முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் - அருள் ஸ்காட்

நண்பர் அருள் ஸ்காட் என் சமீபத்தைய நாவலுக்கு எழுதியுள்ள விமர்சனம். அவர் இணையதளத்தில் இருந்து இங்கு பகிர்கிறேன்
ஆர். அபிலாஷின் சமீபத்திய நாவலான ”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” வாசிக்கும் போது அதை ஒரு குறிப்பிட்ட நாவல் வகைமைக்குள் புகுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது. இது துப்பறியும் நாவலா, திரில்லர் வகைமையா அல்லது வெறுமனே நாவல் மட்டுமா என்ற கேள்வி எழுந்துகொண்டிருக்கிறது.

 எழுத்தாளன் இந்த வகைமையில் தான் தன் கதையை பரிசோதிக்க போகிறேன் என்று முயற்சி செய்து ஒரு கதையை உருவாக்கி விடுகிறான் ஆனால் கதை தான் எதிர்பார்த்த வகைமைக்கு மீறி எதுவும் அல்லாத ஒரு வகைமையில் நிற்கிறது. இதற்கு காரணம் கதையை பரிசோதனை என்ற முயற்சியில் செய்ததினால் உண்டானதாகும். விளைவு வகைமைப்பாட்டிற்கு வெளியில் பிரதி தன்னை நிறுத்திக் கொள்கிறது. இங்கு கேள்வி பரிசோதனையில் படைப்பிற்க்கான உயிர் அதில் தக்கவைக்கப்படுகிறதா அல்லது பரிசோதனையில் எதுவும் அற்ற நிலையில் நிறுத்தப்படுகிறதா என்பதுதான்.

பொதுவாக கவிதைக்கு மாத்திரமே உயிர் சம்பந்தமான விவாதம் வைக்கப்படும். ஆனால் நாவல் வடிவத்தில் இந்த மையமான ஒரு உயிர்நிலையை படைப்பாளன் உருவாக்குவது என்பது மிக பிரயத்தனமாக காரியம். கவிதைக்கான ஓர் ஆன்மாவை தக்கவைப்பது சற்று எளிதான காரியம், காரணம் அதில் தொடர்ச்சியான செய்முறைப் பயிற்சியில் தன்னையும் அறியாமல் ஓர் உயிர் நிலை வடிவம் அடைகிறது. அதே உயிர் நிலையை மீண்டும் கொண்டுவர கவிஞன் முயன்றாலும் அது முடியாது காரணம் கவிதை உணர்வு மிகுதியில் வெளிப்படும் ஒரு படைப்பு அவ்வளவுதான். ஆனால் நாவல் வகைமையில் இந்த நிலையை எட்டுவது மிகசிரமமானது. அது மாபெரும் கட்டிடத்தை கட்டுவதற்கு சமம் அங்கு உணர்வுகள் அல்ல மெய்யறிவு பெரும் பங்கு வகிக்கிறது. இங்கு எழுத்தாளன் தன் படைக்கும் திறனுக்கும் மீறி கலை என்ற நிலையை இந்த கட்டுமானத்தில் அடைய முயற்சிக்கிறான். எனவே நாவல் இந்த இரண்டு நிலையில் அதாவது பிரம்மாண்டத்தைக் கட்டமைக்கும் ஒரு முயற்சி மற்றும் அதில் ஒரு உயிர் நிலையை தக்கவைக்க அக்கலைஞனின் தேடல். இவ்விரண்டு முயற்சியில் நாவல் தன்னை கலை வடிவமாக இனம் கண்டு கொள்ள வேண்டி இருக்கிறது.
அவ்வாறு ஒரு பிரதி உயிர் நிலையை அடையும் போது அங்கு அந்நாவலுக்கான அந்தஸ்து வெறுமனே நாவல் என்ற நற்பெயர் மட்டுமே. அத்தகைய நிலையில் அதனை துப்பறியும் கதை என்றோ, சுவாரசியக் கதை என்றோ அழைக்க முடியாது. இன்று வரை குற்றமும் தண்டனையும் ஒரு சிறந்த உலக இலக்கியமாக நாவல் என்ற நிலையில் வைத்துதான் பார்க்கப்படுகிறதே தவிர அதை யாரும் ஒரு திரில்லராக வாசிப்பதில்லை.  இலக்கிய நிலையை அடைந்த பிரதிக்கு எந்த வகைமைப்பாடும் கிடையாது. இதையேதான் ஜெயமோகனின் உலோகம் நாவலும் சிருங்காரத்தின் புயலிலே ஒரு தோனி நாவலும் தாங்கள் அடைய வேண்டிய வகைமைக்குள் சிக்காமல் தங்களை பொதுப்படையில் நாவல் என்ற பெயரிலேயே இன்னும் அடையாளங்காண்கின்றன. அவர்கள் முயற்சித்தது என்னவோ ஒரு சிறந்த துப்பறியும் நாவல் வகைமையில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். ஆனால் வகைமையே ஒரு பரிசோதனை என்றான பின்பு அங்கு வகைமை தன்னை ஹோல்ம்ஸ் ஆகவோ, அல்லது ஹாட்லி சேசாகவோ தன்னை வைத்துக்கொள்ள முடியாது. இந்த வகையில் அபிலாஷ் தன் கதையை ஒரு திரில்லர் வடிவத்தில் முயற்சி செய்து அது கடைசியில் அபிலாஷின் கவிதையியலில்தான் ஒரு பரிசோதனையாக செய்யப்பட்டிருக்கிறதே ஒழிய அது திரில்லரின் இலக்கண முறைமைக்கு முற்றிலும் தூரமாய் இருக்கிறது. இங்கு திரில்லரை விட அபிலாஷின் கவிதையியல் பரிசோதனையே பெரிதுபட்டு நிற்கிறது.
