முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மோசடி நாடகம் - இரையாக்கப்படும் எழுத்தாளர்கள்

May be an image of text

அமைச்சர் ராஜ்மோகனின் ஊடகச் சந்திப்பைப் பார்த்தேன். அவரது எச்சரிக்கைகள், உறுதியளிப்புகள் குழப்பமாக இருந்தன. அதுவே ஒரு மோசடிதான் என நினைக்கிறேன்.

1) அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பக நூல்களின் ஆணையை கடந்த வருடமே அளித்துவிட்டதாக ஒரு பட்டியலை அளித்து அதில் நிபுணர் குழுவில் உள்ள படைப்பாளிகளும் சான்றோரும் பேராசிரியர்களும் ஒப்பமிட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் எங்குமே அவர்களே பொறுப்பென்று அவர் கூறவில்லை. கடைசியில் திமுக அரசின் அழுத்தத்தினாலே அவர்கள் அகல் விளக்கு, பீனிக்ஸுக்கு ஆணை வழங்க ஒப்பியுள்ளதாகவும் கூறினார். ஆனால் பேஸ்புக்கில் இதைக் குறித்து எழுதும் பரிந்துரைக் குழு உறுப்பினர்களான எழுத்தாளர்கள் தாம் அவ்வாறு ஒப்புதல் அளித்ததாகவோ தம் மீது அழுத்தம் ஏற்பட்டதாகவோ சொல்லவில்லை. அதெப்படி நூற்றுக்கணக்கான உறுப்பினர்களில் ஒருவர் கூட சொல்லாமல் இருப்பர்? ஒன்று அவர்களும் பணம் வாங்கியிருக்க வேண்டும் அல்லது அவர்களை திமுக மிரட்டியிருக்க வேண்டும். அவர்கள் பணம் வாங்கவில்லை என்று ராஜ்மோகன் கூறுகிறார். அவர்கள் மிரட்டப்பட்டால் இப்போது அதை வெளிப்படுத்த வேண்டியதுதானே. இப்பரிந்துரைக் குழுவைச் சேர்ந்த பெருமாள் முருகனே தன் கட்டுரையில் அப்படி ஒரு சிக்கல் நிகழ்ந்ததாகச் சொல்லவில்லை. எந்த நிபுணரும் அப்ரூவர் ஆகாதபோது குற்றம் சாட்டாதபோது அமைச்சர் ராஜ்மோகன் எந்த அடிப்படையில் இதைக் கூற முடியும்? இது அவர்களை அவமதிப்பதாகாதா? இதுவே ராஜ்மோகன் கூறுவது ஒரு புனைவு என்பதைக் காட்டுகிறது.
2) ஊழல் குற்றம் நடந்ததாக தவெக அமைச்சர்கள் கூறும்போதெல்லாம் கவனமாக குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது பண்ணாமல் தவிர்த்துவிடுவார்கள். ஒரு பதவிக்காகத் தனக்கு ஒரு கோடி லஞ்சம் தர ஒருவர் முன்வந்ததாக இதற்கு முன் சொன்ன ராஜ்மோகன் அவர் யாரென்று சொல்லவோ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ இல்லை. அதே போலத்தான் இப்போதும் அவர் மோகனின் பெயரைக் குற்றவாளிகளில் ஒருவராகக் குறிப்பிடவே இல்லை. அவரைக் கைது பண்ணுவதாகவும் கூறவில்லை. இது தற்செயலாக நடந்ததல்ல என நினைக்கிறேன். பொதுவாக பொய் சொல்வோர் உறுதியாக பெயர்களை எடுத்துச் சொல்லத் தயங்குவார்கள். அந்த 'மோகனும்' திமுகதான் தனக்கு புத்தக ஆணை தந்ததாகச் சொல்கிறார். அந்த ஒன்றே போதுமே அவரைக் கைது பண்ணி விசாரித்து தகவல் அறிக்கைப் பதிவு பண்ண. ஏன் இந்த 'மோகன்' அதைக் குறித்துப் பேச மறுக்கிறார். யாரை அப்ரூவராக செட் பண்ணுவது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லையா?
