நான் எழுத வந்த இந்த பத்து வருடங்களில் இலக்கிய உலகில் பல பூசல்களைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் காரணம் பொறாமை தான். பெருமாள் முருகன் “மாதொரு பாகன்” சர்ச்சையில் மாட்டிக் கொண்டு துச்சாதனர்களால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த அவலச்சூழலிலும் அவரைக் கண்டு கண்ணீர் உகுக்காமல் “என்ன இவருக்கு மட்டும் ஓவராய் கவனம் கிடைக்கிறது?” என மூக்கில் விரல் வைத்தவர்கள், அந்த பொறாமையினாலே அவரைக் கடுமையாய் வைதவர்களைத் தெரியும். நான் இதுவரையில் அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் புகழ், கவனம் கண்டு வயிறெரிந்ததில்லை. நான் நல்லவன் என்பதால் அல்ல. நான் இதையெல்லாம் கவனித்ததே இல்லை. அடுத்தவர்களின் பணம், வசதி, அழகிய காதலிகள் கூட என்னை உறுத்தியதில்லை. மண்ணில் முகம் புதைத்த நெருப்புக் கோழி போன்றே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த ஆறுமாதங்களில் என் மனம் சட்டென மாறி விட்டது. எதற்கும் யாரைப் பார்த்தாலும் பொறாமை எனும் நிலைமை! சும்மா சாலையில் பஞ்சுமிட்டாய் விற்கிறவரைப் பார்த்தால் கூட என் கண்ணில் பொறாமை எட்டிப் பார்க்கிறது.