நான் அண்மையில் சென்னைக்கு வந்தபோது நண்பர்களிடம் நடந்த அரட்டையில் கேட்ட முக்கிய விசயம் ஏன் இப்போது பலரும் நாம் அனுப்பும் செய்திகளைப் பார்ப்பதோ அழைப்புகளுக்குப் பதில் அளிப்பதோ இல்லை என்பதே. ஒருவித டிஜிட்டல் சோர்வு எல்லாருக்கும் வந்துவிட்டது என உளவியலாளர்கள் கருதுவதாகப் படித்தேன். பதிலளிப்பது ஒருவித உளவியல் ஆற்றலை உறிஞ்சிக் கொள்கிறது, கட்டாயம் இல்லாத போது நாம் நம் உளவியல் ஆற்றலைப் பாதுகாக்கவே நினைக்கிறோம், கவனத்தை யாருக்கும் கொடுக்காமல் இருக்க நினைக்கிறோம். ஆனால் நண்பர்கள் என்னிடம் இன்னொரு தகவலைச் சொன்னார்கள்: சமூகவலைதளங்களால் எல்லாருமே நன்றாக இயல்பாக இருப்பதாக ஒரு பிம்பம் உருவாகிறது. ஆனால் அது உண்மையல்ல. கடுமையான மன அழுத்தத்தில், நெருக்கடியில் வாழ்கிறவர்கள் கணிசமாக உள்ளனர். அதையும் மீறித்தான் அவர்கள் நம்முடன் உரையாடுகிறார்கள். அவர்களில் சிலர் ஒரேயடியாக மௌனிக்கிறார்கள். சிலர் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து கொள்கிறார்கள். சிலர் உளவியல் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு பேசக் கூட நேரம் இருப்பதில்லை. அடுத்தடுத்து வேலைகள் - அலுவலகத்திலும் வீட்டிலும் - வந்துகொண்டே இருக்கின்றன. சிலருக்குத் தம் பிரச்சினை என்னவென்றே தெரியவில்லை. சும்மா அமைதி காக்க விரும்புகிறார்கள்.
எனக்கு இதைக் கேட்கும்போது விலங்குகளின் பழக்கமொன்று நினைவு வந்தது. விலங்கென்று பொதுவாகச் சொல்கிறேனே தவிர பூச்சிகள், பறவைகள், மீன்கள் எல்லாவற்றையும் உள்ளிட்டுத்தான் சொல்கிறேன். ஆபத்து வரும்போது, நெருக்கடி அதிகமாகும்போது விலங்குகள் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்கின்றன. செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்து ஆற்றலைப் பாதுகாக்கின்றன. நாம் ஒரு புலனாகாத நிரந்தர எதிரியை கண்ணுக்கு முன் கண்டபடியே இருக்கிறோம். இது நம்மை கடும் பதற்றத்தில் ஆழ்த்துகிறது. உடனே உயிரைக் காப்பாற்ற நம் உடல் நம்மை எதிலும் அதிக ஈடுபாடு காட்டாமல் மந்தமாக இருக்கத் தூண்டுகிறது என நினைக்கிறேன். இது உடல் சோர்வாகவும் மனச்சோர்வாகவும் வருகிறது. இங்குதான் ஒரு முக்கியமான வேறுபாடு வருகிறது - நாம் சாப்பிடுவதைக் குறைப்பதில்லை. அல்லது நிறுத்துவதில்லை. நாம் பதிலுக்கு தகவல்களை உள்வாங்குவதையும் வெளியிடுவதையும் நிறுத்துகிறோம். நாம் மொழியைக் கட்டுப்படுத்துகிறோம். பேசாதவர்களாகிறோம், கேட்காதவர்களாகிறோம். நவீன உலகில் மனிதனின் மனமே அவனது உடல். அவன் தரவுகளையும் எண்ணங்களையுமே அதிகமாகப் புசிக்கிறான். ஆகையால் விலங்குகள் உணவுக்காக வேட்டையாடி உண்பதை ஒருவித ஆபத்தாகக் கருதுகின்றன. ஏனெனில் அப்போதே அவை உயிரிழக்கவும் சாத்தியம் அதிகம். நாமோ யோசிப்பதாலும் உரையாடுவதாலும் நம் நிம்மதியை, மகிழ்ச்சியை இழக்கிறோம் என அஞ்சுகிறோம். நாம் இல்லாமல் போய் விடுவோமோ என அஞ்சுகிறோம். ஆனால் மொழியைப் புசிப்பதை, உற்பத்தி செய்வதை நிறுத்துகிறோம். நாம் ஒருவித மொழி விரதத்துக்குள் போகிறோம். நேரடி உலகைவிட இவை டிஜிட்டலில்தான் அதிகமாக நடக்கின்றன என்றில்லை. நேரிலும் உரையாடுவதைக் குறைத்துக் கொள்வோர் அதிகரித்து விட்டார்கள். நீண்ட நெடிய மௌனத்திற்குள் நாம் சென்று பதுங்கிக் கொள்கிறோம்.
கருத்துகள்