Skip to main content

திமுக தலைவர் மற்றும் எதிர்கால முதல்வருக்கு சில கோரிக்கைகள்


Image result for ஸ்டாலின்
திமுக தலைவர் எதிர்காலத்தில் தமிழக முதல்வர் ஆகும் போது அவர் செய்ய வேண்டியவை:
1)   நீங்கள் முதல்வரானதும் முதல் பணியாய், மதவாத தடை சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதன் படி யாராவது மதக்கலவரத்தை தூண்டும்படியாகவோ மக்களிடையே பிரிவினையை தூண்டும்படியாகவோ பேசினால் அவருக்கு எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும். பேசுவதோடு அன்றி செயல்படவும் செய்தால் அன்னாரின் வீடு, வங்கி இருப்புத் தொகை உள்ளிட்டவற்றை அரசு உடைமை ஆக்கிக் கொள்ளலாம். அவர் எதிர்காலத்தில் எப்போதுமே தமிழகத்தில் நுழைய முடியாதபடி தடை விதிக்க வேண்டும். அவர் கட்சி நடத்தினால் அக்கட்சி தடை செய்யப்பட வேண்டும்.

2)   ஊடகங்கள் தாம் எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி இல்லை என அரசுக்கு உறுதியளித்து ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும். இதை மீறி, ஒரு சானலோ பத்திரிகையோ மாநில நலனுக்கு விரோதமான ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம். அவர்களின் சொத்தையும் அரசு பறிமுதல் செய்யலாம். (ஆனால் ஊடகங்கள் வேறு மாநில கட்சிகளை ஆதரிப்பதில் தவறில்லை. மாநிலத்துக்கு வெளியே உள்ள கட்சிகளின் பினாமியை செயல்படுவதே முக்கிய குற்றம்.)
3)   ஒடுக்கப்பட்டோர் பொறுப்புரிமை சட்டம் இயற்றப்பட வேண்டும். இச்சட்டத்தின் படி, ஒரு ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பாதுகாப்புக்கு அத்தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏயும் ஆட்சியாளர், உயர் காவலதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுமே பொறுப்பு. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாய் மேற்சொன்ன நபர்கள் (எம்.எல்.ஏ, ஆட்சியாளர் உள்ளிட்டோர்) தம் பதவிகளை இழப்பர். அதாவது இதற்கு விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை. உடனடியாய் இந்நடவடிக்கை நிலுவையில் வந்து விடும். ஒருவேளை எம்.எல்.ஏ ஆளும் கட்சியை சேர்ந்தவர் அல்லாவிடில், சம்பவத்துக்குப் பின் ஆளும்கட்சி அத்தொகுதியில் அடுத்த பத்து வருடங்களுக்கு போட்டியிட ஆளுங்கட்சிக்கு தடை விதிக்கப்படும்.
4)   இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ளாமல் நீதிபதிகளின் அமர்வு ஒன்றை நியமித்து அந்த அமர்விடம் ஒப்படைக்க வேண்டும்.
5)   மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும். இப்படிக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புது நலத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்; இப்போது தனியார் வசம் குவியும் கோடானுகோடிக்கணக்கான பணம் அரசு கஜானாவுக்கு போக வேண்டும்.
6)   மக்கள் நல நோக்கில் அரசுக்கு எதிராக பேசவும் போராடவுமான உரிமையை அனைவருக்கும் வழங்கும் சட்டமொன்றை இயற்ற வேண்டும். சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை (அத்தகைய போராட்டங்கள் பிரிவினையை தூண்டும் என்பதால்). பொதுச்சொத்துக்கோ அமைதிக்கோ ஒரு சமூக நல போராட்டமோ கருத்தோ குந்தகம் விளைவுக்குமானால் அவரை கைது செய்வதற்கு காவல்துறை நீதிபதிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டார்களால் ஆன ஒரு அமர்விடம் முறையிட்டு அனுமதி பெற வேண்டும். இச்சட்டத்தின் படி தீவிரவாத தடைச்சட்டம் போன்ற கடும் சட்டங்களை, மதவாதிகள், சாதியவாதிகள் அல்லாத யார் மீது போடப்படக் கூடாது.
7)   தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பாடத்திட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும். இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பில் வேறு பாடத்திட்டங்களின் கீழ் படித்து சான்றிதழ் பெறுவோர் ஒரு அரசு பொதுத் தேர்வெழுதி வெல்ல வேண்டும். அல்லாவிடில் அவர்களால் தமிழகத்தில் எங்கும் மேற்படிப்பு படிக்கவோ வேலை செய்யவோ இயலாது. இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்.
8)   பட்டப்படிப்பு முடித்தோருக்கு பொருளாதார உத்தரவாத திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதன்படி, பட்டப்படிப்பு முடித்தோருக்கு அரசு மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை (சுமார் 10,000) உதவித் தொகையாய் நல்க வேண்டும்.
9)   இதே போல மாற்றுப்பாலினத்தோருக்கும் அரசு உதவித் தொகையை வழங்க வேண்டும்.
10) தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இப்படி செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது இரட்டிப்பு வரியை அரசு விதிக்க வேண்டும்.

Comments

Anonymous said…
உண்மையாகவே நீங்க தான் எழுதினீங்களா ?

1.எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை - பாசிசத்தை தான் காட்டுகிறது, அதில் ஜனநாயக உரிமை எங்கே ?

2. ஊடகங்கள் அவர்களது அரசியல் கட்சி/ கொள்கை சார்பை வெளிபடுத்த வேண்டும் என்று ஆணை இட்டாலே போதும் மக்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள் .. " ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம்" - மறுபடியும் பாசிசம்

3. "விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை" எதற்கும் விசாரணை தேவை இல்லை என்றால் எங்கே போய் முட்டுவது ?

4. ஸ்டாலின் நீதிபதிகளுக்கு தன் அதிகாரத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு போகலாம்

5 "மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும்" இதை வரவேற்கலாம்

6."சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை" சாதி மற்றும் மதவாத கட்சிகள் என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள் ?

7 நமக்கு சமசீர்கல்வி இருக்கிறது. நுழைவுத் தேர்வு தேவைப்படுவோர் வைதுக்கொள்ளட்டும், இப்படி ஒவ்வொரு மாநிலமும் நடத்த முற்பட்டால் நிலைமை விளங்கிவிடும் ... பிறகு மத்திய அரசு எடுத்து நடத்த ஆரம்பிக்கும் நிலைமை மிக மோசமாகும் ""இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்." மத்திய அரசை எப்படி நீங்கள் கட்டுப்படுத்த முடியும் ?


8. 10,000 ருபாயை 10,00,000 பேருக்கு கொடுத்தால் மாதம் 1000 கோடி தேவைப்படும் ... வருடத்திற்கு 12000 கோடி தேவைப்படும்... எப்படி நீங்க நிதியை சமாளிப்பீர்கள் வேலையில்லாமல் காத்திருப்போர் ஒரு கோடி எப்படி நீங்கள் இவ்வளவு பேருக்கும் நிதியை திரட்டுவீர்கள் ?


9 and 10 இந்த பாயிண்ட்ஸ் ஓகே ...

மொத்தத்தில் உங்களது கோரிக்கைகள் பல சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும்...


அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...