எனக்கு ஒரு ஆசை உள்ளது: தமிழில் நாம் முன்வைக்கிற பல்வேறு விவாதங்களை ஆங்கிலத்திற்கு நேரடியாகக் கொண்டு போகும் வண்ணம் ஒரு ஆங்கில இதழை நடத்த வேண்டும் என்று. இணையதளமாகவே செய்யலாம். அதைக் கொண்டு நமது கருத்துக்களை பிற மொழியில் உள்ள படைப்பாளர்களிடம் கொண்டு சேர்க்கவும் அவர்களுடன் உரையாடவும் வேண்டும் என. நாம் ஒரு கன்னட, இந்தி, மலையாள, வங்க நாவலை அல்லது ஆங்கில நாவலையோ மொழிபெயர்ப்புப் படைப்பையோ வாசித்து அதைக் குறித்து நமக்குள்ளே பேசிக் கொண்டிருப்போம். அதற்குப் பதிலாக நாம் அந்தந்த மொழியைச் சார்ந்து இயங்குவோரை பொது மொழியான ஆங்கிலம் வழியாகச் சந்தித்துப் பேச வேண்டும். இதன் வழியாக நாம் உலக அரங்குக்குப் போய்விட முடியும் என நம்புகிறேன். ஏற்கனவே நம்மிடையே ஆங்கிலத்தில் வலைப்பூக்கள் எழுதுவோர் உள்ளனர். இவர்களையும் பிறரையும் ஒருங்கிணைக்கும் இதழ்களே இன்றைய தேவை.
தமிழில் நமது வாசகர்கள் எட்டு கோடி பேர்களில் 0.5-1 விழுக்காடுதான் என நினைக்கிறேன். உண்மையில் இது பிரச்சினை அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இலக்கியம், கலை சார்ந்து வாசிப்போரில் 1% நம்மால் அடைய முடிந்தால் அது மிகப்பெரிய எண்ணிக்கை. இது நடந்தால் சுலபத்தில் அயல்நாட்டினரும் நம்மை வாசிக்கத் தொடங்குவார்கள். நாம் இதற்காக மொழிபெயர்ப்பாளர்களையும் ஒரு சில ஆங்கிலப் பதிப்பாளர்களையும் இரு தரப்பையும் இணைக்கும் முகவர்களையும் நாடியிருப்பது சொர்க்கத்தில் திருமண நிச்சயம் செய்வதைப் போன்றது. அவர்கள் நம் படைப்புகள் தமிழில் எத்தனைப் பிரதிகள் விற்றன, எவ்வளவு விருதுகள் கிடைத்தன ஆகிய தரவுகளைப் பார்த்து VTV திரிஷாவைப் போலவே நம்மை டீல் செய்வார்கள். நமக்கு தலைநரைத்து நினைவு தவறியபிறகு நமது படைப்புகள் ஆங்கிலத்துக்கு வந்து காணாமல் போய்விடும். சரி ஒருவேளை இளமையிலேயே பிரசுரமானாலும் நாம் எழுதுவது நூறு நூல்கள் எனில் வெளிவருவது ஒன்றாக இருக்கும். இதைக் கொண்டு நம்மால் உலக வாசகர்களை அடைய முடியாது. எழுத எழுத அது ஆங்கிலத்திலும் தோன்றுவதே சரியானது.
இன்றுள்ள மொழிபெயர்ப்புக் கருவிகளைப் பயன்படுத்தி இதைச் சுலபத்தில் செய்ய இயலும். செலவும் பெரிதாக இல்லை. இன்று பிரதானமாகத் தேவை மொழி அறிவு அல்ல, ஐடியாக்களும் படைப்பாக்கமும் கற்பனையும் ஆர்வமுமே. இரண்டு கட்டப் பணிகள்: 1) சரியான விசயங்களைக் கண்டடைந்து உலகு தழுவிய பிரச்சினைகளை, இலக்கியங்களைப் பற்றி எழுத வைப்பது. ஏற்கனவே எழுதியவற்றில் அத்தகைய படைப்புகளைத் தேர்வு பண்ணுவது. 2) தேர்வு செய்தவற்றை குறிப்பிட்ட நிலைப்பாட்டில், பார்வையில் நின்று தொகுப்பது, செய்யறிவைக் கொண்டு மொழிபெயர்ப்பது, எடிட் செய்வது, பிரசுரிப்பது.
