"ஜெய்லர் 2வில்" பழக்கடை மூர்த்தியின் பாத்திரம் மட்டும் தனியாகத் தரமாகத் தெரிகிறது. அதாவது மொத்தப் படத்திலும் இது மட்டுமே சற்று அடர்த்தியாக, குணச்சித்திர மடிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாத்திரமே படத்தின் முதற்பாதியைத் தூக்கி நிறுத்துவதையும் காண்கிறேன். ஹீரோவை விட மேலான பாத்திரம். ஒரு உதாரணம்: கோலி எனும் பாத்திரம் இவரை அங்கிள் என அழைத்துக் கொண்டிருக்கும். அவர் இவரிடம் "அங்கிள் உங்களை சொந்த ஊரிலேயே யாருக்கும் தெரியல. உங்களை அடுத்த ஊர்க்காரங்க மதிப்பாங்கன்னு நம்ப முடியல" என்றதும் அவர் "எனக்கும் லைட்டா அந்த சந்தேகம் வந்திச்சுடா" என சிரித்தபடி சொல்வார். அதன் பிறகு இவர் தனக்குப் பிடிக்காதவர்களைத் தண்டிக்க ஒரு பெஞ்சு வைத்திருப்பார். அதில் அடிக்கடி யாரையாவது கட்டி வைத்து அடிகொடுப்பார். அவர்கள் இவரை எரிச்சலடைய வைத்தவர்கள், இவரை மதிக்காமல் போனவர்கள். கோலியிடமும் போய் படுத்து சவுக்கடி பெற்றுக் கொள் என்பார். "உன் பேச்சில திமிர் இருந்திச்சு" என்பார். அதுவும் போய்ப் படுத்து அடி வாங்கிக் கொள்ளச் சொல்வது உச்சபட்ச பாசிசம். வெள்ளந்தியான சுபாவத்தின் இடையில் இந்த சைக்கோத்தனம் சுவாரஸ்யமான மடிப்பு.
அதே போல கடைசி வரைக்கும் தன் முட்டாள்தனத்தை ஒருவித கேடயமாகப் பயன்படுத்தித் தப்பித்துக் கொண்டே போவார். நிறைய பணம் கிடைக்கும்போது அதை எப்படி முதலீடு செய்வது எனத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பார். தப்புத்தப்பான இடங்களில் தன் பணத்தைப் பதுக்குகிறார் என்பதும் நமக்குப் புரியும். நம் ஊரில் மட்டும்தான் என்றில்லை - எல்லா ஊர்களிலும் அவசரமாய் தப்பான பணத்தைச் சம்பாதித்தவர்கள் கன்னாபின்னாவென்றுதான் பதுக்குகிறார்கள். எல்லாவற்றையும் மீறி அவரிடம் ஒருவித தன்னம்பிக்கை, கூலான நடத்தை உள்ளது.
இப்பாத்திரத்தை அதனாலே இயக்குநர் எழுதியிருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது. எதாவது படத்தில் இருந்து எடுத்திருக்கலாம் அல்லது யாராவது தனியாக எழுதிக் கொடுத்திருக்கலாம். ஏனென்றால் இப்பாத்திரத்திற்கு ஒரு உருமாற்றத்தை, முத்தாய்ப்பான முடிவை இயக்குநர் எழுதவில்லை. முக்கியமாக ரஜினியின் பாத்திரமான டைகர் பாண்டியன் இந்தளவுக்கு சிரத்தையாக எழுதப்படவும் இல்லை. சொல்லப்போனால் படத்தில் பல காட்சிகள் அசிரத்தையாகவே எழுதப்பட்டுள்ளன. மூர்த்தியின் பாத்திரம் அளவுக்கு தகவல் செறிவு வேறெதற்கும் இல்லை.
சிலர் இவர் முதல்வர் விஜய்யை பகடி பண்ணும் பாத்திரம் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஆதவ் கொஞ்சம் நெருக்கத்தில் வருகிறார்.
கருத்துகள்