திமுக அமைத்த நூலகங்கள், ஆதரித்த படைப்பாளிகள், பதிப்பாளர்களுக்கு எதிரான பிரச்சாரமாகவே நான் "நூலக ஊழல்" எனும் தவெகவின் கதையாடலைப் பார்க்கிறேன். இதில் பாசிச அரசுகளின் பிரித்தாளும் யுக்தியைத் தெளிவாக அடையாளம் காண முடிகிறது. தவெக அரசு அடுத்து வரும் மாதங்களில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் எப்படி நடத்தப் போகிறது என்பதைப் போகப்போகத்தான் கவனிக்க வேண்டும். அப்போது நமக்கு அவர்களுடைய முழுமையான செயல்திட்டம் இன்னும் துல்லியமாகப் புலப்படும்.
முதலில் இரண்டு பதிப்பக நூல்கள் ஏ.ஐ நூல்களைப் பதிப்பித்து அதை பெரியார் அறிவுலகுக்கு விற்றார்கள், இது நூலகத்தின் சீரழிவின் அறிகுறி எனும் பொருளில் பெருமாள் முருகன் பெரியார் நூலகம் குறித்து ஒரு கட்டுரை எழுதுகிறார் (நவம்பர் 6, 2026). அதை ஒட்டி ராஜ்மோகன் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நூலகங்கள் முழுக்க முழுக்க போலி நூல்களால் நிரம்பி வழிகிறது என ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அவர் எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை, பதிப்பாளர் மோகனைக் கைது பண்ணவும் இல்லை. தொடர்ந்து தவெகவின் ரூப் மாபியா ஆட்கள் தீவிரமாக நூலக ஊழல் என மிகைப்படுத்தி பெரும் பிரச்சாரத்தை டிவி சேனல்களின் துணையுடன் செய்தார்கள். அடுத்து ராஜ்மோகன் தன் ஊடகச் சந்திப்பில் பரிந்துரைக் குழுவில் இருந்த படைப்பாளிகள், கல்வியாளர்களின் பெயர்களைப் படித்துக் காட்டி அவர்களே குற்றவாளிகள் எனும் தோரணையை உருவாக்கி தான் இவர்களே குற்றம் செய்ததாகக் கூறவில்லை, ஆனால் இவர்களே ஒப்பமிட்டவர்கள் என ஒரு மறைமுக மிரட்டலை முன்னெடுத்தார். அவர் சொன்னதை ஒட்டியே ரூப் மாபியாவினர் பரிந்துரைக் குழுவிலுள்ள நிபுணர்களே குற்றவாளிகள் எனப் பரவலாகப் பேசத் தொடங்கினர். அதாவது அவர்களுடைய இலக்கு இதுவரைக்கும் ஊழல் அதிகாரிகளோ லஞ்சம் கொடுத்த பதிப்பாளர் மோகனோ அல்ல. இரு தரப்பையும் காப்பாற்றி விட்டு எழுத்தாளர்களையும் கல்வியாளர்களையுமே ஊழல்வாதிகள் என்றும், நூலகத்தில் உள்ள நூல்களைப் போலி நூல்கள் என்றும் இலக்காக்குகிறார்கள் தவெகவினர். கடைசியாக இப்போது ஏற்கனவே நூல்களை நூலகத்துக்கு அனுப்பிய பதிப்பாளர்களுக்கு அப்புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அரசு கடிதம் அனுப்பி இருக்கிறது. அவர்கள் இதற்கு அரசிடம் விளக்கம் கேட்டு / கோரிக்கை வைத்து பேஸ்புக்கில் எழுதி வருகிறார்கள். அதாவது திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணையைப் பெற்ற அப்பாவிப் பதிப்பாளர்களின் வயிற்றில் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இப்போது வரையிலும் நடந்தவற்றைப் பார்க்கையில் ஒன்று தெளிவாகப் புரிகிறது: விஜய்யின் அரசு தமிழ் எழுத்தாளர்கள், தமிழுணர்வாளர்கள், பதிப்பாளர்கள் எல்லாரையும் எதிர்நிலையில் வைத்தே பார்க்கிறார்கள். கடந்த ஆறு மாதங்களில் தொடர்ந்து தம்மைப் பேசத் தெரியாதவர்கள், தற்குறிகள், கூத்தாடிகள், அறிவிலிகள், கோமாளிகள் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எள்ளி நகையாடியதற்கும் இணையத்தில் - ராஜ்மோகனின் மொழியில் சொல்வதானால் - திமுகவின் "ஊதுகுழல்களாக" செயல்படுவோர் தம்மைப் பகடி பண்ணியதற்கும் தமிழ் நூலகங்கள், நூல்கள், எழுத்தாளர்களின் பிம்பத்தை அடித்து நொறுக்கி ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். கடைசியாக பதிப்பாளர்களையும் பொருளாதார ரீதியாகத் தாக்கத் தொடங்கி உள்ளார்கள்.
