முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போண்டா நகரம்

 நேற்று ஜெய்ரிகி பதிப்பகத்தின் பதிப்பாளர் சாய் ரமணா என் வீட்டுக்கு வந்திருந்தார். மூன்று மணிநேரத்துக்கு மேல் இலக்கியம், பதிப்புத் தொழில், ஆசிரியப் பணி, எழுத்துக் கனவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தோழர் பல்லவி பயங்கரமாக சிக்கன் குழம்பும் இட்லியும் செய்து அசத்தினார். இருவரும் வியர்க்க வியர்க்கச் சாப்பிட்டோம். எங்களைப் பார்க்க அப்போது பழைய படங்களில் சிவாஜி மருத்துவராக வந்து அறுவை சிகிச்சை செய்வதைப் போல இருந்திருக்கும்.

அவர் போன பிறகு தோழர் பல்லவி சொன்னார், "நாம் மைசூருக்கு வந்தபிறகு வரும் முதல் இலக்கிய நண்பர் இவர்". ஓராண்டு ஆகிவிட்டது. ஒருமுறை நண்பர் வேடியப்பனை அவரது நண்பருடன் ஒரு ஓட்டலுக்கு வெளியே வைத்துச் சந்தித்தேன். அந்த ஓட்டலின் சமையலறை எங்கள் அலுவலகத்தின் பின்பக்கமாக வரும். அவர்கள் மைசூர் போண்டாவுக்கான சமையலை ஆரம்பித்ததும் அதிலிருந்து ஒருவித திகிலூட்டும் வாசனை கிளம்பி வரும். நானும் என் சக ஊழியரும் அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய், மசாலா குறித்துப் பகடி செய்து சிரிப்போம். நான் பல நாட்களாக அங்கு சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தேன். அன்று போண்டாவைச் சாப்பிட்டதும் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கையில் திடீரென எதிரியின் யுத்த விமானங்களைப் பார்த்த சாமானியரின் உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஒன்றுக்கு ரெண்டு வாங்கி விட்டார்கள். துணிச்சலுடன் சமாளித்தோம். மைசூர்வாசிகள் தினமும் மாலையானால் பெரிய ராட்சஸர்களைப் போல இந்த குண்டுகளை எடுத்து முழுங்கி விட்டு காப்பியை ஆற்றிக் குடிப்பார்கள். அதன் பிறகு நான் யாரையும் கிண்டல் பண்ணக் கூடாது என முடிவெடுத்தேன். ரொம்ப நேரம் பேசிவிட்டு அன்று அன்று பிரிந்தோம். பிறகு நேற்றுத்தான் அடுத்ததாக இந்த மண்ணில் ஒரு இலக்கிய நண்பரைப் பார்க்கிறேன்.
சாய் ரமணா போனபிறகு நான் அவ்வளவு நேரம் மாலையில் அரட்டையடித்து ஓராண்டுக்கு மேலாகிறது என உணர்ந்தேன். பெங்களுரில் இருக்கும்போது நான் யாருடனாவது பேசிக் கொண்டே இருப்பேன். காலையில் ஆரம்பித்தால் நான் வேலையை முடித்து பேசி முடித்துக் கிளம்பவே 7-8 மணி ஆகிவிடும். அந்தளவுக்கு நண்பர்களும் மாணவர்களும் இருந்தார்கள். சென்னை இன்னும் பயங்கரம். வாரத்தில் இரண்டு நாட்களாவது யாராவது என்னைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். நாங்கள் உலகப்போரைத் திட்டமிடுகிற ஆயுத வியாபாரிகளின் தீவிரத்துடன் இலக்கியம் பேசுவோம். அவர்கள் மிரட்சியுடன் எனக்கு விடைகொடுக்க நான் அதே திகிலுடன் எழுத என் கணினியிடம் போவேன். இப்போது சென்னையிலும் இலக்கிய நண்பர்கள் இப்படி வருவதில்லை என நண்பர்கள் சொல்கிறார்கள். எல்லாருமே கல்யாணம் பண்ணிக் கொண்டு பிஸியாகி விட்டார்களா அல்லது அலுவலகத்தில் வேலை அதிகமா அல்லது பேசப் பயப்படுகிறார்களா எனத் தெரியவில்லை.
இலக்கியத்தை விடுங்கள். உலகிலேயே ஊமை நகரமான இந்த மைசூரில் நான் யாரும் பேசிக்கூடக் கேட்டதில்லை (பள்ளி மாணவர்கள் மட்டுமே விதிவிலக்கு. வளர்ந்ததும் பேசுவதை நிறுத்திக் கொள்கிறார்கள்). பேசுவார்கள், ரொம்ப அமைதியாக ஏதோ இலைகள் தமக்குள் சலசலத்துக் கொள்வதைப் போல. எப்போது பார்த்தாலும் கடை வாயிலில் அமைதியாக நின்று சாலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடைக்காரர்கள் எப்படி இருப்பார்கள் எனில் நாம் அவர்கள் முன்னால் போய் நின்றால் நம்மை ஊடுருவிப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஒருமுறை பல்லவி ஒரு காவல் நிலையத்துக்குப் போய் எங்கள் தெருமுனையில் சிலர் இரவில் கூட்டமாகக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனப் புகார் அளிக்கப் போனார். போலிசார் "எந்த இடம், யார் நீங்கள், முகவரி என்ன, எத்தனை வருடமாக இருக்கிறீர்கள்" என்றெல்லாம் கேட்கவில்லை. "போங்க நாங்க வரோம்" என்று முடித்துவிட்டார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் அதற்கு மேல் வாய் திறக்கவும் இல்லை, வரவும் இல்லை. இதையெல்லாம் கருத்திற் கொண்டுதான் மைசூர் போண்டாவையே கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று தோன்றும்.
ஆகையால் ஒருவர் வீட்டுக்கு வந்து இலக்கியம் பேசிப் போனால் இரவு ஜம்மென்று தூக்கம் வருகிறது. அப்பாடா நாம் மனிதர்தாம், நாம் உயிருடன் இருக்கிறோம் என ஒரு நிம்மதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

ஒரு சோதனை

  புனைவு எழுதுவது - குறிப்பாக நாவல் - நம் மன நெருக்கடியை, பதற்றத்தைக் குறைக்குமா? அதாவது புறச்சூழல் தரும் கடுமையான அழுத்தத்தில் இருந்து அது நம்மைக் காப்பாற்றுமா? அதை ஒரு 'சிகிச்சையாகப்' பாவிக்க முடியுமா? இக்கேள்வியை வரும் இரு நாட்களில் சோதித்துப் பார்க்கப் போகிறேன். இதற்கான காரணத்தையும் விளைவையும் குறித்து விரைவில் எழுதுகிறேன்.