3) ஏன் நிருபர்கள் திரும்பத் திரும்பக் கேட்டும் அவர் அதிகாரிகள் நல்லவர்கள், திமுகவே அவர்களை ஊழல் பண்ண நிர்பந்தித்தது என்றார்? (கடைசியில் ஒருவேளை அப்படி இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.) எந்த ஆதாரமும் இன்றி எப்படி அம்முடிவுக்கு வருகிறார்? ஒரு வழக்கு விசாரணையே ஆரம்பிக்கும் முன்பு ஒரு அமைச்சர் எப்படி அதற்குத் தீர்ப்பை எழுத முடியும்? எனில் அவ்வழக்கு விசாரணை எப்படி நியாயமாக இருக்கும்? இன்னொரு விசயம் சுவாரஸ்யமானது: அதிகாரிகளில் பலருக்கும் இந்த ஊழலில் பெரும் பங்கு உள்ளது அப்பட்டமான உண்மை - அவர்களை அம்பலப்படுத்தினால் இந்தக் குற்றச்சாட்டு ராஜ்மோகன் எதிர்பார்ப்பதைப் போலச் செல்லாது. அவர் திமுகவின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இவ்வூழலைச் செய்ததாக ஊடகங்களும் மக்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதனால் தெளிவாக இப்போதே அதிகாரிகளுக்கு சம்மந்தமிருக்க முடியாது என்கிறார்.
3) பெப்ரவரியில் வாங்கப்பட்ட புத்தகங்கள் சேமிப்பறையில் வைக்கப்பட்டு ஜூனில்தான் பிரித்து அடுக்கப்பட்டன, அப்போதே சீல் வைக்கப்பட்டது என ஒரு மாய எதார்த்தக் கதையை எடுத்து வைக்கிறார்.
4) மோசடி நூல்களைப் பெறுவதற்கான நிதி கடந்த ஆண்டே வெளியிடப்பட்டன எனில் மோகனுக்குப் பணம் அனுப்பப்பட்ட ஆவணத்தை அவர் ஏன் வெளியிடாமல் புத்தகப் பட்டியல்களையும், நிபுணர் குழுக் கூட்டங்களின் திரைத்துளி நகல்களையும் ஏன் கொண்டு வந்து காட்டுகிறார்? அவர் இப்படித்தான் சம்மந்தமில்லாத ஆவணங்களையும் தகவல்களையும் கொண்டு வந்து கொட்டிவிட்டு ஒரு நாடகத்தை நடத்துகிறார். அவர் வெளிப்படுத்துவதைவிட மறைக்கத்தான் அதிகமாக பிரயத்தனப்படுகிறார்.
5) அமைச்சர் ராஜ்மோகனின் இலக்கு திமுகவுக்குச் சார்பாக உள்ள எழுத்தாளர்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது - அதனாலே அவர் நிபுணர்களின் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை அடிக்கடி எடுத்து வாசிக்கிறார். அவர்களே பதிப்பாளர் மோகனுக்கு ஆணையளித்ததாக அவர் நேரடியாகக் கூறாவிட்டாலும் அதைத்தான் குறிப்புணர்த்தினார். அதன்பிறகு அவர்களும் அப்பாவிகளே, திமுகதான் ஊழல் செய்தது என்கிறார். அவர்கள் அப்பாவிகள் எனில் அவர் ஏன் அவர்களின் பெயர்களை மீளமீளப் படிக்க வேண்டும்? எனக்கு ஒன்று தோன்றுகிறது - ராஜ்மோகன் இப்பெயர்களை வாசித்துக் காட்டி இந்த எழுத்தாளர்களுக்கு ஒரு மென்மையான எச்சரிக்கை விட நினைக்கிறார். ஆனால் அடிப்படையில் அவர் எல்லாரிடமும் நட்பாகப் போக நினைப்பவர் அல்லது சற்று பயந்த பயந்த சுபாவம் உள்ளவர் அல்லது இந்த எழுத்தாளர்களிடம் நல்லெண்ணம் கொண்டவர். அதனாலே அவர்களை மிரட்டியும் பாதுகாத்தும் நல்ல போலீஸ்-கெட்ட போலீஸ் வேடம் பூணுகிறார். ஒரு பக்கம் மரு வைத்துக் கொண்டு கண்களைப் பிதுக்கிக் காட்டி மிரட்டிப் பார்க்கிறார், இன்னொரு பக்கம் அவர்களுடைய கன்னங்களைத் தொட்டுக் கொஞ்சி விட்டுப் போகிறார்.
