
பிபெக் தேப்ராயின் ராமாயண மொழிபெயர்ப்பைத் தற்போது படித்து வருகிறேன். ஏற்கனவே இவரது மொழிபெயர்ப்பில் மகாபாரதத்தைப் படித்திருக்கிறேன். தெளிவான சிக்கல் இல்லாத மொழிபெயர்ப்பு.
ராமாயணம் ஒரு ஒழுக்கவாத, லட்சியவாதப் படைப்பு எனும் எண்ணம் நீண்ட காலமாக இருந்தது. அதனாலே அதன் மீது ஒரு கசப்பும் இருந்தது. நான் படித்த ராமாயணச் சுருக்கக் கதைகளும் பார்த்த நெடுந்தொடரும் இதற்குக் காரணம். அவை ராமாயணத்தின் காட்சிகளை மட்டுமே தொகுத்துத் தருவதாலும் புறவயமாக மாற்றுவதாலும் ஏற்படுகிற சிக்கல் இதுவென இப்போது தோன்றுகிறது. ராமாயணம் அடிப்படையில் ஒரு உருவகப் புனைவு. அதன் கவனம் முழுக்கவே உருவக மொழியில் ஒரு தனிமனிதரின் ஆன்மீகச் சஞ்சாரத்தைச் சித்தரிப்பதிலேயே உள்ளது. தான் யாரென்பதை அறிவதிலேயே ராமனின் கவனம் ஆரம்பம் முதலே இருக்கிறது. அவன் ஒவ்வொரு முறை தன் ஆழங்களை அறியும்போதும் அவனது கோபமும் இச்சையும் அகந்தையும் அவனைப் பின்னுக்கு இழுக்கிறது. அவனது குடும்பத்தினர், சகோதரர்கள், அவனை எதிர்கொள்ளும் துறவிகள், அசுரர்கள் என ஒவ்வொருவராக அவனைத் திசை திருப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அவனது அகவுலகின் பிறழ்வுகளின் புறவடிவங்கள். வனம், அதிலுள்ள மரங்கள், இருட்டு, மலர்கள், விலங்குகள், ஆசிரமக் குடிகள், துறவியருக்கு காட்சியளிக்கும் இந்திரன், கந்தர்வர்கள், ராட்சஸர்கள், இனக்குழுக்கள் எல்லாருமே அவனது பிரக்ஞையின் புறத்தோற்றங்கள். அதாவது நாம் ஒன்றைப் பார்க்கும்போது, நினைக்கும்போது அது நமக்குள் பல்வேறு நிபந்தனைகளால் தோன்றுகிறது - உணர்வுகள், உணர்ச்சிகள், புலனனுபவம், நினைவுகள், அகத்தே மறைந்து கிடக்கும் தோற்றப்பாடுகள் எனக் கலந்து கொண்டு தோன்றியபடி இருக்கின்றன. இவையே நிபந்தனைகள். இவற்றுக்கு அப்பால் ஒன்றைக் காணவும் நிம்மதி பெறவும் தவிக்கிறோம். வைதீகம் இதைப் பிரம்மனுக்கான தவிப்பு என்கிறது. பௌத்தம் இதைச் சூனியத்துக்கான தவிப்பு என்கிறது. ஆனால் மனம் மொழியினால் உருவானது, தொடர்ந்து அவ்வாறே உருவாவது என்பதால் நம் தவிப்பு தவிப்பாக மட்டுமே தொடர்கிறது.
தண்டகாரண்யத்தில் ராமனும் லட்சுமணனும் சீதையும் பயணிக்கையில் விராதன் எனும் ராட்சசன் எதிர்ப்பட்டு சீதையைக் கடத்துகிறான். அப்போது ராமனின் பாதுகாப்பின்மையும் சீதை எப்போதும் தனதாக்குகிற ஆவேசமும் அதிகரிக்கிறது. அவன் தன்னைத் தன் குடும்பமும் தகப்பனும் எதற்காக அங்கு அனுப்பினார்கள், வனத்தில் ஒரு அரசனாகத் தன் பொறுப்பு என்னவென யோசிக்கும் அவன் அப்போது சீதை மட்டுமே தனக்கு முக்கியம் என முடிவுக்கு வருகிறான். ஒரு தேகமாக மட்டும் மேலெழும் அவன் இருப்பு ஆண்மையின் உணர்வெழுச்சியால் தூண்டப்படுகிறது. ஒரு ஆன்மாவாக அவன் எதுவாக இருக்கிறானோ அது பின்னுக்குச் சென்று மறைகிறது. அவனும் லட்சுமணனுமாக விராதனைக் கைகள் வெட்டி உயிருடன் புதைக்கிறார்கள்.