இதையெல்லாம் பார்க்கிறவர்கள் கிளிப்பிள்ளையைப் போல த்ரிஷா விஜய், ஏ.ஐ நூல்கள் நிரம்பிய நூலகங்கள், யார் பொறுப்பு என்றே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரச்சாரத்தில் சொல்லப்படுவதை அப்படியே நம்புவோர் 'நுகர்வோர்'. அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்லர். பகுத்தறிவாளர்கள் ஒன்றை 'அது என்ன?' என்று கேட்காமல் 'அது ஏன் அவ்வாறு உள்ளது, அதை ஏன் அவ்வாறு வைத்துள்ளார்கள்?', 'அதனால் யார் என்ன பயன் பெறுவார்கள்?' எனக் கேட்பார்கள். இதுவரையிலும் பலரும் இதைக் கேட்க மறுக்கிறார்கள். கேட்டால் தவெக அரசின் செயல்திட்டம் அவர்களுக்குப் புலப்படத் தொடங்கும்.
தவெகவின் இலக்கு தமிழுணர்வு சார்ந்த அரசியல் சமூகத்தின் இனவுணர்வை, தன்னம்பிக்கையை உடைப்பது. தமிழ்ச் சமூகத்தை தமிழுணர்வுச் சமூகத்துக்கு எதிராக நிறுத்துவது. ஏனென்றால் தவெக ஆட்சிக்கு வந்த இத்தனை மாதங்களில் தம்மை ஏற்றுக் கொள்ளாத, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே போகாத ஒரு மனநிலை தமிழ் சமூகத்தில் வெளிப்படுவதை விஜய்யும் அவரது சிந்தனைக் கலத்தினரும் (think tank) புரிந்து கொண்டுள்ளனர். நான் தமிழ்நாட்டில் சில கூட்டங்களுக்குப் போகும்போது இடதுசாரி, இடது-மைய, தமிழ்தேசிய உணர்வாளர்கள் இடையே ஒரு கடுமையான கசப்பு விஜய் மீது தோன்றியுள்ளதைப் பார்த்தேன். இவர்கள் திமுக ஆதரவாளர்கள் அல்லரெனினும் விஜய்யா ஸ்டாலினா என்றால் ஸ்டாலின் பக்கமே நிற்பர். அல்லது குறைந்தது தவெகவுக்கு வாக்களிக்காமல் மூன்றாம் அணியினருக்கு ஆதரவளிப்பார்கள். இவர்களில் 18-25, 30-40, 4-60 வயதினர் என கிட்டத்தட்ட எல்லா தரப்பினரும் உள்ளனர். ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இவர்களிடையே உள்ளனர். இவர்களே விஜய்க்கு மிகப்பெரிய நெருக்கடி. இவர்களை இலக்காக்கியே திமுக, அதிமுக ஐ.டி விங் செயல்பாட்டாளர்கள் 'விஜய்க்கு பேசவே தெரியாது, சுயபுத்தி இல்லை, அவர் ஒரு மூடநம்பிக்கையாளர், அவரது அமைச்சர்கள் படிப்பறிவற்றவர்கள், தமிழே தெரியாதவர்கள்' என்று ஆரம்பித்து விஜய்யின் அமைச்சரவைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்துக்குப் பணி செய்கிறார்கள், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீட்டை ஆந்திராவுக்கு அனுப்புகிறார்கள், இதற்குத் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அமைச்சர்களும், விஜய் நியமித்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுமே காரணம் என்று வரைக் கொண்டு போகிறார்கள். கடைசியாக பெரியார் அறிவுலகை விஜய் திறந்து வைக்க அதை ஸ்டாலின் போய்ப் பார்த்து அவருக்கு திகவினர் பாராட்டு விழா நடத்தி ஒட்டுமொத்த பாராட்டுக்களையும் அள்ளிப் போகிறார். தமிழுணர்வாளர்களுக்கு இந்த நூலகம், பண்பாட்டு அடையாளக கட்டமைப்புகளுக்கும் தெலுங்கரும் நடிகருமான விஜய்க்கும் எந்த சம்மந்தமும் இருக்க முடியாதெனத் தோன்றுகிறது. விஜய்யும் ஆட்சிக்கு வந்த பிறகு மொழியுணர்வு சார்ந்த எந்த அரசுத் திட்டங்களையும் உருவாக்கவில்லை. அவர் இவ்விசயத்தில் திமுகவுக்கு நேரெதிராகப் போகிறார்.
