கரப்பான் பூச்சிக் கிளர்ச்சியைப் பொறுத்தவரையில் பரவலாகப் பேசப்படாத ஒரு விசயம் இஸ்லாமியரின் இன்மை. இக்கிளர்ச்சி பெரும்பாலும் இந்துப் பெரும்பான்மை இளைஞர்களால் ஆனதாகத் தோன்றியது. மதநல்லிணக்கமோ மதசார்பின்மையோ வலியுறுத்தப்படாதது. சிறுபான்மையினர் நலன் ஒரு விழுமியமாக முன்னிறுத்தப்படாதது. இது என்னதான் தேர்வுத்தாள் கசிவு குறித்தப் போராட்டம் என்றாலும் பிரதான போராட்ட வெளிக்கு வெளியே ஒரு பக்கம் மோடி எதிர்ப்பு, கேலி, பகடி, கொண்டாட்டம் என விரிவடைந்தது. இன்னொரு பக்கம் ஜெய் பீம் என தலித் விடுதலைப் பரிமாணமும், பாரத் மாதா கீ ஜெய் என இந்துப் பெரும்பான்மைவாத தேச பக்திக் கோஷங்களும் எழுப்பப்பட்டன. சிறுபான்மையினரின் இல்லாமையை நாம் இக்கிளர்ச்சியின் கொண்டாட்டத்தில் கவனிக்கவில்லை என்பதே ஒருவிதத்தில் இத்தேசத்தின் போதத்தில் உள்ள 'இந்துப் பெரும்பான்மையே இந்தியா' எனும் கிறக்கத்தைக் காட்டுகிறதோ எனும் சந்தேகம் எழுப்புகிறது. இல்லாவிட்டால் இதைப் பலரும் சுட்டிக் காட்டி விமர்சித்திருப்பார்களே. இந்து + இந்தியா - பாரதம் என்பதே அசலான இந்தியா எனும் கட்டமைப்பை இக்கிளர்ச்சி மறைமுகமாக ஏற்றுக் கொண்டது ஒருவிதத்தில் இதன் மகத்தான வெகுஜன ஏற்புக்கும் வெற்றிக்கும் வழிவகுத்தது. சரி, இது ஏன் இப்படி அமைந்தது என்பதை நாம் விசாரிக்க வேண்டும்:
டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் இஸ்மத் அரா சொல்லியுள்ளதன்படி தில்லியில் கரப்பான்கள் போராட்டங்களைத் திட்டமிட்டபோதே அவற்றில் கலந்துகொள்ள வேண்டாம் என மசூதிகள் வழியாகவும், வாட்ஸாப், இன்ஸ்டா குழுமங்களின் வழியாகவும் இஸ்லாமியருக்குச் சேதி விடப்பட்டிருக்கிறது. இஸ்லாமியரைக் காவல்துறை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை, தொடர் ஒடுக்குமுறை எனத் துன்புறுத்துவர் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஷஹீன் பாகில் உள்ள மசூதியில் ஒரு இமாம் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பேசுகையில் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதை விட இஸ்லாமிய இளைஞர்கள் கல்வி, இஸ்லாமிய சமூக ஈடுபாடு வழியாக மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். பட்லா ஹவுஸில் உள்ள மஸ்ஜித் ஷஹாபில் அஹமத் எனும் இமாம் இப்போராட்டத்தின் உத்தேசம், இதை நடத்துவோரின் நடத்தை, வன்முறைச் சூழலைக் கருத்திற்கொண்டு இதில் கலந்து கொள்வது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு வகையான எதிர்-உணர்வுகள் இருந்தன:
ஒன்று, துவக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி பாணியிலான இந்துப் பெரும்பான்மைவாதப் போக்கை இந்த கரப்பான் அமைப்பு கொண்டிருந்தது. நிர்வாகிகள் தில்லிப் போராட்டத்தின்போது “ஆஸாதி” போன்ற இஸ்லாமிய ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கங்களைத் தவிர்க்கும்படி வலியுறுத்தினர். அவர்களுடைய நியாயமானது இஸ்லாமிய சார்புக் குரல்கள் இப்போராட்டத்தை ஒரு தேச விரோதப் போராட்டமாக பாஜக சித்தரிக்க வழிவகுக்கும் என்பதே. இஸ்லாமியர் தம் உரிமைகளை வலியுறுத்தினால் அதை பாஜக ஒரு பிரச்சினையாக்கும் என்பதால் இஸ்லாமியர் அமைதியாகப் போக வேண்டும், இந்துப் பெரும்பான்மைவாதத்தை மனதளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஆம் ஆத்மி - கரப்பான் நிலைப்பாடு. இதை ஒரு மென் இந்துத்துவா அரசியல் என்று விமர்சகர்கள் பார்க்கின்றனர். ஆக, இஸ்லாமிய அமைப்புகளும் மதத்தலைவர்களும் இந்தப் போக்கைக் கண்டுகொண்டு விலகி நின்றதில் ஒரு நியாயமிருந்தது.
