முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நவீன இலக்கியமும் பெரியாரும்




நவீன கவிதையில், இலக்கியத்தில் பெரியார் இல்லையா? பெரியாரியத்தின் தாக்கம் இல்லையா?

நேரடியாக பதில் சொல்வதென்றால் “இல்லை”.  ஆனால் இதன் பொருள் அரசியல் சித்தாந்தங்களுக்கு - பெரியாரின் அராஜகவாதத்துக்கு - இலக்கியத்தில் இடமில்லை என்பதல்ல. ஏனென்றால் அம்பேத்கரியத்தின் தாக்கத்தை நாம் மராத்திய, கன்னட, தமிழ் தலித் இலக்கியப் படைப்புகளில் வலுவாகவே காண்கிறோம். அரசியல் பொருளாதார தத்துவமான மார்க்ஸிய தாக்கத்தை திராவிட, பெண்ணிய, இடதுசாரி புனைவிலக்கியத்தில் காண்கிறோம். மூன்று தலைமுறை பெண்ணியவாதிகளின் சிந்தனைத் தாக்கத்தை நாம் இந்தியா முழுமைக்கும் உள்ள பெண் படைப்பாளிகளிடம், நாற்பதுகள் முதல் ரெண்டாயிரத்தின் பிற்பகுதி வரையிலான தமிழ் பெண் படைப்பாளர்களின் பிரதிகளிலும் துலக்கமாக பார்க்கிறோம். சொல்லப்போனால், தலித்திய, பெண்ணிய படைப்புகளில் போல மிக வெளிப்படையான அரசியல்தன்மையை நாம் பிற படைப்புகளில் காண முடியாது. இன்னொரு பக்கம் சமூகவியல் அறிஞரான பூக்கோவின் வலுவான தாக்கத்தை தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ்க் கவிதையில் பார்க்க முடியும்.  கோணங்கியின் கதைகளில், நாவல்களில் இயற்கையியல் சிந்தனையின் தாக்கத்தை பின்நவீன எழுத்துமுறையுடன் இணைக்கும் போக்கைக் காண்கிறோம். தமிழ் நவீன இலக்கியமானது விக்கிரமாதித்யன், தேவதேவன், வண்ணதாசன், தேவதச்சன், சி.சு செல்லப்பா, க.நா.சு, தி.ஜா, சு.ரா போன்றோரால் மட்டுமானது அல்ல, அது பலதரப்பட்ட வண்ணங்களை, சிக்கல்களை, ஊடுபாவுகளைக் கொண்டது. ஆகையால் சிறந்த இலக்கியமானது அரசியலுக்கு, பொருளாதாரத்துக்கு, சமூகவியல் சிந்தனைக்கு அப்பாலான ஆன்மீக, சடங்குசார் மதங்களின் புலத்திலே அமைந்திருக்கும் என ஜெயமோகன் கூறுவதை நாம் ஏற்க முடியாது. இருந்தாலும் இவ்வளவு சித்தாந்தங்களின் தாக்கம் கொண்ட தமிழ் நவீன கவிதையில், புனைவுகளில் ஏன் பெரியார் இல்லை என்பது ஒரு முக்கியமான கேள்வியே.

இதற்கான பதில் பெரியாரின் தாக்கம் இலக்கியவாதிகளிடம் பொதுவாக இல்லை என்பதல்ல. மாறாக இதை இரண்டு விதங்களில் நாம் பார்க்க வேண்டும். ஒன்று வடிவ ரீதியாக, மற்றொன்று நமது வாழ்க்கை முறை விருப்பங்கள் (கிராமம் vs நகரம்) சார்ந்து.
 ஒரு படைப்பாளி தான் யோசிப்பதை, உணர்வதை அப்படியே படைப்பாக்குவதில்லை. மாறாக தன்னை ஈர்க்கிற, தனக்கு உண்மையாகப் படுகிற ஒரு எழுத்து வடிவை, மொழிக்கட்டமைப்பை அவன் தேர்வு செய்கிறான். அதனுள் இருந்து சிந்திக்க, உணர்வெழுச்சி கொள்ள தன்னையே பயிற்றுவிக்கிறான். உ.தா., அத்வைத மெய்யியல் சார்ந்து மீபொருண்மை உலகை நோக்குகிற படைப்புகளை விரும்புவோர் பக்தி இலக்கியத்தில் துவங்கி தேவதேவன் போன்ற கவிஞர்களின் கவியுலகை வந்தடைவார்கள். அவர்களுக்கு எமிலி டிக்கின்ஸனும் பிடிக்கும். விவிலிய எழுத்தை இந்த அத்வைத மீபொருண்மை நோக்குடன் இணைத்து ஒரு பிரான்ஸிஸ் கிருபா உருவாகுவார். இதற்கு ஒரு தொடர்ச்சி இப்படி இருந்தபடி இருக்கும். இடதுசாரி புனைவுகள், தலித்திய சுயவரலாற்றெழுத்து, பெண்ணிய எழுத்து என ஒவ்வொன்றுக்கும் இப்படி ஒரு மொழி இருக்கும். அந்த மொழியே - வாழ்க்கை அல்ல - படைப்பாளிகளை ஈர்க்கிறது, தன்வயப்படுத்துகிறது. 

