நூல் : காதல் நாடகம்
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 168
வகை : நாடகம்
ஆர். அபிலாஷ், டேவிட் வெஸ்ஸி என்ற நாடக இயக்குனர் கேட்டதற்கு இணங்க இந்நாடகங்களை எழுதியுள்ளார். தன் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பின்போது இவற்றை ரசித்து எழுதியுள்ளார். காரணம் அவரின் படைப்பு கூட்டாக வாசிக்கப்பட்டு பின் அரங்கேற்றம் செய்யப்படுவதை நேரில் கண்டதே. இவை வெறுமனே வீதி நாடகங்கள் மட்டுமல்ல ஆசிரியர் சொல்வதைப் போன்று சிறுகதைகளாக வாசிக்கவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன. தன் எழுத்து தத்ரூபமாக காட்சியாக்கப்படுவதை கண்டவர் தன் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார். "அந்த நாடகப் பிரதியானது கூட்டு வாசிப்பு மற்றும் ஒத்திகைகளின் போது, இறுதியில் அரங்கேற்றத்தின் போது, எப்படியெல்லாம் மாற்றங்களுக்கு உள்ளாகிறது, ஒரு சிறிய வசனம் ஒரு நடிகனின் உடல் மொழியுடன் சேர்ந்து உணர்வூட்டத்துடன் வெளிப்படும் போது எப்படி ஒரு மகத்தான தோற்றம் கொள்கிறது, ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும் போதும் ஒரு பிரதி எப்படியான படைப்பூக்கத்துடன் மறுபிறப்பெடுக்கிறது என கவனித்த போது நான் மிகவும் உவகை கொண்டேன். ஒரு நாடகப் பிரதியானது அதன் அளவில் வெறும் எலும்புக்கூடுதான். அதனை மனித உடல்களும், குரல்களும் எடுத்தாளும் போதே அது முற்றிலும் புதிய ஒரு வடிவத்தை, வண்ணத்தைப் பெறுகிறது. அது எவ்வாறு நிகழ்கிறது எனக் காண திகைப்பாக இருந்தது. நாடகமே மிகச்சிறந்த சமூகக் கலை வடிவம் என்று நான் இப்போது நம்புகிறேன்."
முறையான அரங்குகள் இன்றி நடத்தப்படுபவை வீதி நாடகங்கள். இவற்றை அதிகமாகக் கண்டவன் இல்லை என்றாலும் ஒரு நாடக மேடையற்ற அரங்கில் தங்களின் நடிப்புத் திறனாலும் வசனங்களாலும் என்னைக் கவர்ந்தவை இரண்டு நாடகங்கள். ஒன்று கோயம்புத்தூரில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நிகழ்ந்த பாராட்டு விழாவின் போது அவரின் சிறுகதையான தொரட்டியை, அரும்புகள் நாடகக் குழுவை சேர்ந்த நான்சி கோமகள் இயக்கி நடித்தது. இரண்டாவது திருவண்ணாமலையில் தென்பெண்ணை இலக்கிய சமவெளி இலக்கியக் கூடுகையின்போது 'ஆயிஷா' சிறுகதையை பேராசிரியர் இந்துமதி ஒற்றைக் கதாபாத்திரமாக நிகழ்த்தியது. இவையிரண்டும் எனக்கு மிகுந்த ஆச்சரியமூட்டிய நாடகங்கள். அவர்கள் எப்படி ஒரு கதையை உள்வாங்கி, தங்கள் உடல் மொழியோடு இணைத்துக் கொண்டு, அந்தப் படைப்புக்கும், தங்கள் உழைப்புக்கும் பெருமை சேர்க்கிறார்கள் என்பதை அங்கு நேரில் கண்டேன்.
அபிலாஷ் இந்நூலில் உள்ள நாடகங்களை சமூகத்தின் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு எழுதியுள்ளார். சமூக ஊடகங்கள், சாதி, ஆணாதிக்கம், காதல், மாய எதார்த்தம் என அவை கலவையாக இருக்கின்றன.
' பூட்டு' நாடகம் ஆண்களில் சிலர் எவ்வளவு பூஞ்சைகள் என்பதை படு சுவாரசியமாக காட்டும் நாடகம். வேல்முருகன், அவன் மனைவி என இருவரைக் கொண்டே மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. வேல்முருகனின் வார்த்தைகளே நாடகத்தை நகர்த்துகின்றன. அவனின் கோபம் நம்மை எரிச்சலூட்டினாலும் கடைசியில் அவன் 'டம்மி பீசாக' மாறும் காட்சிகள் மனதிற்கு ஆறுதலாகப்படுகின்றன. அது எதிர்பார்க்காத முடிவு. அவனின் கையாலாகத்தனமே கோபமாக வார்த்தைகளில் வெளிப்படுவது அதிர்ச்சியானாலும் அதை இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ எனத் தோன்றியது.
