முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று எழுத்தாளர்களுக்குச் சாத்தியமான ஒரே வறுமை

 

இன்று சமூகப் பொருளாரத்தில் வந்துள்ள மாற்றங்கள் நம்மை நிர்கதி நிலைக்குத் தள்ளிவிட்டன. குறிப்பாகப் படைப்பாளிகளை. நவீனத் தொழில்நுட்பம் இந்நிலையை இன்னும் கடுமையாக்கி விட்டது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கையில், எனக்கு 2000-2010 காலகட்டத்தில் ஓய்வு பெற்று எழுத்தில் கவனம் செலுத்த முடிந்த படைப்பாளிகள் இவ்விதத்தில் சற்று அதிர்ஷ்டசாலிகள் எனப் படுகிறது. 60-70களில் அவர்களுக்கு இந்தளவுக்கு எழுதிப் பிரசுரிக்கும் வசதிகள், தகவல் தொடர்பு, பயண வசதிகள் இருக்கவில்லை. ஆனால் தொழில்நுட்பம் வேலையிடத்தை, குடும்ப உறவுகளைக் காலியாக்குகிற, பிரக்ஞையை, சிந்தனையை உறிஞ்சுகிற அவலநிலையை அவர்கள் தம் இளமையிலேயே சந்திக்க வேண்டி வரவில்லை. நிலையின்மை அச்சம் அவர்களுக்குக் குறைவாகவே இருந்தது. தொடர்ந்து எழுத்தில் இயங்குவதற்கு நிதானமான மனமும் வாழ்க்கை நிலையும் அவசியம். நாம் இதை இன்று பறிகொடுத்து நிற்கிறோம். இன்று வறுமையை விட மோசமான சமூக நிலையொன்று தோன்றியிருக்கிறது - தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே வயிற்றையும் குடும்பத்தையும் வாழ்விடத்தையும் காப்பாற்ற போராடுவது. வறுமையை முன்பு சமாளிக்க முடிந்தது. வேலையின்றி சரியான உணவின்றி எங்கெங்கோ தங்கி வாழ்ந்து சின்னச்சின்ன வேலைகளைப் பெற்று தப்பித்தவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். அவர்கள் எழுதவும் கலைப்பணிகளில் ஈடுபடவும் செய்திருக்கிறார்கள். அன்றைய சமூகப் பொருளாதாரமும் சமூக அமைப்புகளும் அவர்களைப் பாதுகாத்தன. இன்று ஒருவர் வறுமையில் இருந்தால் அவர் அழிந்து விடுவார். இன்று வறுமை என்பது உயிர்க்கொல்லி நோயாகி விட்டது. தொழில்நுட்பத்தைக் கொண்டு நடத்தப்படும் கடுமையான கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் நம் சமூகப் பொருளாதாரத்தின் சமூகப் பாதுகாப்பு வலைகளை ஒழித்து எல்லாரையும் திறந்தவெளிச் சிறைக்கூடம் போல ஒன்றுக்கு நெருக்கிக் கொண்டு வந்துவிட்டது. உலகம் முழுக்க இத்தகைய நிலை வந்துவிட்டது.

இன்று ஒருவர் ஏழை எழுத்தாளராக இருக்க அவர் பணக்கார எழுத்தாளராக இருக்க வேண்டும். அதாவது ஏழ்மைக்கு இன்று நிதி ஆதாரம் அதிகமாக வேண்டும். பணமிருந்தால் ஏன் ஒருவர் ஏழையாகப் போகிறார் என நீங்கள் கேட்கலாம். நீங்கள் அருந்ததி ராயைப் பாருங்கள். அவர் ஒருவிதத்தில் ஏழைதான். அவருக்குச் சொந்தமாகப் பெருநிறுவனங்களோ ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சொத்தோ லட்சக்கணக்கான வருமான தரத்தக்க வேலையோ இல்லை. ஆனால் புத்தக விற்பனை, நிதி நல்கைகள், இலக்கிய விருதுகள், பரிசுகள் அவரை சுதந்திரமாகச் செயல்படவும் வசதியாகவும் 'வறுமை நிலையில்' இருக்கவும் உதவுகின்றன. இன்னொருவர் கிரண் தேசாய். அனிதா தேசாயின் மகள். அவர் நியூயார்க்கில் ஒரு அப்பார்ட்மெண்டில் தன் செலவுகளைச் சுருக்கி வாழ்கிறார். ஆனால் ஏழ்மையின் அலைகழிப்புகள் அவருக்கு இல்லை. மிகச்சில புத்தகங்களையே அவர் கடந்த 20-30 ஆண்டுகளில் எழுதியிருப்பார். ஆனால் தொடர்ச்சியாக உலகம் முழுக்க புத்தக விற்பனை, மொழிபெயர்ப்புகள், ராயல்டி, பரிசுத் தொகைகள், இலக்கிய அமைப்புகளின் நிதியுதவிகள் என அவரைப் பாதுகாக்கின்றன. வாழ்க்கையில் எந்த வேலையுமே செய்யாமல் அவரால் ஒருவித வறுமையில் நியுயார்க்கில் இத்தனைக் காலமாக வாழ முடிகிறது. யாரிடமும் உதவி நாடாமல், தன் எழுத்தால் பெரும் வாசகர் படையை அடையாமல், கடன் இல்லாமல்.
