சிறப்புத் தீவிர திருத்தத்தின் பெயரிலான வாக்குத் திருட்டை எதிர்த்து தற்போது நடந்து வரும் நாடு தழுவிய போராட்டங்களின் ஒரு நல்விளைவு இவ்வளவு நாட்களாக ஊடகங்களும் சிந்தனையாளர்களும் ஒப்புக் கொள்ள மறுத்த ஒரு அப்பட்டமான தேர்தல் மோசடியை பிறந்த குழந்தையைப் போல அம்மணமாக பொதுவில் கிடத்தியிருக்கிறது. ஊடகங்கள் பரவலாகப் பேசத் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் இடையில் சலசலப்பு ஏற்பட்டிருக்க தயக்கம் கலையத் தொடங்கியிருக்கிறது.
இப்போதைக்கு சிந்தனையாளர்களும் பொதுவான பார்வையாளர்களும் இதை எதிர்க்கட்சியினர் கிளப்பும் பிரச்சினை என்றே பார்க்கக் கூடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே, குறிப்பாக 2024க்குப் பிறகிருந்தே, ஆதாரங்கள் வந்தபடித்தான் இருக்கின்றன. அவற்றைப் பரிசீலிக்க ஒருவித பயம் நிலவுவதைப் பார்க்கிறேன். இதை நாம் கடவுள் நம்பிக்கையுடன் ஒப்பிடலாம் - தீவிர நம்பிக்கையாளருக்கு ஒரு கட்டத்தில் கடவுள் வெறும் கற்பனையோ எனத் தோன்றத் தொடங்கினால் என்ன செய்வார்? யாரிடமும் சொல்லாமல் அதை மனதுக்குள் வைத்துக் கொள்வார். இப்படி பல கோடி பேர் வாழ்கிறார்கள். ஒருவர் தான் இத்தனைக் காலமும் பெற்றோர் எனக் கருதியோர் உண்மையான பெற்றோர் அல்லவெனத் தெரிய வந்தால் என்ன செய்வார்? பழகிய பெற்றோரையே தொடர்ந்து அப்பா, அம்மா என அழைப்பார். நமது தேசத்தை ஆளும் அரசு மோசடியால் தோன்றியது எனச் சேதி வரும்போதும் நாம் அப்படியே நடந்துகொள்வோம். ஏனென்றால் அதை ஏற்றுக் கொண்டால் அது தேசம், இறையாண்மை, மக்களாட்சி குறித்த நம் நம்பிக்கையைத் தலைகீழாக்கி விடும். நிம்மதியைக் கெடுத்துவிடும். ஒன்றியத்தில் மோடியையும், தமிழ்நாட்டில் விஜய்யையும் விரும்பாதவர்கள் கூட அவர்கள் மோசடியால் ஆட்சியைப் பிடித்திருக்கக் கூடும் எனும் எண்ணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது அது ஏற்படுத்தும் தடுமாற்றத்தை மறைக்கத்தான். நிம்மதியைப் பாதுகாக்கத்தான். இன்னொரு பக்கம், இக்கட்சிகளை ஆதரிப்போர் தம் பிரச்சாரத்தின் பகுதியாகவே மோசடியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கும் உண்மை தெரியும். ஆனால் ஒத்துக்கொள்ள முடியாது. நம் நாடு இதுவரைச் சந்தித்திராத வினோதமான நெருக்கடி இது. முன்னெப்போதும் இப்படி ஒன்று நம் வரலாற்றில் நிகழ்ந்ததில்லை.
இதையெல்லாம் கடந்துதான் இளைஞர்களின், குறிப்பாக கரப்பான்களின், போராட்டம் நடந்து வருகிறது. அவர்களுக்கு இத்தகைய சந்தேகங்கள், தடுமாற்றங்கள் இல்லை. அவர்களுக்குத் தம் கோபத்தைத் தூண்ட ஒரு தருணம் மட்டுமே போதும். அவர்களுடைய செயல்பாடுகள் பௌதீகமானவை. அவர்கள் களத்துக்கு வருவது அரசியலுக்காக அல்லது தம் கோபத்தைக் காட்டுவதற்காக அல்லது தம் நம்பிக்கையைத் தம் உடல்களால், வலியால் நிரூபிப்பதற்கு. இதை நாம் நாட்டார் சடங்குகளில் ஒன்றான பலிச் சடங்குடன் ஒப்பிடலாம். பலியிட்ட பின்னரே சமூகம் ஒரு அரூபமான உணர்வை, நம்பிக்கை முழுமையாக ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நம்பிக்கையாக காலெடுத்து வைக்கிறது. அரசியல் போராட்டங்கள் பல்வேறு இளைஞர்களின் காயங்கள், கைதுகள், எதிர்காலச் சீர்குலைவு ஆகியவற்றின் வழியாக ஒரு உண்மையை நம்மை ஒத்துக் கொள்ள வைக்கும். அவ்விதத்தில் வரும் பத்தாம் தேதி மிக முக்கியமான நாள்.
கரப்பான்கள் குறித்த என் ஐயங்கள் தீரவில்லை. ஆனால் இம்முறை அவர்கள் முன்னெடுத்திருக்கக் கூடிய போராட்டம் மிக முக்கியமானது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கானது. அவர்களுடைய உண்மையான நோக்கத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு தேர்தல் முறைகேடுகளை, முறையற்று வாக்காளர்கள் நீக்கப்பட்ட அநீதியை எதிர்க்க வேண்டும். ஒரு முழுமையான சர்வாதிகார மக்களாட்சியாக, வாழைப்பழக் குடியரசாக, நாம் மாறிவிடக் கூடாது. அதற்கு அரசியல்வாதிகள், நீதிபதிகள், அதிகாரிகள் ஒப்புக் கொள்ளும் முன் மக்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதே மாற்றம் வரும். அதற்கு கரப்பான்கள் அவசியம்.
கருத்துகள்