டானியல் கெல்மானின் "இயக்குநர்" நாவல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிக்களின் கீழ் அவர்களுடைய நிதியைப் பெற்றுப் படமெடுத்த ஒரு தலைசிறந்த இயக்குநரான பாப்ஸ்ட் என்பவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அவர் எப்படி அறத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வதை முகாம்களில் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க கலையை முன்னெடுப்பதே ஒரு கலைஞனின் பணி எனும் லட்சியத்துடன் செயல்பட்டார் என்பதை நகைமுரணுடன் சித்தரிக்கிறது. ஒருவிதத்தில் இந்நாவல் இன்
று பலருக்கும் பொருத்தமானதாகப் படும் - இன்றைய காலம் அபடி. இன்று பல படைப்பாளிகள் நடுங்கிப் போய்த்தான் இருக்கிறார்கள். முதலீட்டிய சக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும் கைகோக்கும்போது படைப்பாளிகள் தமக்கு முடிவெடுக்க சுதந்திரமே இல்லையென உணர்ந்ந்து ஒரேயடியாக அடிபணிவார்கள். அடிபணிவதென்றால் ஆட்சியாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வதல்ல. மௌனம் காப்பது. இந்த மௌனத்துக்கு அவர்கள் மனம் பலவித நியாயங்களைக் கற்பிக்கும். கலைஞர்கள் அரசியல் பேசக் கூடாது, அரசியலில் அக்கறை கொள்ளக் கூடாது, தன்னுடைய கலையில் கவனம் செலுத்தி அதில் ஆழம் காண்பதே கலைஞர்களின் இலக்கு என இவர்கள் நம்புவார்கள். இது ஒரு தற்காப்புச் செயல்பாடு மட்டுமே.
அதேநேரம் கலைஞர்கள் தமது மௌனமான எதிர்வினையின் ஊடே தம் கருத்துக்களை மறைமுகமாகத் தெரிவிக்கவும் செய்வர். பாப்ஸ்ட் எப்படி தன் படங்களின் காட்சி மொழியில் சர்ரியலியலான பிம்பங்களை, முரண்பாடுகளை நுட்பமாகக் கொண்டு வருகிறார், அவை சர்வாதிகாரத்தை மக்கள் எதிர்கொள்வது குறித்த அவரது சித்தரிப்பாகவும் இருக்கலாம் என கெல்மான் காட்டுகிறார். ஒரு பக்கம் சரணடைதல், இன்னொரு பக்கம் தம்மளவிலான எதிர்ப்பு. இரண்டுக்கும் நடுவே படைப்பாளியாக அவர்கள் நீடிக்கிறார்கள். படைப்பாளிகளிடம் துணிவின்மை, தடுமாற்றம், முடிந்தளவுக்குப் போராடிப் பார்ப்பது ஆகிய குணங்கள் உண்டெனினும் ஒடுக்குமுறையின் காலத்தில் படைப்பாளிகள் போதுமான அளவுக்கு அதிகாரத்தை எதிர்ப்பதில்லை எனும் கருத்தும் மக்களிடம் வலுவாக உள்ளது. அவர்கள் இதனாலே சமூகப் பிரச்சினைகளில் எழுத்தாளரின், படைப்பாளியின் குரல் என்னவென இப்போதெல்லாம் கவனிப்பதில்லை. ஏனென்றால் பல வெற்றிபெற்ற படைப்பாளிகளைப் பொறுத்தமட்டும் அது நேரடியாக அரசின் குரலாகவே இருக்கிறது என மக்கலுக்குத் தெரியும்.
