முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன் கார்ஸனும் தேவதேவனும் - ஒற்றுமையும் மாறுபாடுகளும்



ஒரு கவிஞரைப் புரிந்துகொள்ள அவரைப் போன்ற ஒருவருடன் அவரை ஒப்பிட்டு மாறுபாடுகளை அலசுவது நல்ல அணுகுமுறை.
ஆன் கார்ஸனின் கவிதைகள் எனக்குத் தமிழில் ஒருவரை நினைவுபடுத்துகின்றன: தேவதேவன்.
இந்த உலகில் நமது ஆன்மீகத் தத்தளிப்பு எவ்வாறு பல்வேறு இயற்கை சார்ந்த குறியீடுகளுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என தேவதேவன் பேசுகிறார். கார்ஸன் இப்பிணைப்பு எவ்வாறு வெறும் பிரமையாக உள்ளது எனப் பேசுகிறார். இருவருக்குமான வித்தியாசம் தீவிரமான நம்பிக்கை, அது ஏற்படுத்தும் பக்தி vs அவநம்பிக்கை, அது ஏற்படுத்தும் காலத்தின், வெளியின் மீதான சுதந்திரம் என்பதில் உள்ளது.
இருவரின் கவிதைகளிலும் பூமி, வானுலகம் முக்கியமான உருவகங்கள். இருவருமே நம் இருத்தலைக் குறித்துப் பேசுகிறார்கள். தேவதேவன் பறவைகளையும், மரத்தையும் உருவகங்களாகக் கொண்டு நாம் தொடர்ந்து ஒரு ஒப்பற்ற உண்மையை நாடும் ஆன்மாக்களாக இருக்கிறோம் எனச் சித்தரிக்கிறார். பறவைகள் ஆகாயம் எனும் தூய பிரக்ஞையைத் தொட்டு அதைக் கடந்து என்னவுள்ளது என வினவுகின்றன. மரங்களும் அதையே செய்கின்றன என்றாலும் அவற்றை விட பறவைகள் சுதந்திரமானவை என்கிறார். ஏனெனில் அவற்றுக்கு வேர்கள் இல்லை. வேர்கள் என்பவை அவரைப் பொறுத்தவரையில் மனிதனின் தேகம். மனிதனின் தேகம் காலத்தில் விட்டுச் செல்லும் நினைவுகளின் சரடுகள் அவனை பூமியுடன் பிணைத்து வைக்கின்றன. பறவைகளுக்கு (அதாவது பறவையைப் போன்ற மனிதர்களுக்கு) அப்பிரச்சினை இல்லை. தேவதேவன் தன்னை மரத்துடனே ஒப்புமை வைக்கிறார் என எனக்குத் தோன்றுகிறது. மரமாக அவர் தன் எல்லைகளைக் கடந்து போகத் தவிக்கிறார். அவரது இப்பிடிவாதமே அவரது பக்தியாகிறது. உலகின் மீதான, ஆன்மாவின் மீதான, இயற்கையின் மீதான பக்தி இது.



 

கார்ஸனிடம் இப்பிடிவாதம் இல்லை. அவர் ஒரு தளர்ந்த நிலையில் சற்றே சோர்வாக எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள விழைகிறார். நிலையின்மையின், பிடிப்பின்மையின் துயரப் பாடலைப் பாடுகிறார். மனம் எனும் கப்பல் உண்மையெனும் கடலுக்குப் போக துறைமுகமே இல்லை என்கிறார். தேவதேவன் உணர்வு மேலிடலையும் தனதான தத்துவப் பார்வையையும் கற்பனாவாதத்தையும் கொண்டிருக்கிறார். அவரது கவிதைகள் அதனாலே சரியான துவக்கத்தையும், படிப்படியாக விரியும் உருவகங்களை, அவற்றை இணைக்கும் உலகப் பார்வையைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கார்ஸனோ இவ்விதமான வடிவ முழுமையை உதறுகிறார். துண்டுத்துண்டான காட்சிகள், நினைவுகள், விளக்கவோ விவரிக்கவோ படாத தனித்தனி உருகங்களை அடுக்கிறார். அவற்றின் மேல் வாசகர்கள் தமது கற்பனையை ஏற்றி விரிவுபடுத்த வேண்டும், தம் மனத்தையும் கவிதையையும் இணைத்து ஒரு கவி மனத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார். அகழ்வாய்வின் போது தொல் விலங்கின் எலும்புத் துண்டுகளை வைத்து உருவாக்கப்படும் அமைப்பைப் போன்ற கவிதைகள்.
தேவதேவன் அவரது முன்னோடிகளான வொர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், எமர்ஸன் ஆகிய கற்பனவாதிகளைப் போன்றும், நம்மூர் பக்தி மரபுக் கவிஞர்களைப் போன்றும் நமக்குப் பெரும் மகிழ்வையும் உன்மத்தத்தையும் தருகிறார். ஆனால் கார்ஸஸன் நேர்மாறாக ஒரு ஆழமான தொந்தரவை நமக்குள் விட்டுச் செல்கிறார். தேவதேவன் இவ்வுலகைக் கடந்து செல்வதைக் கொண்டாடுவதும் கார்ஸன் இவ்வுலகில் இருந்தே இதன் காலத்தினுள் கைவிடப்படுதலை, அதன் நிலைகுலைவைத் தொடர்ந்து பேசுவதுமே இவ்வித்தியாசத்திற்கான காரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...