முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாசிப்பு பற்றி நான்கு கேள்விகள் (1) -

   வாசிக்க நேரமில்லை என நிறைய பேர் சொல்வதை கேட்கிறேன். இது உண்மையா? அதற்கு முன்பு வேறு சில கேள்விகளை பரிசீலிப்போம். வாசிப்பின் தேவை தான் என்ன? வாசிப்பதற்கு நேரமில்லை போன்ற பொதுவான காரணங்களை நான் நம்புவதில்லை. மிகக்கடுமையான வேலைப்பளு கொண்டவர்களும் படிக்கிறார்கள். வேலையே இல்லாமல் ஈயடிப்பவர்களும் புத்தகத்தை கையில் கொடுத்தாலும் படிப்பதில்லை. சரி ஆர்வம் தான் வாசிப்பை தீர்மானிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு புத்தகத்தின் மீது நிறைய மையல் கொண்டு, அதை அடிக்கடி தொட்டு தடவி திறந்து பார்த்து மூடி வைத்து விடுகிறவர்களை எனக்குத் தெரியும். என்னுடைய ஒரு தோழி ஒரு ஆங்கில நாவலாசிரியரின் வெறித்தனமான ரசிகை. அவரது எந்த புது நாவல் வந்தாலும் உடனே வாங்கி வைத்து விடுவார். ஆனால் படிக்க மாட்டார்.

தில்லி எட்டும் தூரமே

ரஸ்கின் பாண்ட் ஏகப்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். நிறைய சின்னச் சின்ன கதைகளும். நினைவேக்கமும் ரொமாண்டிசிஸமும் இயற்கை பற்றின நெகிழ்ச்சிக் கனவுகளும் நிறைந்த எழுத்து அவருடையது. இவரிடம் இலக்கியத் தன்மை இல்லை என நான் அவர் நூல்கள் பக்கமே முன்னர் போனதில்லை.  ஆனால் எனது பெரும்பாலான மாணவர்களுக்கு அவரைப் பிடிக்கும். அவரிடம் உள்ள எளிமை, மென்மை, களங்கமின்மை, முழுக்க முழுக்க மனிதர்களின் நன்மையை மட்டுமே பேசும் முயற்சி ஆகியவை அவரை நோக்கி பலரையும் ஈர்க்கும் விசயங்கள்.  அதாவது ரஸ்கின் பாண்டை நமது வண்ணதாசனின் ரொம்ப ரொம்ப சாதுவான ஒரு வடிவம் எனலாம். வண்ணதாசனின் அந்த கவித்துவம், மொழிச்செறிவு இவரிடம் இல்லையே ஒழிய மனப்பான்மை இருவருக்கும் ஒன்று தான். ரத்தம் ஒழுக ஒழுக ஒரு கத்தியை கொண்டு காட்டினாலும் “என்ன ஜாம் அப்படியே இருக்கிறது? அலம்பி வச்சிடுங்க” என்பார்.

கோபம் வராமல் இருக்க ஒரு வழி உண்டா?

  ஒரு நண்பர். எண்ணெய் சட்டியில் நீர்த்துளிகள் பட்டது போல் பட்பட்டென வெடிப்பார். எப்போது கொதிப்பார், உறையில் இருந்து வாளை உருவுவார் என கணிக்க முடியாது. அது அவருக்கே தெரியாது. அவர் தூங்கி விழித்த அடுத்த நொடியே கூட படுபயங்கர கோபத்தில் கத்துவார் என அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். ஆனால் ஆள் ரொம்ப சாது. இப்படி ஒரு விசித்திர காம்பினேஷன்.  “கோபத்தை எப்பிடிங்க கட்டுப்படுத்துறது?” என அவர் என்னிடம் கேட்டார். “அது எனக்குத் தெரியாது. ஆனால் கோபமே வராமல் தவிர்க்க ஒரு வழி உள்ளது.” “என்னது?” “சின்னச் சின்ன விசயங்களை பொருட்படுத்தவே கூடாது. யோசித்துப் பார்த்தால் நாம் எப்போதும் சின்ன விசயங்களுக்காகத் தான் பயங்கரமாய் டினோசர் போல ஆர்ப்பரிப்போம். பெரிய விசயங்களை கண்டுகொள்ள மாட்டோம்.” “சின்ன விசயமுன்னா?” “எதுக்கெல்லாம் உங்களுக்கு கோவம் வருதோ அதெல்லாம் சின்ன விசயம் தான்.” “இப்படி எல்லாம் குண்டக்கா மண்டக்கான்னு பேசினா எதையாவது தூக்கி அடிச்சிருவேன்.” “உங்களுக்கு முக்கியமல்லாதவைன்னு வச்சிக்கலாம்.” “இன்னும் தெளிவா சொல்லுங்க”

