முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (3)

மலையாள பிக்பாஸில் பங்கேற்ற ஆண்களில் சுரேஷை விட அதிக வெற்றி வாய்ப்புள்ள ஒரு பிரகாச நட்சத்திரம் சாபுமோன். இதை உள்ளார்ந்து உணரும் பெண்களில் இருவர் அவரது அருகாமைக்காக போராடுகிறார்கள் - ஒருவர் ரஞ்சினி, மற்றொருவர் ஹீமா. ஹீமா சாபுவின் காதில் சென்று “ஐ லவ் யூ” சொல்லி பின்னர் அதை மோகன்லாலிடம் பகிங்கரப்படுத்துகிறார். இதுவும் போதாதென்று அவர் கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் பிற பெண்களிடம் தனக்கு சாபு மீதுள்ள ஈர்ப்பை காட்டுகிறார். ஹீமாவின் காதல் போலியானது, அவரை ஆட்கொண்டு தனது உடமையாக்கும் தன்னல நோக்கு கொண்டது என புரிந்து கொள்ளும் சாபு அவரை நிராகரிக்கிறார்; ஒருமுறை அவரை தன் காலில் மிதித்த சாணியுடன் ஒப்பிடுகிறார். இதனால் காயப்படும் ஹீமா சாபுவை கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் எதிர்க்க முயல்கிறார். 

சாபுவும் சுரேஷும் பெண்களிடம் பெறும் இந்த கவனமானது இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமே பிரசித்தமானது; இதை விட்டு வெளியேறினால் சாபுவை இவர்கள் சீண்ட மாட்டார்கள். வெளியே அவர் ஒரு பெரிய நட்சத்திரம் அல்ல; மேலும் அவர் மணமானவர். சுரேஷும் வயதானவர்; பிரபலம் என்றாலும் பெரிய நட்சத்திரம் அல்ல. ஆனால் பெண்கள் மத்தியில் இந்த ஆண்கள், இந்த alpha males, பெற்ற முக்கியத்துவமும் மதிப்பும் வீட்டின் அரசியலுக்குள் கட்டமைக்கப்பட்டது. முதல் சில வாரங்களுக்குப் பிறகு இப்பெண்கள் இயல்பாகவே பலவீனமாய் உணர்ந்து ஆண்களின் ஆதரவை நாடுகிறார்கள். அதன் பிறகு மொத்த வீடும் ஒன்றிரண்டு ஆண்களின் தலைமையின் கீழ் வருகிறது.

இங்கு இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும் - வீட்டுத் தலைவரின் பெயர் மலையாள பிக்பாஸில் காரணவர். இது பாரம்பரிய நாயர் கூட்டுக்குடும்ப வீடான தறவாட்டின் ஆண் தலைவரது பெயர். உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட ஒரு சர்வாதிகாரி தலைவரே காரணவர்; இந்த பதவிப் பெயருக்குப் பின்னே ஆணாதிக்கம் நுணுக்கமாய் பின்னப்பட்டுள்ளது. ஆக ஒரு ஆணையோ பெண்ணையோ காரணவராய் பிக்பாஸ் வீட்டில் நியமிக்கும் பிக்பாஸ்  ஒற்றை ஆண் அதிகாரத்துக்குக் கீழ் பலர் தலைகுனிந்து பணிந்து வாழும் நிலப்பிரத்துவ சூழலை நமக்கு நினைவுபடுத்தி, ஆணுக்குக் கீழ் பெண் வாழ வேண்டிய நிலையை மறைமுகமாய் வலியுறுத்துகிறார். இதுவே கேரள கலாச்சாரத்துக்கும் ஒத்து வருவதால் இந்த வீட்டில் ஆண்-பெண் உறவாடல் சற்று பிற்போக்காகவே உள்ளது. 

மாறாக இத்தகைய ஆண் சார்பை பெண் பங்கேற்பாளர்களிடம் நீங்கள் தமிழ் பிக்பாஸில் காணவே முடியாது. வடநாட்டவர் பங்கேற்றாலும் கூட தமிழ் மண்ணில் நடக்கும் விளையாட்டு என்பதால் பெண்ணுக்கு கூடுதல் மரியாதை அளிக்கும் தமிழ்ப் பண்பாடே இந்த ஆட்டத்தின் அறமானது. உ.தா., மும்தாஜ் போன்ற ஒரு குலுக்கு நடிகை பற்றின ஆபாசமான குறிப்புகளை, சமிக்ஞைகளை, அவதானிப்புகளை ஆண் பங்கேற்பாளர்கள் ஒருமுறை கூட வெளிப்படுத்தவில்லை. மாறாக மும்தாஜ் தன் கவர்ச்சி பிம்பத்தில் இருந்து கழன்று கொண்டு ஒரு தாய் பிம்பத்தை வெற்றிகரமாய் ஏற்றுக் கொண்டார். ஆனால் மலையாள பிக்பாஸில் மும்தாஜுக்கு இணையான கிளாமர் நடிகையான ஸ்வேதா, அவர் என்ன தான் வீட்டின் தாயாக துவக்கத்தில் பாராட்டப்பட்டாலும், அனூப்பிடம் இருந்து தொடர்ந்து ஆபாசப் தாக்குதல்களுக்கு உள்ளானார். இதன் பொருள் தமிழர்கள் பெண்களை மிகுந்த மரியாதையுடன் எப்போதுமே நடத்துகிறார்கள் என்றல்ல; மாறாக பெண்களை ஆபாசமாய் சித்தரித்து பொதுவெளியில் கிண்டலடிப்பது தமிழ் மனத்துக்கு ஏற்கத்தக்கதல்ல என்பதே.

நான் பார்த்த வரையில் இந்தி பிக்பாஸின் பன்னிரெண்டாவது பருவத்திலும் கேரள பிக்பாஸின் பாணி தான் பின்பற்றப்படுகிறது. பெண்கள் ஆண்களுடன் ஒரு ஜோடியாக அங்கு தம்மை பாவிக்க வேண்டும். ஆணை பின்பற்றி அவனை கருத்தளவில் திருப்தி செய்கிறவளாக ஒரு பெண் போட்டியாளர் அங்கு இருக்க வேண்டும். தமிழ் பிக்பாஸ் ஒப்பிடுகையில் மிக வித்தியாசமானது.


பொதுவாக, தமிழர்களின் பிற்போக்கான நுண்ணுணர்வற்ற ஆணாதிக்கத்தை கண்டித்து நிராகரிக்கும் என் தோழி இந்த விசயத்தில் மட்டும் தமிழர்களின் பண்பாட்டின் ஆழத்தில் உள்ள சிறிய நன்மையை, முற்போக்கை, முதன்முதலாய் பாராட்டினார். தமிழகத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த அவரது கனவின் சிறுதுளி இந்த ரியாலிட்டி ஷோ எனலாம்.

நன்றி: உயிர்மை, ஜூன் 2019

கருத்துகள்

'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கட்டுரை...
சிறப்பான பார்வை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...