இரண்டு, சி.ஐ.ஏ போராட்டங்களின்போதே இஸ்லாமிய சமூகம் வேட்டையாடப்பட்டு கடுந்துன்பங்களை அனுபவித்திருந்தது. அவர்கள் மேலும் பாஜகவின் பசிக்கு இரையாக்கப்பட விரும்பவில்லை.
அதேநேரம் போராட்டங்கள் அடுத்தடுத்த நாட்களில் வலுத்திட இஸ்லாமிய தன்னார்வலர்கள் உணவளித்திட போராட்டத் திடலுக்கு வந்தனர். அப்படி வந்த இளைஞர் ஒருவர் கைது பண்ணப்பட்டதுடன் அவரது வீடு ரெய்ட் செய்யப்பட்டு குடும்பத்தினரும் கைது பணப்பட்டனர். இருந்தாலும் அங்கங்கே இஸ்லாமிய மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தோன்றினர். பிற இஸ்லாமிய தன்னார்வலர்கள் தண்ணீர் பொத்தல்களை வினியோகித்தனர். இதை அபிஜீத் தீப்கே மேடையில் பாராட்டினார். அவர் விடுத்த சேதி முக்கியமானது: தம் அடையாளத்தை வலியுறுத்தி உரிமைகளைக் கோரி இந்துப் பெரும்பான்மைக் கட்சிகளுடன் அவர்கள் சண்டையிடுவதை கரப்பான்கள் ஆதரிக்கவில்லை. மாறாக தம் மத அடையாளத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்துப் பெரும்பான்மை (கரப்பான்) மாணவர்களுடன் அவர்கள் இணைவதை அவர் ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறார். இதுவும் ஒரு மென் இந்துத்துவ நடவடிக்கைதாம். (தமது அரசியல் நிகழ்வுகளிலும் இவ்வாறுதாம் இஸ்லாமியர் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.) அதாவது கொள்கைத் தூய்மைப்படுத்தல் (ideological sanitization)
அதேநேரம் தில்லி அல்லாத பிற போராட்டத் திடல்களில் - ஹைதராபாத் குறிப்பாக - அதிக எண்ணிக்கையில் இஸ்லாமிய மாணவியரைப் பார்க்க முடிந்தது. அதாவது ஹந்தர் மந்தர் திடலில் அவர்களுடைய மேடையில் இருந்தும், வேறு மாநிலங்களுக்கும் போராட்டம் நகர நகர கரப்பான் நிர்வாகிகளின் கட்டுப்பாடும் அரசின் கண்காணிப்பும் குறைந்து எல்லாரும் சுதந்திரமாகப் பங்கேற்க முடிந்தது.
இதே காரணத்தினாலே கரப்பான் நிர்வாகிகள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தம் போராட்டத்தில் கலந்துகொள்வதை விரும்பவில்லை, அவர்களுடன் தோள் கொடுக்க உத்தேசிக்கவில்லை. இதுவும் பாஜகவின் கதையாடலுக்குள் சிக்காமல் இருப்பதற்காக எனச் சொல்லப்பட்டாலும் இதையும் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம்:
ஆம் ஆத்மி கட்சி பொதுவாகவே இடது தாராளவாத அரசியலின் கொள்கைகளுக்குள் செல்லாது. அது இந்துப் பெரும்பான்மைவாதம், இந்துத்துவா, சாதிய மேலாதிக்கம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்க்கவோ சமத்துவம், சகோதரத்துவம், மதசார்பின்மை, சாதி ஒழிப்பு ஆகிய இலக்குகளை முவைக்கவோ செய்யாது. இவற்றுக்குப் பதிலாக சீரான நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி ஆகிய இலக்குகளையே ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். ஆம் ஆத்மியில் இருந்து வந்தவர்களே கரப்பான் கட்சியின் தலைவர்கள் என்பதாலும் அதே மரபணுவைக் கரப்பான்கள் கொண்டிருப்பதாலும் அவர்களுடைய தலைமை காங்கிரஸ், இடதுசாரிகளின் கொள்கைகளை முன்னெடுக்கவோ அவர்களுடன் கூட்டு சேரவோ அவசியமில்லை எனக் கருதுகிறார்கள். இதுவே இக்கிளர்ச்சியைத் தனித்துவமாகக் காட்டியது - பொத்தாம்பொதுவான அதிகார எதிர்ப்பு, நிர்வாகக் கோளாறுகளை மட்டும் இலக்காக்குவது, உலகமே பற்றியெரிந்தாலும் (தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு) கவலைப்படாமல் இருப்பது, இந்தி தெரியாதவர்கள் பற்றிய கவலையற்ற இந்தி மையம் கொண்ட முழக்கங்கள் என இது அமைந்திருந்தது.
ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அரசியலுக்கு வருவதே ஆர்.எஸ்.எஸ் நிர்வாகம், தொண்டர்களின் உதவியுடன்தான். அதன் பிறகு பாஜக ஆட்சிக்கு வர ஆம் ஆத்மியின் தேர்தல் அரசியலில் வென்று தில்லியிலும் பின்னர் பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். இதில் சுவாரஸ்யமான சேதி ஆம் ஆத்மியினர் காங்கிரஸ் பாணி அரசியலைக் கையில் எடுப்பதோ தமக்கென தனியான கொள்கைகளை, நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதோ இல்லை என்பது. மாறாக அவர்கள் ஒரு அதிகாரவர்க்க நிர்வாக அரசியலைக் கையில் எடுத்தார்கள்; கருத்தியலைப் பொறுத்தமட்டில் அவர்கள் பாஜகவுடன் முரண்படாமல் ஒரு மென்நிலைப்பாட்டை அவர்களை ஒட்டி எடுத்தார்கள். தமது வாக்காளர் திரளானவர்கள் சற்றே வலதுசாரிச் சார்பு கொண்ட மத்திய, மேல்மத்திய இந்துப் பெரும்பான்மையினர் என அவர்கள் கருதியதால் அவர்கள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது தம்மை அவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் என அஞ்சினார்கள். ஆகையால் சிறுபான்மையினர் ஆதரவு, முற்போக்கு சிந்தனைகள், பகுத்தறிவு, மதவாத, சனாதன, சாதிய எதிர்ப்பைத் தீண்டத்தகாத கொள்கைகளை எடுத்துக் கொண்டார்கள். கார்ப்பரேட் சார்பு வாக்காளர்களும் நிதியளிக்கும் முதலீட்டாளர்களும் அந்நியப்படக் கூடாது என்றே அவர்கள் இடது சக்திகளையும் தம் பக்கம் இழுப்பதோ தொழிலாளர், விளிம்புநிலையினர் நலனைப் பேசுவதோ, வறுமை, ஏற்றத்தாழ்வு ஒழிப்பைப் பற்றிப் பேசுவதோ இல்லை. நீங்கள் இந்த நிலைப்பாட்டை கரப்பான்களின் தலைமையிடமும் பார்க்கிறீர்கள் - அவர்களிடம் பத்திரிகையாளர்கள் நிர்வாகம், ஊழல் தாண்டி எதையாவது கேட்டால் “நோ கமெண்ட்ஸ்” என்று சொல்லிக் கிளம்பி விடுகிறார்கள்.
இதனால்தான் கரப்பான் கட்சியின் தலைமையின் நடத்தை நமக்கு பாஜகவை நினைவுபடுத்துகிறது. ஆனால் நிஜத்தில் அவர்கள் பாஜகவின் கொள்கைப் பரப்புக்குள் தோன்றிய கிளைக்கட்சியான ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் என்பதே இந்த இந்துத்துவ சாயலின் காரணம். அதுவே அவர்கள் இஸ்லாமியரை, அவர்களுடைய அரசியலை தம் மேடைகளில் ஒலிக்காமல் பார்த்துக் கொள்ளக் காரணம். அதனாலே ஜெய் பீம், அம்பேத்கர் படங்கள் பயன்படுத்தப்படும்போதும் இந்துத்துவா, சாதிய எதிர்ப்பு பேசப்படாமல் இருக்கிறது. இவ்வாறு தலித்துகளை சாதிய ஒழிப்புக்கு, இந்து சனாதன எதிர்ப்புக்கு வெளியிலான ஒரு ‘சாதியாக’ மட்டுமே முன்வைப்பது பாஜகவுக்கும் அவர்களுடைய பாணியில் உருவான ஆம் ஆத்மிக்கும் சாதகமாக இருக்கிறது.
இவ்வளவு அரசியல் தேர்வுகளுக்கும் அப்பால் இக்கிளர்ச்சி இளைஞர்களின் அதிகார மைய எதிர்ப்பு எனும் வகையில் வேறொரு வடிவம் பெற்றது, கரப்பான் தலைமையின் அரசியல் எல்லைகளைக் கடந்து போனது, தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் சரோஜ் கிரி சொல்வதைப் போல படிக்காத கீழ்நிலைத் தொழிலாளர்கள், வேலையில்லாத திரளின் ஆதரவைப் பெற்றது இதை ஒரு தனித்துவமான வரலாற்று நிகழ்வாக்குவதுடன் பாஜக அரசுக்குப் பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், இதுதான் நமது அடுத்தடுத்த போராட்டங்களின் வடிவம் எனில் நாம் பார்க்கப் போவது ஒரு ஜென் ஸீ முன்னிலைப்படும் இந்துப் பெரும்பான்மைவாதத்தை, மென்-இந்துத்துவாவை ஏற்கும், வளர்ச்சி, நிர்வாகம் ஆகிய கார்ப்பரேட் விழுமியங்களை மட்டுமே கொண்டாடும் ஒரு மக்கள் அலையை மட்டும்தானா, இது நமது வருங்கால தேர்தல்களை பாதிக்குமெனில் அங்கு முற்போக்கு, மதசார்பின்மை அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு மற்றொரு அரசியல் ஆதிக்கம் செய்யுமா எனும் அச்சம் விளைகிறது.
மோடி அரசிற்கான பின்னடைவை மட்டுமே கருத்திற்கொண்டு இதைக் கொண்டாடும்போது நாம் வேறு அரசியல் விளைவுகளையும் பரிசீலிக்க வேண்டும்.
கருத்துகள்