இந்தத் தெலுங்கர் vs தமிழர், தமிழ் விரோதிகள் vs தமிழுணர்வாளர்கள் எனும் கதையாடல் ஆபத்தானது. அதை விஜய்யின் சிந்தனைக் கலத்தினர் அறிவார்கள். கடந்த ஆண்டு வரை திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், குறிப்பாக தீவிரத் தமிழ் தேசியவாதிகள், முன்னெடுத்த அதே பிரச்சார மொழியைத்தான் இப்போது விஜய்ய்கு எதிராக திமுக ஐ.டி விங் கையில் எடுத்திருக்கிறது. கூடுதலாக, இனவுணர்வும், பண்பாட்டு அறிவும் தவெகவுக்கு இல்லை என்றும் பிரச்சாரம் நடக்கிறது. இதை நாம் அப்படியே 2014 வரைக்கும் இந்துத்துவா, பாஜகவின் அரசியல் மொழி, மோடியின் மீதான இஸ்லாமியத் தாக்குதல் குற்றச்சாட்டுகளை வைத்து இடதுசாரி, இடது-மையத் தரப்பினரால், குறிப்பாக ஊடகவாதிகளும் எழுத்தாளர்களும் கல்விப்புலத்தினரும் சேர்ந்து, தொடுத்த விமர்சனத்துடன் ஒப்பிடலாம். மோடியை ஜனநாயகத்துக்கும் மதசார்பின்மைக்கும் எதிரானவர் எனக் கோருகிற பல்லாயிரம் பக்கங்கள் பதிப்பிக்கப்பட்டு உள்ளன. இதைப் புரட்டிப் போட மோடியின் ஐ.டி விங்கும் கட்சி நிர்வாகிகளும் ஒரு கடுமையான எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அவர்கள் இஸ்லாமியரைத் தாக்குகிற தோரணையில் முற்போக்காளர்களும் மதசார்பின்மையாளர்களும் இடதுசாரி பார்வையாளர்களுமான மத்திய, உயர்மத்திய வர்க்கத்தினரைத் தேசத் துரோகிகள் எனச் சித்தரிக்கத் தொடங்கினர். பாஜகவினர் திட்டமிட்டே அதிகமாக இந்தியில் பேசுவது, ஆங்கிலத்தைத் தவிர்ப்பது, கல்விப் புலத்தினரை இந்துமத விரோதிகளாகவும் காங்கிரஸ் அனுதாபிகளாகவும் சித்தரிப்பது எனக் கவனம் செலுத்தினர். இவர்களை ஊடகங்களிலும் கல்விப் புலத்திலும் வேலையில் இருந்து தூக்கினர். தலைமைப் பொறுப்புகளில் இந்துத்துவ ஆதரவாளர்களைக் கொண்டு வந்தனர். 'நகர்ப்புற நக்சல்கள்' என ஒரு சொல்லாடலை உருவாக்கி மதசார்பற்றவர்களையும் முற்போக்காளர்களையும் தேசத்துரோகக் குற்றவாளிகளாகச் சித்தரித்து சிறையில் தள்ளினர் (அண்மையில் மோடி இவர்களை திமாக்கி நக்ஸல்கள் என்றும் அழைத்தார்). நீங்கள் இந்துத்துவர்களிடம் பேசினால் ஒன்றைக் கவனிக்க முடியும்: அவர்கள் இஸ்லாமியரை வெறுத்துப் பேசுவதை விடவும் அதிகமாக மதசார்பற்ற, முற்போக்கான இந்துக்களையே அதிகமாகக் காய்வார்கள். ஏனெனில் தமது அசல் விரோதிகள் இந்துத்துவத்தை ஏற்காத இந்துக்களே என பாஜக நன்கு உணர்ந்திருக்கிறது. பாபர் மசூதி தாக்குதல் துவங்கி இப்போதைய சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் வரைக்கும் அவர்கள் தாக்குவது இஸ்லாமியரையும் விளிம்பு நிலையினரையுமே என்றாலும் அவர்களுடைய