ஒரு நண்பரின் திருமண வீட்டுக்கு சென்றிருந்தேன். கிறித்துவக் கல்யாணம். மாலை நேரம். கறி விருந்து. நிரம்பியிருந்த விருந்தினர் எங்கள் ஊர்க்காரர்களைப் போன்றே தோன்றினர். கழுத்து நிறைய நகை, முகத்தில் அப்பிய பவுடர், ஜரிகைப் புடவை, கூட்டமாய் உரசியபடி நடக்கும் பாணி, சத்தமான பேச்சு…இப்படி இப்படி. சென்னைக்காரர்களை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பாவையை தாழ்த்திக் கொள்வார்கள். தோளை லேசாய் சாய்த்து முகவாயை தூக்கித் தான் நடப்பார்கள். எந்த காரணம் கொண்டும் தம் அசைவுகளால் இப்பிரபஞ்ச ஒழுங்கு குலைந்து விடக் கூடாது என அதிகவனமாய் இருப்பார்கள். இம்மக்கள் அப்படி அல்ல நீங்கள் பார்த்தால் திரும்ப நேராய் கண்ணைப் பார்ப்பார்கள். புன்னகைத்தால் வந்து பேசுவார்கள். போலி கௌரவம், அகந்தை, அந்நிய பாவனை அற்றவர்கள். அதனாலே எனக்கு அந்த இடமே பிடித்திருந்தது. ஒருவித நிம்மதி, சொந்த இடத்தில் இருப்பது போன்ற குளிர்ச்சி. மேடையில் மணமகன், மணமகள் புழுங்கிக் கொண்டு வணங்கி புன்னகைப்பதை பார்த்தபடி நேராய் பந்தியை நோக்கி நடை கட்டினோம். அங்கோ சரியான தள்ளுமுள்ளு நிலைமை.