அடுத்து, தமிழுக்கு வெளியே உள்ள நாம் பேசுவதற்கான மேடைகளும் ஜனநாயகபூர்வமாக நமக்குக் கிடைப்பதில்லை. ஒரு சில பதிப்பகங்களின் படைப்பாளர்களும், அவர்களிலும் மிக மிகச் சிலரே, திரும்பத் திரும்ப இலக்கிய விழாக்களுக்கும், கூட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கு அழைக்கப்படுகிறார்கள். ஹிந்து போன்ற நாளிதழ்களும் மீனா கந்தசாமியைத் தாண்டி தமிழ் எழுத்தாளர்களைப் பார்ப்பதில்லை. அண்மையில் கருத்துரிமை குறித்து ஒரு விவாதம் பிரசுரமானபோது அவர்கள் இதைக் குறித்து விரிவாக விவாதங்கள் நடந்த தமிழில் இருந்து யாரையும் கருத்துக் கேட்கவில்லை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது - அவர்களுக்கு எழுதும் நபர்களும் துணை ஆசிரியர்களும் நம்மைப் படிக்க முடியாபடி நாம் இருண்ட கிணற்றுக்குள் மீன்களைப் போல வாழ்கிறோம். ஆகையால் நாம் ஆங்கிலத்தில் ஓரளவுக்குப் பேசக் கூடியவர்களைக் கொண்டு யுடியூப்பில், இன்ஸ்டாவில் சற்று பரந்துபட்டு சின்னச்சின்ன இலக்கிய விவாதங்களை நடத்த வேண்டும். நான் கிறைஸ்டில் இருந்தபோது தமிழ் எழுத்தாளர்களை அங்கு கொண்டு வந்து பேச வைத்திருக்கிறேன். அவர்கள் தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது தமிழில் பேசி இன்னொருவர் உடனுக்குடன் மொழிபெயர்க்கலாம் என்பதே நிபந்தனை. இதற்கு பெரும் ஆதரவு மாணவர்களிடம் இருந்து கிடைத்தது.
மலையாளிகளும் வங்காளிகளும் இதைக் கன்னாபின்னாவென கடந்த ஐம்பதாண்டுகளாக செய்து வருகிறார்கள். அதனாலே எல்லா விழாக்களிலும் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்புச் சந்தையில் இடம்பிடிக்கிறார்கள். இந்திய இலக்கியம் குறித்த விவாதங்களில் அவர்களுடைய பெயர்கள் உடனடியாக இடம்பெறுகின்றன. நாம் செய்கிற தவறு இப்பணியைத் தனித்தனியாக மட்டும் செய்கிறோம் என்பது. "நான் மட்டும் முன்னேறினால் போதும்" என நினைக்கிறோம். எந்தச் சமூகமும் அப்படி உருப்பட முடியாது.
நாம் சொல்வதைச் செய்ய நிறைய பணம் தேவையில்லை. சொற்பமாகத்தான். ஆனால் நேரம் செலவிட்டு உழைக்க வேண்டும். அதற்கு ஒரு சிறு குழு வேண்டும். நான் இதை என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறேன். யாரும் கேட்ட பாடில்லை. என் கைகளைப் பற்றிக் கொள்ள இரண்டு கைகள் வந்தால் நானே இதைச் செய்து காட்டிவிடுவேன்.
நம்மால் ஏன் இதைச் செய்ய முடியாது? தமிழுக்கு நாம் செய்கிற மகத்தான தொண்டு அல்லவா இது!
தன்னார்வலர்களாக இணைய விருப்பமுள்ளோர் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தகுதி ஆங்கிலத்தில் ஓரளவுக்கு வாசித்துப் புரிந்துகொள்ளும் திறன் மட்டுமே. முதல் சந்திப்பை அடுத்த மாதம் ஒருங்கிணைப்போம்.
கருத்துகள்