அசல் இலக்கு இவர்களை ஆதரிக்கிற பாஜக-எதிர்ப்பு இந்துக்களே. பாஜக ஆட்சிக்கு வந்தபோது இந்தியா முழுக்க இஸ்லாமியருக்கு எதிராகப் பெரும் கலவரங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது என்னமோ நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் இந்துத்துவ-எதிர்ப்பு இந்துக்கள் ஒடுக்கப்பட்டதுதான். இஸ்லாமியரைப் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் எனச் சொல்லிக் கொண்டே இந்துக்கள் இதை முழுமையாக ஏற்கிறார்களா என்பதையே பாஜக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்காதவர்களைப் பலவிதங்களும் தண்டிக்கிறது. இஸ்லாமிய வாக்காளர்களை இன்னொரு பக்கம் தம் வயப்படுத்தி அவர்கள் இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டதாகச் சித்தரிக்கிறது. அதாவது முற்போக்கு, மதசார்பற்ற இந்துக்களை ஒன்றிணைக்கும் குறியீடாக இஸ்லாமியர்களை பாஜகக் கருதி அதைத் தாக்கி அதன் வழியாக மேற்சொன்னத் தரப்பைப் பலவீனப்படுத்துகிறது.
இதுவே பாசிசத்தின் பிளவுபடுத்தித் தாக்கும் யுக்தி. ஜெர்மனியில் ஹிட்லர் தன் ஆட்சிக் காலத்தில் யூதர்களை அல்ல முதலில் ஒடுக்கியது. யூத ஆதரவாளர்கள் என முத்திரைக் குத்தி இடதுசாரிகளையே அவர் ஒடுக்கி சிறையில் தள்ளினார். அதன் வழியாகத் தன்னை எதிர்க்கும் ஜெர்மானிய இடதுசாரி ஆதரவாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி தனக்கு அடங்கி நடக்கப் பணித்தார். மோடி அமெரிக்காவில் மீண்டும் ஜனாதிபதி ஆனதும் சிறுபான்மையினர், பன்மைச் சமூகத்தினரை ஆதரிக்கிற முற்போக்காளர்களை ஒடுக்கும் நோக்கில் அவர்களுடைய பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகளின் நிதி ஆதாரங்களை முடிவுக்குக் கொண்டு வர முயன்றார். அவர்களைத் தொடர்ந்து அவமரியாதையான மொழியில் பேசி தன் ஆதரவாளர்களையும் அவ்வாறு பேச வைத்தார். அதாவது இஸ்லாமியர், லத்தீன் அமெரிக்கர், ஆசியர்கள், அமெரிக்க கறுப்பினத்தோரை நேரடியாகக் காயாமல் அவர்களை ஆதரிக்கும் வெள்ளையின முற்போக்காளர்களை, இடது-மையவாத சிந்தனையாளர்களைக் காய்ந்தார்; அவர்களுடைய நிலைமைச் சிக்கலாக்கினார்.
ஹிட்லரும் டிரம்பும் மோடியும் அடிப்படையில் செய்வது ஒரு சிறுபான்மை மக்களைக் கடுமையாக எதிர்ப்பிரச்சாரத்துக்கு ஆட்படுத்தி தம் பிரதான எதிர்த்தரப்பை அச்சிறுபான்மையினரின் ஆதரவாளர்களாகவும் தேசத்துரோகிகளாகவும் காட்டி கடுமையாக ஒடுக்குவது. அவர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே போவது. ஒட்டுமொத்த ஊடகங்களையும் அவர்களுக்கு எதிராக முடுக்கி விடுவது.
