் தேதி இடம் குறிப்பிட்டு மிக உயர்வாக மட்டுமே எழுத வேண்டும். அப்படியான இடத்துக்கு வந்து விட்டோம். மேற்சொன்ன பதிவரிடம் “நீங்கள் திட்டி அளிக்கும் பப்ளிசிட்டி அருமை. தொடர்ந்து செய்யுங்கள்” என உள்பெட்டியில் கிண்டலாய் செய்தி அனுப்பினேன். அவர் அதையும் நேரடியாய் புரிந்து கொண்டு ஆசிடாய் கொப்புளிக்க ஆரம்பித்து விட்டார். அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இப்படித் தான் புரிந்து கொள்வார் போல. ”உன்னால ரொம்ப தலைவலியா போச்சே” என்றால் உடனே அனாசின் வாங்கி வந்து தருவார் என நினைக்கிறேன்.
அவரது கோபம் தன்னை அடுத்தவன் தாழ்வாய் நடத்துகிறான் எனும் பயத்தில் இருந்து வருகிற கோபம். தான் செய்வது தாழ்வானது எனும் குற்றவுணர்வில் இருந்து வருகிற கோபம். தன் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அது தான் தானோ எனும் பதற்றம். மகாபாரதத்தில் துரியோதனனை நோக்கி த்ரௌபதி விளையாட்டுக்கு சிரித்ததனால் தானே துகிலுரியும் படலமே நடந்தது. இதனால் அந்த பதிவருக்கு சொல்ல வருவது என்னவென்றால் என்னையெல்லாம் துகிலுரியாதீர்கள். பார்க்க நல்லாவே இருக்காது. 

(இதையும் அவர் வரிக்கு வரி எடுத்துப் போட்டு என்னை காறி துப்புவார் எனத் தெரியும். அது தன் மீதே விழுகிறது என அவர் உணர்கிற வரை செய்யட்டும். வேறு தீர்வே இல்லை)

Comments

Unknown said…
//என்னையெல்லாம் துகிலுரியாதீர்கள். பார்க்க நல்லாவே இருக்காது.// - :D :D

Finishing-touch super :)

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...