இந்த விராதனை நான் ராமன் தனக்குள் எதிர்கொள்ளும் வன்முறையின் உருவகமாகவே வாசித்தேன். அதாவது இக்காட்சிகளை ராமனின் எண்ணங்களிலும் உணர்வுகளிலும் நிகழும் கொந்தளிப்பாக, சுய-அழிவாக வாசிப்பதே ஆழமான பார்வையை நமக்குத் தருகிறது.
ராமன் அடுத்து தன்னால் இதற்கு மேல் வன்முறையின் கடலில் நீந்த முடியாது என எண்ணி ஷரபங்க முனிவரின் ஆசிரமத்துக்கு விரைகிறான். 'இங்கு நமக்குப் பாதுகாப்பில்லை' என அவன் லட்சுமணனிடம் சொல்லும் இடம் முக்கியமானது. ஆனால் அவன் அங்கு போகும்போது அங்கு காட்சியளித்துக் கொண்டிருக்கும் இந்திரர் அவன் என்னைப் பார்ப்பது சரியல்ல என்று கூறி விரைகிறார். இந்திரரை ராமனின் அகத்தினுள் வீற்றிருக்கும் தூய்மையான நிபந்தனையற்ற வெற்றிடத்தின் உருவகம் எனக் கொண்டோமானால் அவர் அவனை ஆனந்தத்தை அடைய விடாமல் மீண்டும் துயரத்தினுள், ரௌத்திரம், தாபத்தினுள் தள்ளுகிறார் எனக் கொள்ளலாம். நெருப்பில் வீழ்ந்து தன்னுயிரை மாய்க்கும் முன் ஷரபங்கர் வேறு அவனை அங்கிருந்து வனத்துக்குள் மேலும் செலுத்தி விடுகிறார். ராமனின் வீழ்ச்சி இன்னும் தீவிரமாகிறது. ராமன் ஒரு அவதார புருஷன் அல்லன், அவன் தொடர்ந்து தனக்குள் தடுமாறுகிற ஒரு எளிய ஆன்மா என்பதே எனக்கு ராமாயணத்தின் ஊடாகக் கிடைக்கிற சித்திரம். இது பொதுவான ராமாயணப் பொழிப்புரைகளுக்கு மாறாக உள்ளது. இத்தகைய ஒரு பார்வையை நீங்கள் ராமாயணத்தின் பிற தழுவல்களில், குறிப்பாக காட்சி வடிவங்களில் காண முடியாது (என் வாசிப்புக்கு எட்டிய வரையிலும்). நம் பிரச்சினை உருவகங்களை நேரடியாக வாசித்துப் பொருள் கொள்வதே.
இப்படி வாசிப்பதற்கான சாத்தியங்களை வால்மீகி தன் வர்ணனைகளால் உருவாக்குகிறார். அவரது அக்கறை அதிகமும் இந்த உருவகக் கட்டமைப்பிலேயே இருக்கிறது. அதனாலே அவர் நாடகீயமான உணர்வு மோதல்கள், எதார்த்தவாதம், பாத்திர முரண்களில் அதிக நேரம் செலவழிப்பதில்லை (வியாசர் மகாபாரதத்தில் செய்வதைப் போல). குறைவான பக்க அளவைக் கொண்டிருப்பதும் ராமாயணத்தின் கவித்துவச் செறிவுக்கு உதவுகிறது. தேப்ராயும் மகாபாரதத்தை ஒரு நாவலுடனும் ராமாயணத்தை ஒரு நெடுங்கதையுடனும் ஒப்பிடுவது கவனிக்கத்தக்கது. வால்மீகியின் ராமாயணத்தை கம்பரின் ராமாயணத்துடன் ஒப்பிடுகையில் பின்னது மேலும் பௌதீகமானது, காட்சிபூர்வமானது, புலன் சார்ந்த வாசிப்புக்கானது, நேரடியானது எனத் தோன்றுகிறது.
ராமாயணத்தைப் படிக்கையில் மௌனியின் கதைகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. ஏன் யாரும் இன்னும் இரு பிரதிகளையும் ஒப்பிட்டு ஆய்வு பண்ணவில்லை என வியப்பேற்படுகிறது.
வால்மீகியின் ராமாயணத்தை வாசிப்பது ஒரு அபாரமான அனுபவம். உலகம் குறித்த ஒரு மிகப்பெரிய தெளிவை அது அளிக்கிறது. இதுவே பரவசமான அனுபவம் என்றாலும் நேரடியாக சமஸ்கிருதத்தின் இதன் கவிதைகளைப் படிக்க முடிந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
கருத்துகள்