ஒரு பாசிசக் கட்சியாகத் தவெகவும் அதே திசையில்தான் பயணிக்கிறது. அவர்கள் முற்போக்காளர்கள், மதசார்பற்றவர்களின் இடத்தில் தமிழுணர்வாளர்களை வைத்துள்ளது என்பதே வித்தியாசம். ஏனெனில் தமிழ்நாட்டில் மக்களை ஒட்டுமொத்தமாக ஒன்றிணைக்கும் உணர்வெழுச்சியான புள்ளி மொழியுணர்வும் இனவுணர்வும்தாம். இந்த மொழி, இனவுணர்வை இன்று பிரதிநுத்துவப்படுத்துவோர் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் பதிப்பாளர்களும். இவர்களையே கடந்த ஆட்சியில் திமுக ஆதரித்தது. அதாவது இவர்களை திராவிட, தமிழ் தேசிய, இடதுசாரி, இடது-மையவாதக் குழுமங்களின் குறியீடாக திமுக மாற்றியது. இக்குறியீட்டை ஒழிக்காமல் இந்தக் குழுமங்களைத் தம் வயப்படுத்த முடியாது என தவெக நினைக்கிறது.
இந்த முற்போக்குக் குழுமங்கள் வலதுசாரி முதலீட்டிய சக்திகளுக்குத் தொந்தரவானவர்கள். இவர்களை ஒழிப்பதற்கு பாஜக தமிழ் தேசியக் கடவுளரைக் கைப்பற்றிப் பயன்படுத்தலாம் என நினைத்து முருகன் ஊரவலங்களை நடத்த முயன்றது. முருகனை அப்படியே சிவனுடனும் சைவத்துடனும் இணைத்து அதை இந்துத்துவ கதையாடலின் பகுதியாக்கி முற்போக்காளர்கள் இந்து மதத்தையும் முருகனையும் அழிக்க நினைக்கிறார்கள், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்து இந்து மதத்துக்குத் துரோகம் பண்ணுகிறார்கள் எனச் சித்தரிப்பதே அவர்களுடைய நோக்கம். இந்தக் கதையாடல் தோற்றுப் போக பாஜக வர வேண்டிய இடத்தில் தவெக தோன்றியது.
தவெகவோ இந்து மதத்தின் பக்கம் போகாமல் சிறுபான்மை மதத்தின் சார்பானவர்களாகவும் இந்து மதத்திலும் இருப்பவர்களாகவும் நடுவாந்தரமாக ஒரு நிலையை எடுக்கிறது. அவர்களுடைய அரசியல் முடிவுகளும் வலதுசாரித்தன்மைன் கொண்டவையே. அவர்களால் தம்மைத் தமிழுணர்வுக் கொள்கையாளர்கள், தமிழ் தேசியவாதிகள் எனக் கோர முடியாது. அப்படிச் செய்தால் அவர்களுக்குத் தொடர்ந்து நிதியளித்து ஆதரிக்கும் முதலாளித்துவ சக்திகளும் இந்துத்துவ முதலாளிகளும் கசப்படைவர். மேலும் அந்தக் குழுமங்களின் ஆதரவும் அவர்களுக்கு ஆரம்பம் முதலே இருந்ததில்லை. ஆகையால் அவர்கள் தமிழுணர்வாளர்களை மதிப்பிழக்க வைக்கிறார்கள்; அதற்காக அவர்கள் மேற்சொன்ன தமிழுணர்வுக் குறியீடுகளைத் தாக்குகிறார்கள். தமிழுணர்வுச் செயல்பாடுகளும் சாதனைகளும் தமிழ் தேசிய உணர்வை முன்னெடுக்கும் திமுகவின் முயற்சிகள் ஊழல் முயற்சிகள், போலியான அறிவற்ற சாதனைகளே எனச் சித்தரிக்கிறார்கள் (discrediting). அடுத்து அவர்களைப் பொதுவான தமிழர்களிடம் இருந்து பிரிக்கிறார்கள் (பிரித்தாளும் சூழ்ச்சி). நூலகங்கள், அவற்றுடன் பங்கு பெறும் வாசகர்கள், அவற்றுக்கு நூல்களைப் பரிந்துரைக்கும் நிபுணர் குழுவினர், அவற்றுக்கு நூல்களை எழுதி அளிக்கும் எழுத்தாளர்கள், அந்நூல்களைப் பிரசுரிக்கும் படைப்பாளிகள், இந்நூலகங்களின் பெயர்கள் வழியாக குறியீட்டுப் புலத்தில் உயிர்த்திருக்கும் கலைஞர், அண்ணா, பெரியார் ஆகிய பண்பாட்டுச் சின்னங்கள் உள்ளிட்ட எல்லாரையும் அவர்கள் இந்த "அகல் விளக்குப் பதிப்பக ஊழல்" வழியாக மதிப்பற்றவர்களாக்கிட ஆரம்பித்து விட்டார்கள்.