6) புதிய தலைமுறைக் கட்டுரை சரியாக நேற்று வெளியிட்டது, உடனே அதை எதிர்பார்த்திருந்ததைப் போல அமைச்சர் ராஜ்மோகனும் முதல்வர் விஜய்யும் எதிர்வினையாற்றியது எல்லாமே திட்டமிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளாகத் தோன்றுகின்றன. அதாவது ஒரு ஊழலை வெளிப்படுத்திக் கைது பண்ணுவதல்ல, தற்காலிகமாக தமிழார்வலர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் திமுகவை களங்கப்படுத்தி ஒரு அவதூறுப் பிரச்சாரம் செய்வதே நோக்கம். இப்பிரச்சாரத்தில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ பங்கேற்றிருக்கிறார்கள், அவர்கள் என் நண்பர்கள், மரியாதைக்குரியவர்கள் என்பதே வருத்தத்திற்குரியது. அவர்களுடைய தூண்டுதலுக்கு நானும் பலியாகி நேற்று இதைக் குறித்துக் கொந்தளித்து பேஸ்புக்கில் எழுதினேன். நேற்று மாலையே எனக்கு சில வலுவான சந்தேகங்கள் தோன்றின - மனசாட்சிப்படித்தான் எழுதுகிறோம் எனினும் யாருடைய செயல்திட்டத்திற்கோ நாம் கைப்பாவைகளாகி விட்டோமோ என வருந்தினேன். அதனாலே நேற்று எழுதிய பதிவுகளை நீக்கினேன்.
7) திமுக ஊழல் செய்யவில்லை என நான் நம்பவில்லை. சொல்லப்போனால் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிக்கத்தக்க ஊழல்களை திமுக செய்திருக்கிறது என நினைக்கிறேன். அதைக் குறித்து மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இது சுமார் 30 லட்சம் மதிக்கத்தக்க கொள்முதல். இதைப் போன்ற மோசடி ஆணைகளின் மதிப்பே சில கோடிகளுக்கு உள்ளேதான் இருக்கும். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இதைவிடப் பெரிய ஊழல்களைச் செய்திருக்கவே வாய்ப்பதிகம். எல்லா ஆட்சிகளிலும் அப்படியே நடக்கும். தவெகவின் நோக்கம் ஒரு ஊழலை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்பதல்ல - மாறாக ஒரு சில அதிகாரிகளும் பதிப்பாளர்களும் சேர்ந்து செய்திருக்கக் கூடிய முறைகேட்டை திமுக மீது சுமத்தி அவமதிப்பது. இதை அவர்கள் நிரூபித்து தண்டனை எல்லாம் கொடுக்கப் போவதில்லை என நூறு சதம் உறுதியாக இப்போதே சொல்கிறேன். இந்த மோசடிக் குற்றச்சாட்டே ஒரு மோசடிதான். ஆனால் பெரியார் நூலகத்தை ஸ்டாலின் சொந்தம் கொண்டாடுவது விஜய்யை எரிச்சலடைய வைத்திருக்கிறது. விஜய்க்கெல்லாம் நூலகத்தில் என்ன ஆர்வம் எனும் எள்ளல் பலருக்கும் இருந்தது. மேலும் அடுத்தடுத்து தவெக மீது ஊழல், நிர்வாகச் சீர்கேடு சார்ந்த குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இச்சூழலில் இதைத் திட்டமிட்டு எழுப்பி தமிழுணர்வாளர்களையும் அறிவுஜீவிகளையும் திமுகவிடம் இருந்து விலக்கி தம் பக்கம் இழுக்க தவெக விரும்புகிறது. அறிவுத்தரப்புக்கும் திமுக