முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆவணப்படங்களிலும் சுயசரிதைகளிலும் எழுத்தாளர்களின் காதலியர்

 

(ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டும் அவர் மனைவியும்) 

(ஹெமிங்வேயும் அவர் மனைவியும்தான் என நினைக்கிறேன்)

அமெரிக்கன் மாஸ்டர்ஸ் PBS, BBC தயாரிப்புகளாக சில ஆவணப்படங்களைப் பார்த்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டு துவங்கி நவீன காலம் வரையிலான படைப்பாளிகளை எடுத்துக் கொண்டு எழுத்தாளராக அவர்களுடைய "கதை" என்ன, எப்படி எழுத்துக்குள் வந்தார்கள், பிரதானமான பேசுபொருள் என்ன, அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள முக்கியமானவர்கள், குறிப்பாக எழுத்தைப் பாதித்தவர்கள் யார் இப்படி பிரமாதமாக ஒரு வாழ்க்கைச் சித்திரத்தைத் தருகிறார்கள். அர்சுலா லீகயினின் ஆவணப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் அர்சுலாவே பேசுகிறார் என்பதால் இன்னும் ஆழமாக அவரைச் செலுத்திய விசைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக மானுடவியலாளரான அவரது அப்பா, எழுத்தாளராக பின்னர் மாறிய அவரது அம்மா, அவர்களுடன் தங்கிய அழிந்து போன தன் இனக்குழுவின் கடைசி மனிதரான ஒருவர் என அது பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது (தொடுவழியைப் பின்னூட்டத்தில் தருகிறேன்.) பி.பி.ஸி தயாரிப்பான ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டின் ஆவணப்படம் இளமைத் தெறிப்புடன் எடுக்கப்பட்டது. அதில் வருகிற மொழியை மிகவும் ரசித்தேன். பிட்ஸ்ஜெரால்டின் விமர்சகர்களின் கருத்துக்கள், அவர் எழுதிய கடிதங்களில் இருந்து மேற்கோள்கள், புகைப்படங்கள் என ஒரு அழகான குறுக்குவெட்டுத் தோற்றம் அதில் வருகிறது.

ஆனால் தமிழில் எழுத்தாளர்கள் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் என்னைக் கவரவில்லை (நகுலனின் நேர்காணல் மட்டுமே நான் அடிக்கடிப் பார்ப்பது). ஏனென்றால் நமது ஆவணப்படங்களில் நேராக எழுத்தாளரின் குழந்தைப் பருவம் என ஆரம்பித்து பள்ளிக் கூடத்துக்குப் போய் விடுகிறார்கள். இந்தப் பள்ளிக் கூடத்துக்கும் அவரது இலக்கியத்துக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. ஆனாலும் ஆவணப்பட இயக்குநர்களுக்குப் பள்ளிக் கூடம் என்றால் ஒரு பிரமை. அடுத்து எழுத்தாளரின் அப்பா, அம்மா, சித்தி, அத்தை, தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி என எல்லாரையும் காட்டுவார்கள். இவர்கள் நடுவே எழுத்தாளர் பாவமாகத் தோன்றுவார். சில எழுத்தாளர் வேலை செய்த அலுவலகத்துக்கும் போவார்கள். பாத்ரூமைத் தவிர எல்லா இடங்களுக்கும் போவார்கள். அதுவும் எதாவது ஒரு வயதான அத்தை தோன்றி அவன் சின்ன வயசில இருந்தே என் இடுப்பில்தான் உட்காருவான் என்பார்கள். உடனே கட் செய்து எழுத்தாளரைக் காட்டினால் அவரது காதில் இருந்து நரைமுடி பளிச்சிடும், வழுக்கைத் தலை பளிச்சிடும். இவரால் இடுப்பில் உட்கார்ந்தார்? சரி அதற்கும் எழுத்துக்கும் என்ன சம்மந்தம்? அதன் பிறகு அவரை ஒரு நாற்காலியிலோ பூங்காவிலோ உட்கார வைத்து எழுதச் செய்து படம் பிடிப்பார்கள். அவர்கள் ஊரில் உள்ள ஆறு, குளம் எல்லாம் காட்டுவார்கள். அடேய்! எழுத்தாளரை அப்படியே ஒரு சாமான்ய மனிதராக்கி விட்டு அவரது எழுத்தைப் பற்றி அவரையே பேச வைப்பார்கள். அரிதாக சில விமர்சகர்களையும் பேசச் சொல்வதுண்டு. ஆனால் அவர் எழுத்தாளரான கதையோ அவருடைய எழுத்தின் தனித்துவத்தையோ அது தோன்றிய சூழலையோ பற்றிப் பேச மாட்டார்கள். வரலாற்றில், சமூகப் பொருளாதாரத்தில், பண்பாட்டில் அவரது எழுத்து எங்கே அமைந்து வருகிறது எனப் பேச மாட்டார்கள். பார்த்து முடித்ததும் இவர் ஒரு அலுவலக குமாஸ்தா, ஒரு மாமா என்றே நமக்குத் தோன்றும். சிலர் வளவளவென எழுத்தாளரையும் அவரது நண்பர்களையும் பேச வைப்பார்கள்.