இனி தவெகவினரைத் தற்குறிகள் என நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களை ஏ.ஐ நூல்களைப் படிக்கிற, போலி பெயரில் போலி நூல்களை எழுதுகிற, அவற்றைக் கொண்ட ஊழல் செய்கிற அறிவுஜீவிகள், போலி உணர்வாளர்கள் என உங்களை அழைப்பார்கள்.
இனி அனேகமான நூலகங்களைச் செயல்பட விடாமல் பண்ணி, நூலக ஆணைகளை முடக்கிப் பெரும் நெருக்கடியில் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் தள்ளுவார்கள். ஒரு சமரசம் பண்ணி அரசுடன் நெருக்கமாகும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் மட்டும் பலனடைவார்கள். அவர்கள் எதிர்காலத்தில் இதே பாணியிலான திமுகவுக்கும், தமிழ் தேசியவாதிகளுக்கும் எதிரான பிரச்சாரத்துக்கு கட்டுரைகள் எழுதிக் கொடுத்து, ஊடகங்களில் பேட்டி கொடுத்து இணங்கிப் போவார்கள். இதன் வழியாக தவெக தன்னை எதிர்க்கிற முற்போக்காளர்களை, பகுத்தறிவாளர்களை ஒரு அடையாள நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது; இன்னும் அதிகமாக வருங்காலங்களில் இட்டுச் செல்லும்.
பாசிசம் எப்போதுமே நமது ஆதாரமான தார்மீக உணர்வைப் பலமிழக்க வைத்து, அடையாளத்தை உடைத்துப் பலவீனமாக்கி நம்மை மூளைச்சலவைப் பண்ணி தன்வயப்படுத்தும். அமைச்சர் ராஜ்மோகனும் புதிய தலைமுறையின் சிந்தை இதழும் (சமஸ்) சேர்ந்து பெரியார் அறிவுலகை மதிப்பிழக்க வைக்கச் செய்துள்ள பிரச்சாரம் இந்த மூளைச் சலவை அரசியலின் முதற்பாகம். வரும் நாட்களில் தமது திராவிடப் பண்பாட்டுச் சின்னங்களையும் புத்தகங்களையும் மலினமாக்கி அற்பமாகத் தமிழர்களையே கருத வைக்கும் பிரச்சாரங்கள் வலுவாகும்.
பி.கு: தமிழ் நவீன இலக்கியம், சிந்தனைகள், கல்விப் புலம் சார்ந்த எழுத்துக்கள், ஆய்வுகள் தமிழ் தேசியத்தின் குறியீடுகள் அல்ல. ஆனால் அவ்வாறு ஒரு கதையாடலை திமுக உருவாக்க முயன்றது; கலைஞர், அண்ணா, பெரியாரின் பெயர்களின் பின்னால் இந்த எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் கல்வியாளர்களையும் கடந்த ஆட்சியில் அணிதிரட்ட முயன்றது. அதன் வழியாகவே திராவிட மரபு, திராவிட மாடல் ஆட்சி ஆகியற்றுக்கான குறியீடாக நூலகங்கள் மாற்றப்பட்டன. தவெக இப்போது இதற்கு எதிராகவே செயல்பட முயல்கிறது.
கருத்துகள்