பிறர் தம் சுதந்திரத்தையும் எழுத்து நேரத்தையும் பறிகொடுத்து தொடர் கண்காணிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தம்மை ஆட்கொடுத்து மட்டுமே சிறுசிறு இடைவேளைகளின் போது எழுத முடியும். அல்லது வறுமைக்குப் பயந்து ப்ரீலேன்ஸ் வேலை, சேமிப்பு என ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியே க.நா.சு, சி.சு செல்லப்பா போன்றோரின் உலகுக்கு 50-60 ஆண்டுகளுக்கு முன் செல்லுங்கள். அவர்களுடைய சாகசங்கள் வறுமையை விரும்பி ஏற்றுக் கொண்டதும் சொத்து சேர்க்காமல் சுதந்திரமாக வாழ முடிந்ததும் அதற்கு நியாயம் செய்ய இலக்கியத்தில் உழைத்ததும்தான். இன்று க.நா.சுவோ சி.சு செல்லப்பாவோ இருந்தால் அவரை அவரது குடும்பத்தினர் சகிக்க வாய்ப்பே இல்லை. அழுக்குத் துணியை ஒருவர் கட்டுவதை மதித்த காலம் அது. இன்று அவரை மனநிலைப் பாதித்தவர் என்றே சக எழுத்தாளர்களும் கருதுவார்கள். அவர்கள் ஒன்று சாமர்த்தியமாக இலக்கிய வியாபாரம் பார்க்க வேண்டும் அல்லது வறுமை அவரைக் கொன்றிருக்கும். சி.சு செல்லப்பாவுக்கு ஒரு நகைக்கடை முதலாளி தங்கத்தை அவரது இலக்கியப் பணிக்கான பரிசாக அளித்ததாகவும் கடைசி நேரத்தில் அவர் அதைத் தன் கொள்கை கருதி நிராகரித்ததாகவும் ஒரு சேதி படித்தேன். அவர் மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். அவரைப் போல ஒருவர் இப்படி அப்படி இன்று செய்திருந்தால் வீட்டுக்குள்ளேயே மனைவியும் பிள்ளைகளும் அவரைத் தூக்கிப் போட்டுப் பந்தாடுவதுடன் அவர் பெயரில் அப்பரிசை மோசடி செய்து பறிக்க பலர் முயன்றிருப்பார்கள். க.நா.சு தான் பத்திரிகை நடத்துவதற்காக ஒரு நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி வாங்கி பிரசுரத்தில் நட்டமடைந்து பணத்தையும் இழக்கிறார். அப்பணத்தை அவர் முதலீடு பண்ணியிருந்தால் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படி யோசிக்கவில்லை. அப்படி ஒரு எழுத்தாளர் இன்று பண்ணினால் யாரும் அவரை மன்னித்திருக்க மாட்டார்கள். ஆனால் க.நா.சுவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாள, வாசகத் தொடர்புகளோ அவரைக் கடைசி வரைப் பாதுகாத்ததுடன் தொடர்ந்து கொண்டாடவும் செய்தனர். (அது மட்டுமல்ல இன்றைய எழுத்தாளர்களில் சிலருக்கு இப்படியான நிதியுதவி கிடைத்தால் உடனே அதை வைத்து வட்டிக்கு விட்டுச் சம்பாதிப்பார்கள், நூலக ஆணைக்காக அதிகாரிகளைக் காக்கா பிடித்து பல கோடிகள் சம்பாதித்துப் பதுக்கி பத்திரிகை நட்டமடைந்து விட்டதாக நாடகம் ஆடுவார்கள் அல்லது எதாவது கட்சியில் நுழைந்து எம்.எல்.ஏ சீட் கேட்பார்கள் என்பதால் மக்கள் அவர்களைக் கண்டே அஞ்சுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து நிதியுதவி கிடைக்கும்.)
