முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையான ஒரு பிரச்சினை

 இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான ஒரு பிரச்சினை உண்டு - இந்தியப் பண்பாட்டிலும் சிந்தனையிலும் எங்கும் அறவுணர்வு இல்லை, ஏனெனில் நமக்குச் சமத்துவத்தில் நம்பிக்கையே இல்லை. உலகில் இப்படியான ஒரே நாடு நாம்தான் என நினைக்கிறேன். ஐரோப்பியர்களிடம் இயல்பாகவே அறவுணர்வும் சில லட்சியங்களில் நம்பிக்கையும் உண்டு. உ.தா., நமது இதிகாசங்களில் எங்காவது அறவுணர்வு, மானுடவாத லட்சியம் உண்டா? துளி கூட இல்லை. உண்மைக்காக, நியாயத்துக்காகப் போராடும் ஒரு பாத்திரத்தைக் கூட நீங்கள் நம் தொல்கதைகளில் பார்க்க முடியாது. தர்மத்துக்காகப் போர் செய்வதாகச் சொல்வார்கள். ஆனால் அதில் மற்றமைக்காக குரல் கொடுப்பதோ முற்றுறுதியான ஒரு நியாயத்துக்காக தியாகம் செய்வதோ போராடுவதோ இருக்காது. ஒரு பிறப்புக்கான நோக்கத்துக்காக தீமையை எதிர்ப்பது என இருக்கும். அத்தீமையும் கடவுளையும் பிராமணர்களையும் எதிர்ப்பதாக மட்டுமே இருக்கும். அல்லது ஒரு இனக்குழுவின் பிரச்சினைக்காகக் கொல்லப்பட்டவரின் நியாயமாக, ஒரு கூட்டு நியாயமாக ஒரு கோபம் வெளிப்படும். எங்குமே உலகப்பொதுவான நியாயம், சரி-தவறு எனும் கருதுகோள் இருக்காது. இதனால்தான் நமது பண்பாட்டில் ஊறிப் போயிருப்பவர்களுக்கு சமத்துவ உணர்வு இருப்பதில்லை. ஏனெனில் நம் பண்பாடே அதைப் போதிப்பதில்லை. சாதியம், பாலின பேதம், மாற்றுத்திறனாளிகள் மீதான அலட்சியம் ஆகியவை இந்த அறமின்மையின் பல்வேறு பரிமாணங்கள் மட்டுமே. ஐரோப்பாவில் புத்தொளிக் காலம் என ஒன்று தோன்றி தனிமனிதர்களின் தேவைகள் பேசப்பட்டன, மானுடவாதம் என ஒன்று அலையாக எழுந்து வந்தது, மதத்தை பொதுச்சமூகத்திடமிருந்தும் அரசிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும் என ஒரு கோரிக்கை வந்தது. மக்களாட்சி உருவானது. சமத்துவம் தொடர்ந்து வலியிறுத்தப்பட்டது. இவையெதுவுமே இந்தியாவில் தோன்றாதது தன்னியல்பானது அல்ல. இவற்றுக்கு நம் பண்பாடும் தத்துவங்களும் இடமளிப்பதில்லை என்பதே முக்கிய காரணம். ஐரோப்பாவில் பல யுத்தங்கள், இன அழிப்புகள் நடந்துள்ளன, இப்போதும் அங்கு இனவாதம் தலைதூக்கி உள்ளது. ஆனால் அங்கு ஒருபோதும் அதைச் சரி என ஒட்டுமொத்தச் சமூகமும் நம்பாது. அவர்களுக்குத் தம் குற்றங்கள் மீதான லஜ்ஜையும் குற்றவுணர்வும் உண்டு. நமக்கு எதிலும் குற்றவுணர்வே இல்லை. இதையும் நம் இதிகாசங்களில் காணலாம். அவற்றில் எங்குமே யாருமே தம் தவறுகளுக்குக் குற்றவுணர்வு அடைவதில்லை. கொலை சரியா தவறா, ஏற்றத்தாழ்வு சரியா தவறா எனும் கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எங்குமே கொல்லுவது தவறா எனும் கேள்வி எழுப்பப்படுவதில்லை. உயிர்ப்பலி ஒரு பிரச்சினையாக்கப்படுவதில்லை. ஒரு பழங்குடிச் சமூகம் அப்படித்தான் இருக்கும், மகாபாரதம் இந்தியர்கள் பழங்குடிகளாக வாழ்ந்த காலத்தின் பிரதி என நியாயப்படுத்த முடியாது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பழமையான காவியம் Beauwolf. இதுவும் பழங்குடிகளின் வாழ்க்கைத் தொகுப்பே. ஆனால் அதில் கூட ஒரு ராட்சஸனைக் (dragon) கொல்வதற்கான நியாயம் வழங்கப்படுகிறது. ஊருக்கு வந்து மனிதர்களைக் கொல்வது, சான்றோர் கூடிப் பேசும் அரங்கத்தை நாசமாக்குவது என. ஆனால் நம் இதிகாசங்களில் இப்படியான நியாயங்களைப் பார்க்க முடியாது - பாண்டவர்கள் படையெடுத்துப் போகும்போது வனத்தை அழிப்பதற்காக பழங்குடிகளை அழிப்பார்கள் (நாகர்கள்). நெருப்பிட்டு குழந்தை குட்டிகளைக் கொல்வார்கள். ஒருவர் கூட மிஞ்சாதவிதம் பார்த்துக் கொள்வார் அர்ஜுனன். இத்தகைய நடவடிக்கையை பாரதக் கதையில் பாராட்டுவார்களே அன்றி அது நியாயமா எனக் கேட்க மாட்டார்கள். இப்படி நூறு நூறு உதாரணங்களைச் சொல்ல முடியும்.