பெரியாரின் அராஜகவாத அரசியல் சிந்தனைக்கு நமது பண்பாட்டுப் புலத்தில் ஒரு மொழிக் கட்டமைப்பு, வடிவத்தை இவ்வாறு கண்டடைய முடியாது. அதற்கு ஒரு காரணம் தமிழில் அராஜகவாத சிந்தனைக்கு கலாச்சார ரீதியான ஒரு கராறான மரபு தோன்றவில்லை என்பது.
 குறிப்பாக அரசியல் சமூக சிந்தனை சார்ந்து, சாதிய சனாதன எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு எனும் பொருளில் அப்படி ஒரு அலை தமிழ் அரசியலில் எழுந்தது போல பண்பாட்டளவில் தோன்றவில்லை. ஆனால் மேற்கில் இருபதாம் நூற்றாண்டில் ஹிப்பி கலாசாரம், எதிர்க்கலாச்சாரம், பௌத்தம், இயற்கைக்குத் திரும்புதல் எனும் கோணத்தில் அராஜகவாதம் ஒரு பண்பாட்டு வடிவமாக உருக்கொண்டது. அமெரிக்க புனைவெழுத்தின் ஆதார விதையென்று கருதப்படுகிற மார்க் ட்டெவியினின் The Adventures of Tom Sawyer, ஜேக் கெரவக்கின் On the Road, வொனெகட்டின் Slaughter House Five, ராபர்ட் ஹெயின்லெயினின் Stranger in a Strange Land, கென் கெஸியின் One Flew Over the Cuckoo’s Nest, ஜெ.டி சாலிங்கரின் Catcher in the Rye, புக்காவஸ்கியின் அனேகமாக எல்லா நாவல்கள், கதைகள், கவிதைகளும், ஜெனெயின் Our Lady of the Flowers, பாலின் ரெகெயின் The Story of O, சிக்ஸுவின் Angst போன்ற நாவல்கள், நாடகங்கள் மற்றும் கட்டுரைகளை நாம் இந்த அராஜகவாத இலக்கிய மரபின் முக்கிய படைப்புகள் என்று கூறலாம்.