இக்கதை பீடியோபைலின் சிறுமிகளின் மீதான பாலியல் தொந்தரவுகளும் அதைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளையுமே மையமாகக் கொண்டிருக்கிறது. ஒரு சிறுமி தான் தினமும் ஒரு நீள நிற மனிதனால் இம்சிக்கப்படுவதையும் அதை தொடர்ந்து ஒரு நீல நிற மனிதன் தப்பியோடுவதையும் பலர் பார்க்கிறார்கள். அந்த நீல நிற மனிதன் யார் என்ற துப்பு துலக்குதல் கதையை சுவாரசியமாக நகர்த்துகிறது. சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு ஆளாகிறார்கள் மற்றும் அதை சுற்றி கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த நீல நிற மனிதன் மாத்திரம் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. கதையில் துப்பறியும் போலீஸ் அதைத் தொடர்ந்து ஒர் கதை நாயகனாக தன் முயற்சியில் பேராசிரியர் ஒருவர்தான் இதற்கு எல்லாம் காரணம் என்று கண்டுபிடிக்கிறான். ஆனாலும் முக்கிய குற்றவாளி அகப்படாதது கதையை இன்னும் முன்னுக்கு இழுக்கிறது. பேராசிரியர் தான் குற்றவாளி என்று கைது செய்யப்படுகிறார். இதில் ஐ ஐ டி வளாகத்தில் பேராசிரியரின் உரை கதைக்கு மிகவும் சிறப்பை தருகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி வேறொருவன்.  கதையில் துப்பறியும் போலிஸ் குற்றவாளியை கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் அதன் க்ளைமேக்ஸ்.
இந்த அளவில் ”கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்” வெறுமனே ஒரு வழக்கமான துப்பறியும் கதைதான். ஆனால் பிரதிக்குள் பயணிக்கும் போது அதில் கையாண்டிருக்கும் பரிசோதனை ஒரு வழக்காற்றில் இருந்து கதை வேறொரு தலத்தில் செயல்படுகிறது. கதை கொடுக்கும் வாசிப்பு உணர்வு இதில் மிகவும் வித்தியாசம். துப்பறியும் கதைக்கும் கூடுதலாக எதோ ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கிறது. அது முதலாவது உளவியல் சார்ந்த பரிசோதனை. வழக்காற்றில் இருக்கும் துப்பறியும் நாவல்களில் கதை நடத்தப்படும் போது கதை தனியாகவும் வாசிப்பு தனியாகவும் இருக்கும். கதையும் வாசிப்பும் இரண்டுபட்ட நிலையில் இயங்குகின்றன. ஆனால் எப்போது உளவியல் என்ற பரிசோதனை நடத்தப்படும் போது கதை நடத்தப்படுதல் வாசிப்பு என்ற இரண்டும் வேறுபட்ட செயல்பாடுகளாக இல்லாமல் அவைகள் இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. இங்கு கதைக் கரு என்று தனியாக எதுவும் இல்லை. கதைக்கரு ஆரம்பம் நடுப்பகுதி முடிவு என இருந்து தேவைக்கு ஏற்ப அவைகள் அழகியல் காரணத்திற்காக மாறி மாறி வடைவமைக்கப்படுகின்றன. இங்கு கதை கதைக்கருவில் நிலைக்கொண்டிருக்கிறது. ஆனால் உளவியல் என்ற பரிசோதனை இந்த கதையில் நடத்தப்படும்போது கதை என்பது நாவலின் கருவில் இல்லாமல் அது வாசிப்பிற்கு இடம்மாற்றப்படுகிறது. இங்கு கதையும் அதின் அர்த்தமும் பிரதிக்குறியது அல்ல மாறாக வாசிப்புக்குறியதாக மாறுகிறது.