மீதுள்ள மதிப்பை ஒழித்து திமுக நூலக ஊழல் செய்த கட்சி என நிறுவ வேண்டும். திமுக உருவாக்கி உள்ள அற்புதமான நூலகங்களின் புகழை மங்க வைத்து அங்கு தரங்கெட்ட நூல்கள் உள்ளன எனக் காட்ட வேண்டும். அதற்காகவே சில நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு இதைச் செய்திருக்கிறார்கள். திமுகவை ஒரு மொழி விரோதி, தமிழ் விரோதி எனச் சித்தரிக்க விரும்புகிறது. அந்தப் புரோஜெக்டை விஜய் ராஜ்மோகனிடம்தான் கொடுத்திருக்கிறார் போல. அதற்கான முயற்சிகளின் முதற்பகுதியே புதிய தலைமுறையின் சிந்தைக் கட்டுரையின் ஊடாகப் பார்த்தோம். அது எழுத்தாளர்களிடமும் தமிழுணர்வாளர்களிடமும் ஏற்படுத்திய அதிர்ச்சியே இந்தளவுக்கு ஊடகங்களில் இப்பிரச்சினை பேசப்படக் காரணம்.
ராஜ்மோகன் இதற்கான ஒரு நெறியாளர். அவர் அப்பணியைச் செய்கிறார். அவருக்கு இதைப் பற்றி எந்தளவுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றால் அவர் முதல் ஊடகச் சந்திப்பில் பதிப்பாளர் மோகனே புவியில் இல்லை என்றார். அடுத்தச் சந்திப்பில் அவர் இருக்கிறார் என்றார். அதாவது அவர் பெருமாள் முருகனின் கட்டுரையை மட்டுமே படித்துவிட்டு முதலில் பேசியிருக்கிறார். ஒரு அமைச்சரான அவருக்கு மொத்த தகவல்களையும் திரட்ட சில மணிநேரங்கள் கூட வேண்டாமே. ஒரு யுடியூபர் போய் மோகன் எங்கிருக்கிறார் எனச் சொல்கிறார். ஆனால் ராஜ்மோகனுக்கு தெரியவில்லை எனில் அவர் முதலில் தனக்குத் தரப்பட்ட நெறியாள்கை ஷீட்டைத் தவிர வெறெந்த தயாரிப்பும் இன்றி அவசரமாக ஊடகத்தை நோக்கி வந்திருக்கிறார் எனத் தெரிகிறது. இந்த அவசரமே சந்தேகத்துக்கு உரியது.
😎 பெருமாள் முருகனின் கட்டுரையைப் படித்ததும் ஒரு தவெக அமைச்சர் நியாயமாக அதிர்ச்சியடைந்து வருந்தியிருக்கவே வேண்டும். ஏனெனில் அது தவெக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்தில் உள்ள சில மோசடி நூல்கள் மீதான விமர்சனம். ஆனால் அவரோ பெருமாள் முருகனை போனில் அழைத்துத் தான் பாராட்டி நன்றி தெரிவித்ததாகச் சொல்கிறார். இந்த நடவடிக்கையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெருமாள் முருகன் எந்த இடத்திலும் இது திமுகவின் ஊழல் என்று எழுதவில்லை. உடனே போன் செய்து நன்றி சொல்லும் முன்பு ராஜ்மோகன் இது திமுகவின் ஊழலே என உறுதிப்படுத்தும் அளவுக்கு ஆய்வு பண்ண வாய்ப்பில்லை. ஏனெனில் மடிப்பாக்கம் மோகனே இல்லை எனும் கணக்கில் அவரது அறிவு ஆரம்பத்தில் இருந்தது. பெருமாள் முருகன் அவ்வாறு கட்டுரையில் சொன்னதைத் தாண்டி அவர் எதையும் விசாரிக்காமல் அது திமுகவின் ஊழல் என முடிவுக்கு வந்து போனில் அழைத்து நன்றி சொன்னார் என்பதே இது ஒரு மோசடியான ஏற்பாடு என்பதற்கான சாட்சியம்.