'விரிசல்' நாடகத்தின் நாயகன் 'போஸ்' நாயகத்தன்மையற்ற ஒரு நாயகன். வித்தியாசமான கதைக்களம். நாடகமாக புதுவிதத்தில் ஈர்த்தது. ப்ரியாவுடன் போஸ் ஹோமில் இரண்டாவதாக நடத்தும் உரையாடல் நாடகத்திற்கும் போஸிற்கும் வேறு வித வடிவத்தை அளித்தது. ஸ்டேடியத்தில் மால்கமுடன் நிகழ்த்தும் உரையாடல்கள் கச்சிதமானவை. என்ன அதைக் காட்சியமைப்பாக பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் சுருதியுடன் நாயகத்தன்மையற்ற நாயகனாகவே மீண்டும் அவன் வலம் வருகிறான். இது போஸ் கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
'மீட்சி' காட்சி அமைப்பில் எப்படி அமைத்திருப்பார்கள் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணியது. ஏனெனில் வாசிக்கும் போது மிகுந்த கவனக்குவிப்பை வேண்டியது. அதனாலேயே அதனை காட்சி அமைப்பில் எவ்வாறு எளிமைப்படுத்தி இருந்திருப்பார்கள் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது.
அபிலாஷின் மாபெரும் பலமாக இந்நாடகங்களில் வெளிப்படுபவை உரையாடல்கள். புரியும் படியும் இருக்க வேண்டும் அதற்காக மிக எளிமையாகவும் இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் கதைக்கான கதாபாத்திரம் வேண்டும் வார்த்தைகளை எல்லா நாடகங்களிலும் எழுதி இருக்கிறார். அது பூட்டு மற்றும் விரிசல் நாடகங்களில் மிகக் கச்சிதமாக அமைந்திருக்கின்றன.
இத்தொகுப்பில் உள்ள இக்கதையைப் பேசாமல் இருக்க முடியாது. மணமுறிவு பெற்று வாழும் பெற்றோருக்கு இடையில் வாழும் பெண் குழந்தைகள் சிலரின் மனத் தடுமாற்றங்களை பேசும் நாடகம் 'தசமுகன்'. ரேகா, டீன் ஏஜ் பெண். மணமுறிவு பெற்ற அப்பாவுடன் வசிக்கிறாள். அவளுக்குப் புது ஃபோன் பிறந்தநாள் பரிசாகக் கிடைக்கிறது. அதன் மூலம் அப்பாவின் சமூக ஊடக கணக்குகளை பார்த்து திடீரென தவறான முடிவெடுப்பவள், தன் பள்ளி ஆசிரியரின் அக்கறையான ஏமாற்றுப் பேச்சுக்கு இரையாகும் சமயத்தில் மீட்கப்படுகிறாள். இதில் ஆசிரியரை ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் ? அபிலாஷூம் ஆசிரியர் தான், இருந்தும் ஆசிரியர் ஏன்? என்றால் குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் ஆசிரியருடன் செலவிடும் நேரம் அதிகம். அதற்காக ஆசிரியர் கதாபாத்திரம் எடுத்தாளப் பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அதுதான் பிரதானமா? என்றால் இல்லை. அதைவிட அப்பருவத்துக் குழந்தைகளிடம் நாம் நிதானமாகவும் அக்கறையுடனும் நிறைய நேரங்கள் செலவிட வேண்டும் என சொல்லாமல் சொல்கிறது இந்நாடகம். விழிப்புணர்வுக்காக சரி, அதற்காக நாடகத்தின் உணர்ச்சிகரமான பகுதிகள் இயல்பாக இல்லாமல் திணிக்கப்படுவதை தசமுகனின் குறையாகச் சொல்லலாம்.
நூலின் இறுதியில் வீதி நாடகங்கள் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை அபிலாஷின் நாடகங்களை ஒட்டி அருள் ஸ்காட் எழுதியுள்ளார். மிக அற்புதமான கட்டுரை. அவர் சொல்வது போல "கலகம் செய்வதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் வீதி நாடகங்கள் பயன்படுகின்றன." ஆம், அப்படியாக தான் இருக்கின்றன இதிலுள்ள நாடகங்கள்.
நன்றி அபிலாஷ்.
கருத்துகள்