முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மாணவர்களும் அரசியலும்

ஐஐடி அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடக்கும் சர்ச்சை மாணவர் கருத்துரிமையை மையம் கொண்டது. மாணவர்களுக்கு அரசியல் பேச முழு உரிமை வேண்டும் என பலரும் கோருகிறோம். கடந்த சில பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வியும், தனியாய் கல்வி நிறுவனங்களும் பெருகி, கலை, அறிவியல் படிப்புகள் பலவீனப்பட்ட பின் மாணவர் அரசியலும் முளையில் கருகிப் போய் விட்டது. ஆனால் இதைப் பேசுகிற வேளையில் மாணவர்கள் அனைவரும் மிகுந்த அரசியலுணர்வுடன் இருப்பதாகவும் அரசும் பிற நிறுவனங்களும் இணைந்து அவர்களை முடக்குவதாகவும் நம்புவதும் மிகை தான்.

அம்பேத்கர், பகவத் கீதை மற்றும் ஓஷோ

அம்பேத்கரின் “கிருஷ்ணரும் அவரது கீதையும்” எனும் கட்டுரை படித்தேன். முதலில் மொழி பற்றி. அவரது மொழியின் சில அம்சங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. குறிப்பாய் அதன் சமகாலத்தன்மை. இன்றைய எழுத்தின் குணங்களாய் நாம் காணும் நேரடித்தன்மை, விவாத வடிவம், நேரடியாய் வாசகனை அழைத்து உரையாடும் தன்மை, அபாரமான தெளிவு, தயங்காமல் எதிர்கருத்தை பதிவு செய்வது, எளிமை, லௌகீக பார்வை இவை அனைத்தும் அம்பேத்கரிடம் உள்ளன. பெயரை மாற்றி பிரசுரித்தால் நிச்சயம் இணையத்தில் புழங்கும் ஏதோ ஒரு இளைஞன் எழுதியது எனத் தான் தோன்றும்.

தமிழில் மெட்டாசினிமா?

”ஜிகிர்தண்டாவை” எல்லாம் மெட்டாசினிமா என்கிறார்கள். ஏதோ மெட்டாசினிமாவை நாம் புதிதாய் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது போல. பல வருடங்களாய் நம் மசாலா சினிமாவில் மெட்டா சினிமா மிக வலுவாய் இருந்து கொண்டு தான் இருந்தது. மெட்டா சினிமா, பின் நவீனத்துவம் எல்லாம் அறியாமல் இதை மக்கள் ரசித்து கைதட்டிக் கொண்டும் தான் இருந்தார்கள். ஆனால் இந்த உண்மையை நான் சற்று தாமதமாய் ஒரு நண்பருடன் ராயப்பேட்டையில் ஒரு ரோட்டோரக்கடையில் தந்தூரி சிக்கனை எச்சில் வழிய கடித்துக் கொண்டிருந்த போது தான் உணர்ந்தேன்.

அம்பையின் பெண்ணியப் பார்வையின் சிக்கல்கள்

“சிறகுகள் முளைக்கும்” 17 வருடங்களுக்கு முன்பு காலச்சுவடில் வெளிவந்த அம்பையின் ஒரு பெரிய பேட்டி. மனுஷ்யபுத்திரனும் கண்ணனும் சேர்ந்து எடுத்தது. சுவாரஸ்யமும் சரளமும் கொண்டது. ஒரு பாதி அம்பையின் வாழ்க்கைக்கதை, இன்னொரு பாதி அவரது இலக்கிய அபிப்ராயங்கள். இப்பேட்டியை காலச்சுவடு பெண் படைப்புகள் நூலில் காணலாம்.