9) பெருமாள் முருகனுக்கு முன்பே இதே நூலகத்துக்குப் போய் இம்மோசடியை அம்பலப்படுத்தியவர் எழுத்தாளர் பொன்ராஜ் பாலசுப்பிரமணியம். அவர் நூல்களின் பெயர்களையும் படங்களையும் வேறு விபரங்களையும் வெளிப்படுத்தவில்லையே தவிர உண்மையை அம்பலப்படுத்தி விட்டார். ஆனால் ஏன் அப்போது ராஜ்மோகன் இவ்வாறு அவரை அழைத்து நன்றி தெரிவிக்கவில்லை? அதை ஏன் ஊடகங்களில் எடுத்து வெளியிடவில்லை? அவர்கள் இதை பிரம்மாண்டமாக வெளிப்படுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டார்களா? அப்போது இப்பிரச்சினை ராஜ்மோகனின் "நிகழ்ச்சி நிரலில்" இல்லை. ஆனால் கவனிக்க வேண்டிய சிலர் அதைக் கவனித்து இந்தப் பிரச்சினையைச் சர்ச்சையாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே தோன்றிய ஒரு சர்ச்சையை எடுத்து பெரிய பட்ஜெட் செலவில் 'ஒரு பிரம்மாண்ட படமாக' வெளியிட்டு அதற்காக மொத்த அரசு எந்திரமே ஊடகச் சந்திப்பு நடத்துவதை இப்போதே முதன்முறையாகப் பார்க்கிறேன்.
9.) இந்தச் சர்ச்சையில் நான் மிகவும் ரசித்தது பதிப்பாளர் மோகனின் ஒரு பதில்தான். அவர் சொல்கிறார்: "இது மொத்தமா 17 லட்சத்துக்கான ஆர்டருங்க. நானென்னமோ கோடிக்கணக்கில் ஊழல் பண்ணினதா ஊடகங்களில் சொல்கிறீங்களே. என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?"அவர் செய்தது ஒரு அறிவு மோசடிதான். ஆனால் அதைப் பெரிதுபடுத்தி ஏதோ பல்லாயிரம் கோடி ஊழல் எனும் கணக்கில் சித்தரிக்க தவெக விரும்புகிறது. இதை வைத்து திமுகவின் அறிவுப்புல அஸ்திவாரத்தை சரித்துவிடலாம் என நம்புகிறது. தொடர்ந்து தற்குறிகள் எனத் தாம் அழைக்கப்படுவதை முடிவுகட்டலாம் என நினைக்கிறது. திரிஷா விஜய், அந்த விஜய் இந்த விஜய் போன்ற பெயர்களில் நூல் வந்ததெப்படி எனும் கேள்விகளை ராஜ்கோகன் பதிலளிக்க மறுத்துவிட்டார். தம்மை அறிவுஜீவிகளாகச் சித்தரிக்க தற்குறிகள் விரும்புவற்கான ஒரு சிறு முயற்சி இது என நினைக்கிறேன்.