 இந்த எதிர்க்கலாச்சார, அராஜகவாத மரபின் சாயலை நாம் தமிழில் ஜி.நாகராஜன் கதைகளில், ஆரம்ப கால லஷ்மி மணிவண்ணனின் கவிதைகள், கதைகளில், இன்றைய லஷ்மி சரவணகுமாரின் படைப்புகளில், சாரு நிவேதிதாவின் “எக்ஸிஸ்டென்ஷியலிடமும் பேன்ஸி பனியனும்” உள்ளிட்ட பல படைப்புகளில், சாருவை ஒட்டிய எழுத வந்தவர்களின் பிரதிகளில் காண்கிறோம். இந்த படைப்புகளில் பெரியாரின் சமூக அரசியல் இயக்கத்தின் ஒரு பண்பாட்டு முகம் வெளிப்படுகிறது என்று நான் தயங்காமல் கூறுவேன். ஒரே வித்தியாசம் மேற்கில் நிகழ்ந்தது போல சமூக அரசியல் வெளியில் அதிகார மையத்தை, மதத்தில், சாதியத்தில் நிலவும் மேலாதிக்கத்தை நேரடியாக எதிர்க்கிற படைப்புகளை எழுத நாம் பெரிதாக முயலவில்லை. துரதிஷ்டவசமாக, அதைச் செய்கிற முன்னோடிகள் இங்கு தோன்றவில்லை. மேற்கில் இருந்தும் அராஜகவத, அரசின்மைவாத படைப்புகளை இங்கு நாம் போதுமானபடிக்கு மொழியாக்கிக் கொண்டுவரவும் இல்லை. 
இன்னொரு விசயம் பெரியாரிய சிந்தனை, அராஜகவாதம் ஆகியவை ஒருவித நகரமயமாக்கட்ட சூழலில் தோன்ற சாத்தியமுள்ள கருத்தமைவுகள். நான் மேலே குறிப்பிட்டுள்ள மேற்கத்திய எதிர்க்கலாச்சார தமிழ் படைப்பாளிகள் அவ்வாறு நகரமயமான, நவீனமான ஒரு வாழ்வுநிலையில் இருந்து உலகைப் பார்க்கிறவர்களாக அல்லது கிராமிய வாழ்க்கையை ஒரு நகரமய ஒழுங்கு எதிர்ப்பு பார்வையுடன் அணுகுகிறவர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். தமிழிலும் அவ்வாறே எதிர்க்கலாச்சாரவாதிகள் இருக்கிறார்கள். கவிதையில் பெருந்தேவி ஒரு சிறந்த உதாரணம். புனைவில், ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர, கிராமத்து வாழ்வின் உதிரிகளைச் சித்தரித்த கண்மணி குணசேகரன், ஓரளவுக்கு கி.ரா ஆகியோரிடமும் இந்த நவீனப் போக்கை பார்க்கிறோம். ஆனால் நமது பெரும்பகுதியான நவீன இலக்கியம் - கவிதைகளையும் உள்ளடக்கி - கிராமிய தன்மை கொண்டதே. கிராமியத்தை நேசித்தவர்கள் என்றால் என்றால் மனதளவில் சாதியத்தையும், மதசச்சடங்குகளை உள்ளூர நேசிக்கிற ஒரு மனப்பான்மையை அவர்கள் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.

 நமது நாவல்களில் மூன்று நான்கு தலைமுறைக் கதைகளைக் கூறும் நவீன, சமகால நாவல்களைப் பாருங்கள். அவை அப்பட்டமாக சாதீய பெருமிதத்தை கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தினர் ஒரு நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்குள்ள பிற மக்களுடனும் இயற்கையுடனும் நோய்நொடிகள், பொருளாதார சிக்கல்களுடன் போராடி வென்றதைப் பேசும் படைப்புகளாக அவை இருக்கின்றன. (தலித்திய நாவல்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.)

ஆக இயல்பாகவே அவர்கள் பெரியாரிய தன்மை கொண்ட அராஜகவாத மரபை விட, காந்திய தன்மை கொண்ட கிராமிய படைப்புகளையே தமது முன்னோடி இலக்கியமாகக் கண்டார்கள். ஜெயமோகன் மற்றொரு எல்லைக்கு சென்ற பாரதீய இலக்கியம் ஒன்றை கற்பனை செய்து பார்க்க முயன்றதுடன், நவீன, பின்நவீன இலக்கியத்தை மறுத்து நவ-செவ்வியல் (neo-classical) மரபொன்றை உருவாக்க இங்கு உருவாக்க முயல்கிறார். 

இப்படி தமிழில் அதிகம் பேசப்பட்ட இலக்கிய மரபில் பெரியாரிய அராஜகவாத படைப்புகள் முன்னோடிகளாகத் தோன்ற முடியவில்லை. காந்தியை நம் சிறுபத்திரிகை ஆட்கள் வீட்டுக்குள் அழைத்து பாதபூஜை செய்து விட்டு பெரியாரை வாசலுக்கு வெளியிலே நிறுத்திக் கொண்டனர். மற்றபடி காந்தியின் சிந்தனைகள் எந்த விதத்திலும் பெரியாரியத்தை விட இலக்கியத்துக்கு கூடுதல் அனுசரணையானவை அல்ல. காந்திக்கு இலக்கியத்திலோ தத்துவத்திலோ அடிப்படை புரிதல் கூட இல்லை, அவர் எந்தளவுக்கு ‘மரமண்டை’ என்பதற்கு அவர் பகவத் கீதைக்கு எழுதிய உரை ஒரு சிறந்த உதாரணம். அவருடைய எழுத்துக்களுக்கு பெரியாரின் எழுத்துக்கள் நிச்சயம் மேலானவை, எல்லாவிதமான மேலாதிக்கத்தையும் எதிர்ப்பவை, எல்லா கருத்தமைவுகளையும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து மாற்றுப்பார்வையை முன்வைப்பவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...