கர்த்தர் ஏழை, எளியவர்களுக்காக, முடவர்களுக்காகப் பேசுவதை நீங்கள் விவிலியத்தில் பார்க்க முடியும். நீங்கள் ஏதாவது ஒரு இந்துமதப் பிரதியில் ஒரு கடவுளாவது இவ்வாறு பேசிப் பார்க்க முடியுமா? இல்லை. மகாபாரதத்திலோ ராமாயணத்திலோ எளிய மக்களின் பசியோ போதமையோ பேசப்பட்டுள்ளனவா? இல்லை. ஒருவர் பார்வை மாற்றுத் திறனாளியாக இருப்பது அகப்பார்வை இன்மையின் குறியீடாகவே காட்டப்படுகிறது. சஞ்சயன் திரும்பத்திரும்ப திருதராஷ்டிரிடம் சொல்வது இதைத்தான். ஒருபோதும் ஒரு மாற்றுத்திறனாளியாக அவருக்கு ஆட்சி அதிகாரம் ஆரம்பத்தில் மறுக்கப்பட்டது அநீதி என வலியுறுத்தப்படுவதில்லை. மூத்தவர்கள் அதைக் குறித்து குற்றவுணர்வு கொள்வதும் இல்லை. இவையெல்லாம் நவீனப் பிரச்சினைகளா? இல்லை. இவை எல்லா காலங்களுக்குமான அடிப்படையான விழுமியங்களே. ஏன் நம் கடவுள்களும் இதிகாச எழுத்தாளர்களும் நீதிக்காகப் பேசுவதில்லை எனில் ஒரு கலாச்சாரமாக, ஒரு சமூகமாகவே நாம் இழிவையும் அநீதிகளையும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. சமத்துவம் நமக்கு வெகு அண்மையான ஒரு கருத்தாக்கம். உலகில் இத்தகைய கொடூரமான சிந்தனைகளைக் குறித்து குற்றவுணர்வு அடையாமல் சனாதனம் எனக் கொண்டாடுபவர்களும் இந்தியர்கள் மட்டுமே.
மீண்டும் வலியுறுத்துகிறேன்: நாம் இதைச் சாதியைக் கடந்தும் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். அப்போதே நமது அடியாழமான அறமின்மையின் பல்வேறு பரிமாணங்கள் நமக்கு விளங்கும். நாம் அடிப்படையிலே பிழையான ஒரு மக்கள் சமூகம். அது எனென்றுதான் யாருக்கும் தெரியவில்லை.
நாம் இதன் மீது நின்றுதான் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையான பிழையைக் களையாமல், சரி தவறு குறித்துப் பேசாமல், குற்றவுணர்வு கொள்ளாமல் நம்மால் வெல்ல முடியாது. இப்போதும் கூட நீங்கள் தெருவில் போகும் யாரையாவது அழைத்து சரி-தப்பு என்று என்னவென்று கேளுங்கள். அவர்களால் பதில் சொல்ல முடியாது. ஆங்கில வழிக் கல்வி பெறாதவர்களால் முடியாது. அவ்வழிக் கல்வி பெற்றும் கூட அதன் சாரத்தை ஆன்மாவில் உணராதவர்களால் முடியாது. பெரும்பாலான இந்தியர்களால் முடியாது. உலகிலேயே இப்படியான ஒரே சமூகம் நாம் தான். சாதியுடன் இவ்விவாதத்தை முடிப்போம்: சாதி சரியா தவறா என பல்லாயிரம் மாணவர்களிடம் கடந்த பல ஆண்டுகளில் கேட்டுள்ளேன். ஒருவர் கூட தவறு என்று சொன்னதில்லை. அவர்கள் சாதியவாதிகள் என்பதால் அல்ல. அவர்களுக்குத் தம்மைக் கடந்து ஒன்றைப் பற்றிப் பொதுப்படையாக யோசித்து அதில் சரி எது தவறு எனப் புரிந்துகொள்ளும் பாங்கு இல்லை (ethical judgement). சாதியில் என்றில்லை, எல்லாவற்றிலும்தான். உ.தா., கொலை சரியா தவறா என்று கேட்டுவிட்டு நான் கொலையை நியாயப்படுத்தக் கூடிய சில சந்தர்பங்களைக் குறிப்பிடுவேன். உடனே அனேகமான மாணவர்கள் கொலையும் சரிதான் என்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.