இந்த மாத உயிர்மையில் வெளியாகி உள்ள என் கட்டுரை. கவனக் குலைவு ஒரு நோய் அல்ல சமகால கலாச்சாரத் தன்மை என்று பேசுகிறது. ADD எனப்படும் கவனக்குறைவு கோளாறின் சில அறிகுறிகள் இன்றைய தலைமுறையின் பெரும்பாலான குழந்தைகளின் ஆளுமைக் கூறு ஆகி விட்டது. அவர்களால் ஓரிடத்தில் சில நொடிகள் கூட அமைதியாக இருக்க முடிவதில்லை. கணினி விளையாட்டு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக பெறும் மூளைக்கிளர்ச்சி ஒரு நிரந்தரத் தேவையாகி விட்டது. குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கு வெளிப்புற விளையாட்டுக்கள் அவசியம். ஆனால் விளையாட்டு வெளிகள் ஒருபுறம் சுருங்கி வந்தாலும், இன்றைய குழந்தைகளுக்கு எந்திரங்களுடன் விளையாடுவதுதான் பிரியமானதாக உள்ளது. புலன்களை அதிகப்படியாக தூண்டும் செயல்களே அவர்களுக்கு இயல்பாகப் படுகின்றன. முன்னெப்போதையும் விட இன்றைய தலைமுறை தான் மிகச்சின்ன வயதில் இருந்தே பலவித போதைப் பழக்கங்களை பரிச்சயப்படுத்திக் கொள்கின்றன. இப்படிப்பட்ட மிகை-கிளர்ச்சி தூண்டுதலுக்காய் ஏங்கும், நரம்புகள் மின்சாரம் பாய்ச்சப்பட்ட குழந்தைகளால் அமைதியாக அமர்ந்து பள்ளியில் கவனிக்க முடிவதில்லை. சுலபமாக சலிப்படைவதால் நீண்ட புலன் தூண்டுதலற...