10) நான் ஒரு விதத்தில் சந்தோஷப்படுகிறேன்: கடந்த திமுக ஆட்சியின் போது நான் முழுமையாக எந்தக் கூட்டத்திலும், குழுக்களிலும் பங்கு பெறவில்லை. ஒரே ஒருமுறை என்னை நெல்லைக் கண்காட்சிக்கு என்னைப் பேச அழைத்த அதிகாரி "நீங்க கலைஞரின் புனைவுப் பங்களிப்புப் பற்றிப் பேச வேண்டும்" என்றார். நான் கலைஞரின் ஒரே ஒரு நாவலை என் குழந்தைப் பருவத்தில் படித்திருக்கிறேன். அவரைக் குறித்து அதற்கு மேல் அறிந்தவன் அல்லவென்று சொல்லி அவரிடம் மறுத்துவிட்டேன். அதன்பிறகு யாரும் என்னை அழைத்ததில்லை. நான் திமுக அரசின் பிரக்ஞைப் பரப்புக்குள்ளேயே வரவில்லை. நான் மேலும் இத்திருவிழாக்கள் நடத்தப்பட்ட தவறான முறையைத் தொடர்ந்து விமர்சித்தே வந்திருந்தேன். அதைக் குறித்து இப்போது சற்றே மகிழ்ச்சி அடைகிறேன் - இல்லாவிட்டால் இன்று என் பெயரையும் ஏதோ தேடப்படும் குற்றவாளிகள் கணக்கில் ராஜ்மோகன் படித்திருப்பார். எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்! நான் உடனே அதற்கு "ஐயா நான் யாரிடமும் பணம் பெறவில்லை" என மறுப்புக் கூறி எழுதிருக்க வேண்டியும் வந்திருக்கும்.
இந்த மோசடி நாடகத்தின் வழியாக இவர்கள் அடைந்தது ஒன்றுதான்: கடந்த திமுக ஆட்சியின்போது பல நல்ல விசயங்கள் மத்தியில் சில இலக்கிய மோசடிகளும் நடந்தன. விருதுகளை அதிகாரிகள், தலைவர்களுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி சில இலக்கிய அமைப்புகளே பெற்றன. சில எழுத்தாளர்கள் அதிகமாகச் சன்மானம் பெற்று திரும்பத்திரும்ப கூட்டங்களில் பேச அழைக்கப்பட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ஒரு லட்சம் செலவழித்து ஐந்து லட்சத்திற்கான ஒரு அரசு விருதைப் பெற்றதாகக் கேள்விப்பட்டேன். மாநில விருதுதான் என்றில்லாமல் திமுக கொண்டு வந்த கனவு இல்லத்திற்காக தேசிய விருதிலும் மோசடிகள் நடந்தன. இப்படி எழுத்தாளர்கள் செய்த ஊழல்களே கடும் கசப்பை என்னைப் போன்ற எழுத்தாளர்களிடம் ஏற்படுத்தியது. இப்போதும் கூட எந்த எழுத்தாளரிடம் பேசினாலும் இதையெல்லாம் கரித்துக் கொட்டுகிறார்கள். திமுக இதைக் குறித்து எழுந்த கூக்குரல்களை அன்று கண்டுகொள்ளவே இல்லை. திமுக ஆட்சிக்கு வராமலே இருந்திருக்கலாம், எழுத்தாளர்களின் இந்த சீர்கேடுகள் அம்பலமாகாமல் இருந்திருக்குமே என்றே நான் நினைத்தேன்.
ஏனெனில் திமுக மொத்தப் பொறுப்பையும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், கீழ்நிலை அதிகாரிகளிடமும் குழுக்களிடமும் ஒப்படைத்து விட்டு நகர்ந்து விட்டது. மனுஷ்ய புத்திரனைப் போன்ற இலக்கிய உலகை நன்கறிந்த ஒரு திறமை மிக்க அனுபவம் மிக்க எழுத்தாளர் அவர்களிடம் இருந்தார். ஆனால் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லாத ஒரு பதவியை வழங்கி உட்கார வைத்தார்கள். அவரே எழுதுகிறார் தான் ஒரு பதிப்பாளர் என்று தனக்கு பரிந்துரைக் குழுக்களில் இடம் மறுக்கப்பட்டது என்று. ஆனால் பதிப்பாளர்களான எழுத்தாளர்களும் பதிப்பகங்களில் பங்குள்ளதாகச் சொல்லப்படுவோரும் ஏற்கப்பட்டனர். இது எதிர்க்கப்பட்டபோதும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆதரவால் அவர்கள் தொடர்ந்தனர் என்று சில நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். இவர்கள் இப்போது அப்படியே யுடர்ன் எடுத்து தவெக பக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ போய்விட்டனர். அதிகாரிகளை நம்பாமல் நேர்மையான எழுத்தாளர்களின் திமுக அன்றே பொறுப்புகளைக் கொடுத்திருந்தால், பிறர் எழுப்பும் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தி இருந்தால் அது அறிவுலகின் ஆதரவை தேர்தலுக்கு முன்பே இழந்திருக்காது. இப்போதும் கூட திமுகவை ஆதரிக்கும் படைப்பாளிகள் மிகமிகச் சிலரே. அவர்களும் பலாபலன் எதிர்பாராதோரே. பெரும்பாலும் யுடியூபர்களும் கட்சிக்காரர்களும், தமுஎசவினரில் ஒரு சிலருமே தமிழுணர்வு சார்ந்த விசயங்களில் திமுகவுக்காகப் பேசுகிறார்கள்.
