கடந்த சனியும் ஞாயிறும் சென்னையில் இளம் ஆங்கிலக் கவிஞர் கார்த்திக் ராஜாவின் Almost Lucid எனும் இரண்டாவது தொகுப்பை வெளியிடுவதற்காக இருந்தேன். 15 வயது மாணவர்தான் எழுதினார் என நம்ப முடியாதபடிக்கு சிக்கலான முதிர்ச்சியான கவிதைகள். மேற்கத்திய கற்பனாவாதக் கவிதைகள் (குறிப்பாக ஷெல்லி) மற்றும் இந்திய தத்துவத்தின் சாயல்களை அவற்றில் கண்டேன். ஆங்கிலத்தில் நேரடியாக எழுதுவோரால் இத்தகைய ஒரு உலகத்தன்மையை இந்தியத்தன்மையுடன் என யோசித்துக் கொண்டிருந்தேன். மாநில மொழிகளிலும் அது சாத்தியமே - தேவதேவன் ஒரு உதாரணம். ஒடிய மொழியில் எழுதப்படும் சில நவீன கவிதைகளையும் சொல்லலாம். ஆனாலும் நமது வாசகப் பரப்பு காரணமாக கவிதையின் எல்லைகள் சட்டென சுருங்கிவிடுகின்றன. நான் அவரது இரு தொகுப்புகளையும் ஒப்பிட்டு அலசிப் பேசிய உரையை யுடியூபில் விரைவில் வெளியிட முயல்கிறேன்.
கார்த்திக் ராஜா என்னுடைய நாவல் வகுப்பு மாணவரான தமிழ்ச்செல்வியின் மகன். அவர் என்னை அருமையாக கவனித்துக் கொண்டார். நிகழ்ச்சியை நேர்த்தியாக ஒருங்கிணைத்ததில் அவரது பங்கே மிக அதிகம்.
Learners Circle என ஒரு மாணவர் பயிற்சி நிறுவனம் தெற்காசியாவைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்களுக்கு என்று இணைய வழி பயிலரங்குகளை நடத்தி அதில் சிறப்பாக எழுதுகிறவர்களைப் பிரசுரிக்கிறார்கள். கார்த்திக் ராஜாவின் தொகுப்பை அவர்களே வெளியிட்டுள்ளார்கள்.
இம்முறைப் பயணத்தில் நான் காலில் காலிப்பர் அணியவில்லை. அமேசானில் வாங்கிய ஒரு மின் சக்கரநாற்காலியைப் பயன்படுத்தினேன். அது என் பயணத்தை லகுவாக்கியது. அல்லாவிடில் லொங்குலொங்கென்று நடக்க வேண்டும். இப்போது நான் பயன்படுத்தும் காலிப்பர் வலியை உண்டாக்கக் கூடியது. சில படங்களில் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்தபின் கையிலோ கணுக்காலிலோ உடைத்த விலங்கின் ஒரு பகுதியைப் பூட்டிக் கொண்டு அதன் இறுக்கத்துடனும் வலியுடனும் திரிவார்களே அப்படியான அனுபவத்தைத் தரக் கூடியது. ஆகையால் இரு நாட்கள் விடுதலையாக உணர்ந்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் அவரது அலுவலகத்தில் வைத்து உரையாட முடிந்தது. பேசி முடித்துக் கிளம்பும்போது 2009இல் நான் அவரது பதிப்பகம் வழியாக வெளியிட்ட என் முதல் புத்தகமான "இன்றிரவு நிலவின் கீழை" அலமாரியில் இருந்து எடுத்துக் காட்டிச் சொன்னேன், "இதை வெளியிடுவதற்காகத்தான் நான் 2007இல் உங்களைத் தேடி வந்தேன். உடனே அதை ஏற்றுக் கொண்டிருந்தால் நான் ஒரே ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கவிதை நூல் எழுதிவிட்டுக் கிளம்பி இருப்பேன். நீங்கள் என்னைக் கட்டுரைகள் எழுதத் தூண்டினீர்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்நூல் வந்த போது நான் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் என எழுத ஆரம்பித்து 2011இல் என் முதல் நாவலை வேறு சில நூல்களையும் வெளியிட்டிருந்தேன். இப்போது 19 வருடங்கள் முடிந்துவிட்டன. என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டது. நீங்கள் அன்று அப்புத்தகத்தை உடனடியாகப் பிரசுரிக்க ஒப்புக் கொண்டிருந்தால் நான் இவ்வளவு உரைநடை நூல்கள், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் என நாற்பதுக்கும் மேல் நூல்கள் எழுதியிருக்க மாட்டேன். அன்று என்னுடைய கனவு ஒரு கவிஞனாவதாக மட்டுமே இருந்தது."
அன்று மாலை நண்பர் காவேரி மாணிக்கத்தைச் சந்தித்தேன். வழக்கம் போல தின்பண்டங்கள் வாங்கி வந்திருந்தார். இரவுணவை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர் விடைபெற்றார்.
அடுத்த நாள் நான் படித்த சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரிக்குச் சென்றேன். மின் சக்கர நாற்காலி அங்கு சிறிது தூரம் சுற்றித் திரிய உதவியது. பல ஆண்டுகளுக்கு முந்தைய சந்தோஷத்தை, சுதந்திர உணர்வை மீண்டும் உணர்ந்தேன். என்னுடைய விடுதிக்குப் போய்ப் பார்க்கலாம் என நினைத்தால் அங்கு சக்கர நாற்காலிக்கான சாய்வுப் பாதை இல்லை. அதனால் சும்மா சுற்றி வந்துவிட்டு வனத்துக்குள் அலைந்துவிட்டு அப்படியே வாட்டர் டேங்க் வந்தேன். என்னுடைய முனைவர் பட்ட ஆய்வாளர் பேராசிரியர் அழகரசனையும் நண்பர்களும் பேராசிரியர்களுமான டேவிட் வெஸ்லி, முத்துக்கந்தன் ஆகியோரைச் சந்தித்தேன். டேவிட் வெஸ்லி என்னுடைய சில குறுநாடகங்களை முன்பு வீதி நாடக பாணியில் அரங்கேற்றியவர். முத்துக்கந்தன் என் கல்லூரிக் கால நண்பர். இப்போது சில கவனிக்கத்தக்க பரிட்சார்த்த நாவல்களை எழுதியுள்ளார். அழகரசன் ஐயா ஓய்வுக்குப் பிறகு உற்சாகமாக துறுதுறுப்பாக இருந்தார். அவர் ஸ்கூட்டரில் வந்த வேகத்தைப் பார்த்து நானே பயந்து போனேன். அதே பட்டென ஜன்னலைத் திறந்தது போன்ற களங்கமற்ற சிரிப்பு. அவர் மொழிபெயர்த்து வெளியாகி இருந்த தொகுப்பொன்றை அளித்தார் (ஆக்ஸ்பர்ட் பதிப்பக வெளியீடு).
அதன்பிறகு மைசூருக்குக் கிளம்பினேன். அடடா திறந்தநிலை சிறைச்சாலைக்குத் திரும்புகிறோமே என இருந்தது.
கருத்துகள்