எனக்கு இந்நாவலில் வரும் ஒரு பகுதியைப் பற்றி இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. அது பிரசித்தமானது. இந்நாவலின் வாசகர்கள் தம் மதிப்புரைகளில் குறிப்பிடுவது. நாஜி ஜெர்மனியில் அப்போது இயங்கிய வாசகர் சந்திப்புகளை கெல்மான் பயங்கரமாகப் பகடி பண்ணியிருப்பார். அரசுக்கு, அரசின் கொள்கைக்கு இணக்கமான படைப்பாளிகள், கட்சிப் படைப்பாளிகளை மட்டும் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளும் இக்குழுவின் தலைமை அவர்களைப் பாராட்டும்படி எல்லாருக்கும் மறைமுக அழுத்தம் போட்டுக் கொண்டிருப்பார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை பாராட்டப்பட்ட படைப்பாளி இப்போது அவரது அரசியல் நிலைப்பாட்டால், ஹிட்லருடன் அவர்கள் விரோதம் பாராட்டியதால், அல்லது அவரைக் குறித்த ஹிட்லரின் கருத்து மாறிவிட்டதால் மட்டமான மோசமான படைப்பாளியாகக் கருதப்படுவார். அவரது பெயரைக் குறிப்பிடுவதையே தவிர்ப்பார்கள். இந்தப் புரிதல் அக்குழுவில் உள்ள வாசகர்களுக்கு முக்கியம் என நம்புவார்கள். யாராவது சூழலில் தோன்றும் இம்மாற்றங்களை கவனிக்காமல் பழைய பாராட்டுதலுக்குரிய எழுத்தாளரை இப்போதும் கொண்டாடினால் அவர் தேசவிரோதியாகக் கருதப்பட்டு விடுவார். அவரை உடனடியாக வதைமுகாமுக்கு அனுப்பிவிடவும் கூடும் என்பதால் எல்லாருமே அநியாயத்துக்கு எச்சரிக்கையாக இருப்பார்கள். இலக்கியம் வாசித்துப் பேசுவதே ஒரு வதையாக மாறிவிடும். அப்போதைய பிரச்சார அமைச்சர் கோயல்பல்சை நினைவுபடுத்தும் பாத்திரம் ஒருவர் சொல்வார்: "முன்பு கடுமையான விமர்சகர்கள் இருந்தார்கள். நாங்கள் ஒரு சட்டம் போட்டு இனிமேல் விமர்சனமே இல்லை, கலையை ரசித்துப் பாராட்டுவது மட்டுமே உண்டு எனச் சொன்னோம், அதன் பிறகு விமர்சகர்கள் காணாமல் போய்விட்டார்கள்". இதெல்லாம் எனக்கு இப்போது தமிழ்நாட்டில் பிரசித்தமாக உள்ள ஒரு இலக்கியக் குழுவை நினைவுபடுத்தியது. அவர்களும் தம் தலைவர் அங்கீகரித்து பட்டியலில் சேர்க்கும் படைப்பாளிகள் குறித்து கவனமாக இருப்பார்கள், அவர்களை மட்டுமே எழுத்தாளராக அங்கீகரிப்பார்கள், தலைவரின் பட்டியலில் உள்ள நூல்களைப் படிக்காமலே அவற்றைச் சிலாகித்து மேடையில் பேசுவார்கள், தலைவர் எதிர்க்கிற படைப்பாளிகளைத் தலைவரின் தர்க்கத்தைக் கொண்டே எதிர்ப்பார்கள், தமது வலைதளங்களில் தலைவரின் அனுமதியை ஒட்டிய படைப்பாளிகளை ரசிப்பார்களோ அன்றி ஒருபோதும் 'விமர்சிக்க' மாட்டார்கள். இவர்கள் இனவாதிகளோ மதவாதிகளோ அல்லாத இலக்கிய நாஜிக்கள். பாசிசத்தின் தனித்தன்மை அது தனக்கான நேரடியான நிபந்தனைகள் இல்லாத வெளிகளிலும், நாம் எதிர்பாராத சூழல்களிலும் முழுமையாகத் தோன்றி நம்மை அசரடிக்கும் என்பது.
இந்நாவலின் மையம் துணிச்சல்தான் - படைப்பாளிகள் ஒரு அசௌகர்யமான, அச்சமூட்டும் சூழலில் துணிச்சலைக் காட்டுகிறார்களா அல்லது ஒதுங்கி ஒளிகிறார்களா? முழக்கமிடுவதுதான், உயிரை மாய்ப்பதுதான் துணிச்சல் என்றில்லை. முடிந்தளவுக்கு வளையாமல் இருப்பது, கொஞ்சமாவது ரிஸ்க் எடுப்பது, தன் சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து முடிவெடுக்காமல் இருப்பதும் துணிச்சல்தான். அந்த அரசியல் ஏன் நெருக்கடியின் போது காணாமல் போகிறது என இந்நாவல் விசாரிக்கிறது.
கருத்துகள்