இவர்கள் அனுபவித்ததை விடக் கொடூரமான வறுமையொன்று அன்று இருந்தது - சரியான உணவோ வசதிகளோ இல்லாமல் வாழ்வது. அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் வேலையை உதறிவிட்டு அத்தகைய வறுமைக்குள் நுழைத்தார். ஆனால் அப்போதும் அவரது குடும்பம் அவரை எப்படியோ உயிருடன் வைத்திருந்தது. தொடர்ந்து எழுதவும் மிகமிகக் குறைவான செலவுகளுடன் வாழவும் அனுமதித்தது. இன்று அவர் அப்படி வந்திருந்தால் ஒரே ஆண்டில் மற்றொரு வேலையைப் பெறும்படி அவரை அவரது குடும்பம் வற்புறுத்தியிருக்கும். எனக்குத் தெரிந்து அவருக்கு இதைக் குறித்த கஷ்டங்கள் இருந்ததே அன்றி பெரும் குற்றவுணர்வால் அவர் உந்தப்பட்டு நிலைகுலையவில்லை. அவரது உறுதிப்பாடு ஒரு உத்தரவாதத்தில் இருந்து வந்தது. அதை இன்று சமூகம் யாருக்கும் அளிப்பதில்லை.
இந்த வறுமை "நீ சில வசதிகளை விட்டுக்கொடுத்தால் உனக்கான சுதந்திரத்தை நீ அனுமதிக்க உன்னை அனுமதிப்பேன்" என சமூகம் அளித்த ஒப்பந்தத்தினால் தோன்றியது. இன்றைய சமூகப் பொருளாதாரம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மட்டுமே அனுமதிக்கிறது - "நீ தொடர்ச்சியாக நான் சொல்வதன் படி அடிமையாக இருந்தால் மட்டுமே உன்னை நான் உயிர்த்திருக்க அனுமதிப்பேன்."
மத்திய வர்க்கத்தினர் அன்று அனுபவித்த வசதியான 'வறுமையை' இன்று நவீன தொழில்நுட்பமும் அதைப் பயன்படுத்தும் முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒழித்துவிட்டது. அந்த வறுமையே அவர்கள் சிந்திக்க, மாறுபட்டு செயல்பட, எதிர்திசையில் பயணிக்க, கற்பனை செய்ய, எழுத, எழுதுவதற்காக மனதுக்கு ஓய்வு கொடுக்க இடமளித்தது. இன்றைய பொருளாதாரமும் தொழில்நுட்பமும் "நீ உன் வறுமையைப் பணமாக மாற்ற முயன்றால், நீ ஒரு தொழில்பூர்வ வறியவனாக இருப்பதாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே உன்னை உயிருடன் இருக்க அனுமதிப்பேன்" என்கிறது. அதன் பிறகு அது புதிய வறுமைக்கான நிபந்தனைகளையும் பட்டியலிடுகிறது. இன்னின்ன சாதி, மத அடையாளங்கள், இன்னின்ன பொருளாதார வர்க்கங்கள், கருத்துக்கள், அரசியல், செயல்பாடுகள், பிரச்சாரம் என அது முன்மொழிவதை ஏற்று அவற்றில் நாம் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து சந்தையில் பண்டங்களை உற்பத்தி பண்ண வேண்டும். நம் வறுமைக்குப் புது வடிவங்களைக் கொடுக்க வேண்டும். ஏழ்மை, மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழ்மை, சாதி, மத, வர்க்க, பாலின பேதங்களால் வரும் ஒடுக்குமுறை இப்படி ஏதாவது ஒன்றுக்குள் பொருந்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நம் வாழ்க்கைப் பின்னணியை மாற்றி புதிய பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். ஒவ்வொரு மேடையிலாக மைக்கைப் பிடித்து பார்வையாளர்களுக்கு ஏற்பப் பேச வேண்டும். கண்ணீர் மல்க வைக்க வேண்டும். இரக்கத்தைத் தூண்ட வேண்டும். அவர்கள் கண்ணில் நாம் ஒரு வறிய எழுத்தாளராகத் தோன்றினால் நமது வறுமையை அனுமதிப்பார்கள்.
வறுமை இன்று இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...