இப்போது தவெக தனது இந்த மோசடியான அம்பலப்படுத்தல் நடவடிக்கையின் மூலமாக மீதமுள்ள எழுத்தாளர்கள் மீதும் சந்தேகத்தின் நிழலைப் பரப்பிவிட்டார்கள். ஒரு அரசியல் நாடகத்தின் நடிகர்களாக அவர்கள் எழுத்தாளர்களையே பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் சமூகத்தின் தமிழுணர்வின் முகவர்களாக இருப்பதாக தவெக கண்டுகொண்டுள்ளது. அதாவது திமுக செய்யாத ஒன்றை இப்போது தவெக இறங்கிச் செய்கிறது. திமுக தனக்கு ஏதோ விலையளிக்காத சொத்தாக இருப்பதாக நம்பிய அறிவுப்புலத்தை அதற்கு எதிராகவே திருப்புகிறார்கள். அதற்காக ஒரு சர்ச்சையை அதன் எல்லைக்கு மீறி வளர்த்து பெருக்குகிறார்கள். அடுத்து, இந்த எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர் மேற்சொன்ன இலக்கிய ஊழலின் வழியாக பலனடைந்ததால் அவர்கள் இப்போது கம்மென்று இருக்கிறார்கள். இன்னொரு பகுதியினர் நேரடியாகத் திமுகவை ஆதரித்துத் தம் பொது அறிவுஜீவி அதிகாரத்தை இழந்திருக்கிறார்கள். அவர்கள் திமுகவை ஆதரித்தால் அது கொடுக்கல் வாங்கல் ஆதரவாகவே பார்க்கப்படும். ராஜ்மோகன் இதே போல ஒரு பட்டியலை எடுத்து வந்து இவர்கள் கடந்த ஆட்சியில் இன்னின்ன குழுக்களில் இருந்து பலன் பெற்றார்கள் என்று சொல்ல அதிக நேரமாகாது. அதற்காக அவர்கள் தப்பு செயததாக நான் சொல்லவில்லை என்று ஒரு க்க்கும் முடிவில் வைப்பார். அறிவுத்தரப்பின் இந்தப் பலவீனத்தையே தவெக குறி வைக்கிறது.
இதற்கு முன்பு பாஜக இதற்காக முயன்றார்கள். சில ஆதரவு படைப்பாளிகளை தம்மளவில் ஆதரித்தார்கள். ஆனால் அத்திட்டம் தோற்றது. இப்போது தவெக மக்களிடம் எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்துக்கும் நூலகத்துக்கும் உள்ள குறியீட்டு மரியாதையைக் களங்கப்படுத்தி திமுகவைப் பலவீனப்படுத்தலாம் என முயல்கிறது. முதற்கட்டத்தில் முழுவெற்றி. ஆட்ட நாயகன் யாரென சொல்லத் தேவையில்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிலிருந்து, அதன் விழாக்கள், குழுக்களில் இருந்து முழுமையாக விலகி நிற்பதே எழுத்தாளர்களுக்கு நல்லது. அறிவுத் தரப்பு பூர்ஷ்வா வர்க்கமாக மாறிப் போனதன் விளைவே நாம் இப்போது காண்பது எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...