நேற்று (12 ஆகஸ்ட் 2022) நியுயார்க்கில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் பேசச் சென்றிருந்த எழுத்தாளர் சல்மான் ரஷ்டி ஹாதி மட்டார் எனும் 24 வயது இளைஞரால் கழுத்திலும் வயிற்றிலும் பலமுறைகள் குத்தப்பட்டார் . ரஷ்டியின் கையில் உள்ள நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன , அவரது ஈரல் காயம்பட்டுள்ளது , அவர் தனது ஒரு கண்ணை இழந்து விடுவார் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன . இன்றைய செய்திப் படி அவர் செயற்கை சுவாசமளிக்கும் கருவியின் துணையின்றி பேசவும் , ‘ ஜோக்கடிக்கவும் ’ ஆரம்பித்துள்ளார் . மீண்டு விடுவார் என நம்பிக்கை எற்பட்டிருக்கிறது . ரஷ்டி எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த எழுத்தாளர் என்பதால் இச்செய்தி என்னை மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கியது . என் இதயம் பதறுகிறது . என்னால் அதைக் கற்பனையே பண்ண முடியவில்லை . வயதான ஒருவர் பத்து பதினைந்து முறைகள் தன் எழுத்துக்காக குத்தப்படும் காட்சியை நினைத்து என் பற்கள் கூசுகின்றன . ரஷ்டியை தாக்கிய இந்த இளைஞர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர் . அவரது பெற்றோர் லெபனானை ...