தென்னாப்பிரிக்கா முன்பும் உலகக்கோப்பை காலிறுதி, அரையிறுதிகளில் தற்கொலை ஆட்டம் ஆடியதுண்டு. ஆனால் இம்முறை உலகக்கோப்பை ஆடிய அணி இதுவரையிலான தென்னாப்பிரிக்க அணிகளிலே தலைசிறந்தது. டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்காவில் தோன்றிய தலைசிறந்த வேகவீச்சாளர். ஏ.பி. டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர். அதோடு ஆம்லா, டுமினி, மில்லர், டூப்பிளஸி போன்ற உச்சபட்ச தரம் கொண்ட மட்டையாளர்கள். தொடர்ந்து கழுத்துயரத்துக்கு பந்தை 150 கி.மீ வேகத்தில் எகிற விடும் மோர்க்கல். இவர்கள் தான் அணியின் நியூக்ளியஸ். இது போன்ற ஒரு அபாயகர நியூக்ளியஸ் வேறெந்த அணிக்கும் இல்லை. ஆனாலும் இத்தொடரில் தென்னாப்பிரிக்கா தன் முழுசுதந்திரத்துடன் ஆடியதாக சொல்ல முடியாது. பொதுவாக சுயஎதிர்பார்ப்பும், சம்பிரதாயமான ஆட்டமுறையும் தென்னாப்பிரிக்காவின் இறுக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இம்முறை அபரிதமான திறமையும், டிவில்லியர்ஸின் ஜாலியான தன்னம்பிக்கையான தலைமை பாணியும் தென்னாப்பிரிக்காவை சற்று ஆதிக்கத்துடனே ஆட வைத்தது. ஆனால் அரையிறுதியில் அவர்களுக்கு அது போதவில்லை. முக்கியமான நேரத்தில் அணி அட்டை போல் சுருண்டு விட்டது...