இந்த காற்று

சேற்றில் குதித்து விளையாடும் குழந்தை போல இக்காற்று என் மேல் புரள்கிறது மேஜை, அதன் மேல் புத்தகங்கள் கோப்பை நான் நறுக்க வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு ஒவ்வொன்றையும் தூக்கி அடிக்கிறது கொடியில் காயும் என் சட்டைக்குள் புகுந்து தன் பருத்த உடம்பை தனக்குத் தானே காட்டி சிரித்துக் கொள்கிறது தூங்கும் உன் கூந்தலை அள்ளி முகத்தில் இட்டு மூடி உதடுகள் தெரியும் படி சில இழைகளை மட்டும் விலக்குகிறது பறக்க இயலாமல் ஒரு சிறு வண்டு தவிக்கிறது ஜன்னல் சட்டத்துக்கு பின்பக்கமாய் சாய்வாய் இறகுகளை துடித்தபடி எட்டிப் பார்க்கிறது ஜன்னல் திரை முந்தானை போல பறக்கிறது எழுந்து அருகில் போக தொங்கும் வானம் வெளிச்சம் படாது காற்றுப்படாது வெளிறிய சருமம் போல கண்ணை கூசச் செய்கிறது உள்ளே நடந்தபடி வெம்மை மீதமிருக்கும் ஒவ்வொரு இடமாய் தொட்டுப் பார்க்கிறேன் கற்பூரம் தீபம் தொட்டு கண்ணில் ஒற்றுவது போல. காகிதக் கற்றைகள் போல் பறந்து பறந்து அமர்கிறது வெம்மை வண்டு வெளியே போய் விட்டிருக்கிறது

பெரியாரும் பிராமணர்களும்

-      தி.கவின் தாலியறுப்பு நிகழ்வை ஒட்டி இந்துத்துவர்கள் பெரியார் சிலைக்கு மூத்திர அபிசேகம் செய்து பரபரப்பை கிளப்பினர். அன்றைய நாள் முழுக்க முகநூலில் நண்பர்கள் தொடர்ச்சியாக பெரியாரை புகழ்ந்தும் அவரது மேற்கோள்களை நினைவுகூர்ந்தும் டைம்லைனை ஒரு பக்கம் நிரப்ப இன்னொரு பக்கம் பெரியார் எதிர்ப்பாளர்களும் சின்ன அளவில் தம் கோபத்தை காட்டினர். இரண்டாவது தரப்பை சேர்ந்த என் பிராமண நண்பர் ஒருவர் மிக மோசமான வசை மொழியில் பெரியாரை தாக்கி என் முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டார். அவர் படித்து ஒரு உயர்பதவியில் உள்ள முதிர்ந்த மனிதர். ஏன் இவ்வளவு ஆத்திரப்பட்டு பண்பாடின்றி பேசுகிறார் என எனக்கு வியப்பேற்பட்டது. தான் வாழ்வின் பெரும்பகுதி திகவினரின் இந்து மத தூஷணைகள் மற்றும் பிராமண சமூக தூற்றல்களை கேட்டு வளர்ந்தவன் என்பதால் தன்னுடைய வலி என்பது ஆழமானது என்றார். பொறுக்க முடியாமல் அவரது கோபமும் எரிச்சலும் வெளியாகி விட்டதாய் நியாயப்படுத்தினார். பெரியார் மீதான அவமதிப்பு, தாலி அறுப்பு, பண்பாட்டு விசயங்களில் தொடர்ந்து தமிழகத்தில் இந்துத்துவர்கள் உருவாக்கு சலசலப்புகள் ஆகியவை தவிர்த்து எனக்கு மற...

குட்டிப்பையன் உணவருந்துகிறான்

மூன்று மணி போல ஓட்டல் பணியாளர்கள் ஒன்றாய் மேஜையை சுற்றி இருந்து உணவருந்தினர். பத்து வயது மதிக்கத்தக்க வடகிழக்கு மாநில சர்வர் பையன் ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் கெட்டிப்பட்ட சுடுசோறும் அதில் பருப்பும் ஊற்றி அமர்ந்தான். அடிக்கடி சூடு தாளாமல் விரல்களை உதறியபடி அதை விண்டு விண்டு ஆர்வமின்றி தின்று கொண்டிருந்தான். தன் நண்பனிடம் கண்காட்டி ஏதோ நகைச்சுவையை பகிரும் விளையாட்டு ஆர்வம். அவன் அம்மா பார்த்தால் சரியாய் சாப்பிடாமல் நோஞ்சானாய் போகிறாயே என கவலை கொள்ளலாம். எனக்கு ரசிக்கவே தோன்றியது.