இவ்வகையில் இந்த நாவலில் யார் குற்றவாளி என்பது துப்பு துலக்குதல் அதன் கதைக்கருவில் இல்லை மாறாக வாசகனின் உளவியல் ஓட்டத்தில் இடம் பெறுகிறது. கதையின் இறுதியில் கண்டுபிடிக்கப்படும் குற்றவாளி ஒருவர் மட்டும் அல்ல இதில் அனைவரும் சந்தேகிக்க படுகிறார்கள். இதற்கும் சற்று முன்னேறி சென்று கதையின் குற்றவாளி கதையில் உள்ள பாத்திரங்களாக இல்லாமல் யார் துப்பு துலக்குகிறார்களோ அவரே கொலை செய்த குற்றாவாளியாக இருப்பார். இந்த நாவலில் நாயகனே கடைசியில் குற்றவாளியாக்கப்படுகிறான். இது போன்ற ஒரு பரிசோதனையை அகத்தா கிறிஸ்டி தன் நாவலான ரோஜர் அக்ராய்டுவில்  செய்து இருப்பார். இதில் வழக்கத்திற்கு மாறாக கதை அதன் கதைக்கருவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கதையாடல் என்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. ஆனால் அபிலாஷின் நாவல் கதையின் குற்றவாளியை கதையில் அல்ல மாறாக கதையாடல் நடைபெறுகிற வாசகனின் உளவியலில் தேடுகிறது. இங்கு உளவியல் நிலையில் கதை குற்றவாளியை பிரதிக்கு வெளியில் சென்று வாசிப்பில் வாசகனையே குற்றவாளியாக கண்டுபிடிகிறது. கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்பது கதையின் இறுதியில் பீடியோபைல் என்ற குரூரம்தான் குற்றாவாளி அது எல்லாரின் ஆழ்மனதில் உள்ளன என்ற உண்மையை கதை கண்டுபிடிக்கிறது. இந்த குற்றந்தீர்ப்பிலிருந்து வாசகர் எவராலும் விடுவிக்கப்பட முடியாது. காரணம் கதை பிரதியில் அல்ல மாறாக அது வாசிப்பில் இருக்கிறது. அப்படிப்பட்ட வாசிப்பில் கண்டுபிடிக்கப்படும் குரூர உணர்வு யோக்கியன் அல்லது அயோக்கியனுக்குறியது அல்ல அது எல்லாருக்குமான பொதுப்படையான எதிர்மறையான உணர்வு. அது வாசிப்பில் துப்பறிப்படுகிறது.
கதை அதன் பிரதியிலிருந்து உளவியலுக்கு நகர்த்தப்படும்போது பிரதி மற்றொரு முக்கியமான பரிசோதனையைக் கண்டடைகிறது. எந்தவொரு கதையும் அதீத உளவியலுக்குள் உள்ளாகும் போது அது வேறொரு பரிமாணத்தை அடைகிறது. உளவியல் என்ற நிலையில் இருந்து கதை மாயத்தில் நடைபெற ஆரம்பிக்கிறது. கதையில் மர்ம குற்றவாளி நீல நிறத்தில் வருகிறான். இந்தக்கதையில் வரும் மர்மமான குற்றவாளி மாத்திரம் நீலநிறமானவன் அல்ல முழுக்கதையும் நீலத்தால் வியாபிக்கப்படுகிறது. வாசிப்பின் இறுதியில் நம் வாசிப்பு உளவியல் முழுவதும் நீல நிறத்தால் வர்ணம் பூசப்படுகிறது. இப்படிப்பட்ட மாயத்தில் கதை நடத்தப்படுவது அதீத உளவியல் பரிசோதனையினால் ஏற்படுகிற விளைவாகும்.

இவ்வாறு கதை பரிசோதனையில் நடத்தப்படும் போது அது வெறுமனே உயிரற்ற பொழுது போக்கு கதையாக துப்பறியும் கதையாக இல்லாமல் ஒரு உயிர் தன்மையை தன்னில் அது இறுத்திக்கொண்டு நாவல் என்ற பொதுத் தலத்தில் இயங்குகிறதாக மாறுகிறது. வழக்காற்றில் உள்ள துப்பறியும் கதை மீண்டும் மீண்டுமான வாசிப்பை கோருவதில்லை காரணம் அதன் கதை பிரதியில் இருக்கிறது அங்கு கதை உயிரற்ற நிலையில் ஒருமுறை வாசிப்பிற்க்கான பிரதியாக மாத்திரமே இருக்கிறது. ஆனால் பரிசோதனையில் உருவாக்கப்பட்ட கதை மீண்டும் மீண்டுமாக வாசிப்பை கோருகிறது. ”கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்” அப்படிப்பட்ட வாசிப்பை நிச்சயம் கோருகிற தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் உயிர்த்தன்மை வாசகர்களாலும், விவாதங்களினாலும் மேலும் வெளிக்கொணரப்படும் என்று நம்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...