பா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்

யாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகமும் அப்படியான ஒரு நாட்குறிப்பு தான். அவரது அந்த தடதடவென்ற, இந்தா பிடி இந்தா பிடி என்கிற மொழி வேறு நூலை வேகப்படுத்துகிறது. மிகச்சின்ன நூல். கிண்டிலில் தரவிறக்கி ஒரு மணிநேரத்தில் படித்து விட்டேன்.  உணவை அவர் எப்படி பாடாய் படுத்தி இருக்கிறார், உணவு அவரை எப்படி பாடாய் படுத்தி இருக்கிறது என அவர் பேசும் இடங்களை ரசித்தேன். அதுவும் தனது கடந்த கால (பேலியோவுக்கு முன்) வாழ்க்கையை பேசும் போது ராஜ்கிரண் போன்றும், பேலியோவுக்கு பின் வாழ்வை பேசும் போது விரைப்பாய் கடுமையாய் விஜய் சேதுபதி போன்றும் தொனிக்கிறார். மனிதன் எவ்வளவு ரசித்து ரசித்து சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான் திரும்பத் திரும்ப தோன்றியது. வடை, பஜ்ஜி, சட்னி, ஜாமுன், லட்டு அது இது என நீண்ட பட்டியலொன்றைத் தருகிறார். எனக்கென்னவோ அவர் பேலியோ மூலம் 27 கிலோவை குறைத்ததை விட மூச்சு விடாமல் இவ்வளவு பதார்த்தங்களை அத்தனை வருடங்கள் பதம் பார்த்தது தான் ஒரு சாதனை எனத் தோன்றுகிறது. அந்த பாகுபலி பரா...

தீப்தி நேவல் மின்நூல்

நான் மொழியாக்கிய தீப்தி நேவல் கவிதைகளின் சிறு தொகுப்பு ஒன்றை மின்நூலாக புஸ்தகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிளாகில் வெளியான கவிதைகளுடன் இதுவரை பிரசுரமாகாத கவிதைகளும் சேர்ந்த தொகுப்பு இது. விலை ரூ 25 மட்டுமே. நண்பர்கள் இந்த லிங்கில் சென்று வாங்கிப் படிக்கலாம். 

குருட்டு நம்பிக்கையின் அவசியம்

பெங்களூரின் புறநகர்ப் பகுதி. குப்பை மேட்டை ஒட்டி வளைந்து திரும்பும் ஒரு குறுகலான தெரு. ஒரு இளம்பெண்ணை மற்றொரு சற்று வயது முதிர்ந்த பெண் கையைப் பற்றி அழைத்துப் போகிறாள். இளம்பெண் பார்வையற்றவள்.  நான் சென்னையில் பார்த்துள்ள பல பார்வையற்றவர்கள் யார் துணையுமின்றி நடந்து போவார்கள். ஆனால் இப்பெண் அப்பகுதிக்கு புதியவள்; அவளுக்கு அந்த பாதை இன்னும் முழுக்கப் பழகவில்லை. வழிகாட்ட ஒரு கரம் துணைக்கு தேவையுள்ளது என ஊகித்தேன்.  சந்தின் துவக்கத்தில் இவளை விட்டு விட்டு அவள் இவள் போகிறதை ஆவலாதியுடன் பார்த்தாள். இவ்வளவு தூரம் கைப்பற்றி நடந்து வந்தவள் இனிமேல் எப்படி தனியாக போகப் போகிறாள்?

சிம்பன்ஸிகள் செய்த கொலை (2)

  அன்புள்ள பிரபு நன்றி. உங்கள் எதிர்வினையும் கருத்துக்களும் மிகவும் சுவாரஸ்யமாய் இருந்தன; என்னை சிந்திக்க வைத்தன.  ஆயுத உற்பத்தி, ஆயுத பயன்பாடு மற்றும் போருக்கு இரு காரணங்கள் சொல்கிறீர்கள். பெருங்குழுக்களாய் வாழ ஆரம்பிக்கும் மனித இனத்தின் பொருட் தேவைகள் அதிகரிக்கின்றன. வேறு குழுக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்க ஆயுதங்களை பயன்படுத்த துவங்குகின்றன. மனிதர்கள் “ தன்னிருப்பை காட்டவும்   நம்பிக்கையின் பெயராலும் பெருமையின் பெயராலும் ” ஆயுதங்களை பிறர் மீது பிரயோகிக்கிறார்கள். எனக்கு உங்களது இரண்டு கருத்துக்களுடன் மட்டும் உடன்பாடில்லை. ஆதியில் மனிதனுக்கு ஆயுதங்களை பயன்படுத்த ஒரு நியாயமான காரணம் இருந்தது என்கிறீர்கள்: சுயபாதுகாப்பு.