கரன் தாப்பர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எடுத்த பழைய நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் அரசியல் வாழ்க்கை என்றாலே ஏற்ற இறக்கமானதே, இன்று வெற்றி பெறுவோர் நாளை தோல்வி அடைவார், நாளை தோல்வி அடைபவர் அதற்கு அடுத்து வெல்வார் என்று சொல்கிறார். எனக்கு இன்றைய அரசியல் நிலை எந்தளவுக்கு மாறிவிட்டது என வியப்பேற்பட்டது. இதை ஜெயலலிதா நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். முன்பு நீங்கள் ஒரு தேர்தலில் தோற்றால், ஒன்றிய அரசின் காலாட்படைகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியோர் உங்களுக்கு எதிராக வழக்குகள் புனைந்தாலும், ஊடகங்கள் உங்களை மோசமாகச் சித்தரித்தாலும் நீங்கள் தேர்தலில் நின்று மக்களை ஏற்க வைத்து வென்றுவிட்டால் எல்லாமே சரியாகிவிடும். மக்களிடம் செல்வது ஒரு திறந்த வாய்ப்பாக கட்சிகளுக்கு அன்று இருந்தது. இன்று அது முழுக்க மாறிவிட்டது. அண்மையில் ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்களில் கிட்டத்த 10% மேல் தேர்தல் ஆணையம் தூக்கிவிட்டது. மோடியும் தான் 100 வயது வரை ஆள வேண்டும் என விரும்புகிறார். அது சாத்தியமே!
மோடி இன்னும் பத்து ஆண்டுகள் ஆண்டால் இந்த வாக்காளர் நீக்கச் சதவீதம் 20-30% ஆக வளரக் கூடும். அவர் தொடர்ந்து ஆண்டால் பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கக் கூடிய நிலை ஏற்படலாம். அப்போது பாஜக ஆதரவாளர்கள் இந்தியாவின் உண்மையான மக்கள் தொகை 30-40 கோடி மட்டுமே, மீதமுள்ளோர் குடியேறிகள் என்று கூறுவார்கள். கூடுதலாக எந்திரம் செய்யும் மோசடிகள் வேறு. அப்போது எதிர்க்கட்சிகளும் மக்களும் நினைத்தாலும் அவரை முறியடிக்க முடியாது. யாராலும் மக்களிடம் சென்று நியாயம் கேட்டு மீண்டும் வர முடியாது. மக்களே இருக்க மாட்டார்கள்.
ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் நான் மக்களிடம் சென்று வென்று வருவேன் என முழு நம்பிக்கையுடன் சொல்வாரா? ஜெயலலிதாவை விடுங்கள், எத்தனையோ மாநிலத் தலைவர்கள் முன்பு துணிந்து ஒன்றியத்தை எதிர்த்திருக்கிறார்கள். தேசியத் தலைவர்கள் இந்திராவைப் போன்றோரை எதிர்த்து சிறை சென்று தேர்தலில் அவரைப் பின்னர் முறியடித்திருக்கிறார்கள். இப்போது "மக்களிடம் செல்வோம், வாக்கு கேட்டு எங்களை நிரூபிப்போம்" என்பதான தன்னம்பிக்கை மாநில, தேசிய தலைவர்களுக்கு உண்டா? சந்தேகம்தான்.
காலம்தான் எவ்வளவு வேகமாக மாறிவிட்டது! என்னவொரு துயரமான மாற்றம்
கருத்துகள்