இதில் ஒரு பொதுவான அம்சம் அச்சில் வெளிவரும் நேர்முகங்களிலும் இப்படித்தான் உங்கள் குழந்தைப் பருவம், இளமை, குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள் எனும் கேள்விகள் இருக்கும். அப்படி என்னதான் அப்செஷன் எனத் தெரியவில்லை. என்னைப் பற்றி யாராவது ஆவணப்படம் எடுத்தால் தயவு செய்து நான் படித்த பள்ளிகோ கல்லூரிக்கோ போக வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து ஒரு முக்கியமான விசயம்: நம்மவர்கள் ஒருபோதும் எழுத்தாளரின் காதலியர், காதலர்களைப் பற்றி ஆவணப்படத்தில் பேசுவதில்லை. ஆனால் ஆங்கில, ஐரோப்பிய ஆவணப்படங்களில் எழுத்தாளர்களின் பல மனைவியர், காதலியர், காதலர்கள் பற்றி விபரங்கள், படங்கள், விவரணைகள் வரும். நம்மூரிலோ அதை ஏதோ பாவமாக நினைக்கிறார்கள். பாரதியாருக்கு காதலியர் யாராவது இருந்தார்களா, அவர் ஹெட்ரோசெக்‌ஷுவலா, பை-செக்ஷுவலா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. புதுமைப்பித்தனின் வாழ்க்கை சரிதையையும் படித்திருக்கிறேன். அதிலும் ஒன்றும் இருக்காது. இந்தப் போக்கைப் பின்பற்றித்தான் நமது எழுத்தாள ஆவணப்படங்களும் பயங்கர ராமாயணமாக எடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக எழுத்தாளர்கள் கன்னாபின்னாவெனக் காதலிக்கக் கூடியவர்கள் என்பதால் இந்த மறைக்கப்பட்ட பகுதி ஒரு இழப்புதான். அவர்களுடைய உலகின் முக்கியமான பகுதியை வாழ்க்கை சரிதைகளும் சுயசரிதைகளும் ஆவணப்படங்களும் தவற விடுகின்றன. ஆனால் இதுவே நடிகர்களின் வாழ்க்கைக் கதைகளில் இப்பிரச்சினை வருவதில்லை. எம்.ஜி.ஆரின் சுயசரிதையில் அவர் இளமையில் குடியிருந்த தெருவில் வாழ்ந்த பெண்ணை அவர் காதலித்தது, ஜானகியைக் காதலித்தது எல்லாம் சுவாரஸ்யமாக விரிவாக வருகிறது. மகாத்மா காந்தியின் வயோதிகக் காலக் காதலியான சர்ளா தேவி பற்றியெல்லாம் தகவல்கள் உண்டு. நேருவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சில மலையாள எழுத்தாளர்கள் தம் நேர்முகங்களிலேயே தமது பாலியல் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறார். குளத்தில் புன்னப்துல்லா தனது பல திருமணம் கடந்த பந்தங்களைப் பற்றிப் பேசும்போது "என் ஊரிலேயே சிலரைப் பார்க்கையில் இவர் என் மகன்தானோ என்றெனக்குத் தோன்றும்" என்கிறார். மாதவிக் குட்டியின் "என் கதையை" சிலர் படித்திருப்பீர்கள். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தான் மனம் பிறழ்ந்து ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டு மன்னிப்புக் கேட்ட, தன் மனைவியிடமும் அதை வெளிப்படுத்திய "ஒரு பாவி மனம் திரும்புகிறான்" பாணிக் கதையை அவரே எழுதியும் தன் நேர்காணல்களில் பேசியும் இருக்கிறார். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே கட்டுப்பெட்டியாகத் தம்மைக் காட்டிக் கொள்ள ஏதோ ஒரு அழுத்தம் நம் சூழலிலேயே உள்ளது. எழுத்தாளர்கள் தவறிழைக்கவோ பிறழவோ கூடாது எனும் வலுவான எண்ணம் நம்மிடையே உள்ளது.

இதில் விதிவிலக்கில் ஒரு விதிவிலக்கும் உண்டு: தமிழ் எழுத்தாளர்கள் காதலியைப் பற்றிச் சொல்ல மாட்டார்களே தவிர தம் மனைவியைக் காதலிப்பதாக மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். சு.ரா, ஜெயமோகன், சாரு எல்லாம் சிலாக்கியமாகத் தம் மனைவியரைக் குறித்துப் பேசியிருக்கிறார்கள் அல்லது பிறர் பேசியிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் ... என்னவோ உதைக்கிறது. உலகில் தமிழ் ஆண் எழுத்தாளர்கள் மட்டுமே தம் மனைவியரை விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமா என்ன? எனக்கென்னவோ காதலியைப் பற்றிச் சொல்ல வேண்டியதை மனைவியைப் பற்றிச் சொல்கையில் சேர்த்து மனைவியை ஒரு fetishஆக மாற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. காதலியர் பற்றி பேசினாலோ குடும்பத்தில் பிரச்சினை வரும், சமூகக் குழப்பம் வரும் என நினைக்கிறோம். மனைவி ஒருவிதத்தில் நமது அகத்தில் புதைந்து கிடக்கும் விருப்பங்கள், காதல்கள், மோகங்களின் வெளிமுகமாக மாற்றப்பட்டு விடுகிறார் என நினைக்கிறேன்.

மாறாக, எனக்குத் தெரிந்து தமிழ் பெண் எழுத்தாளர்கள் தம் கணவர்களைப் பாராட்டி எழுதிப் படித்த நினைவு எனக்கு இல்லை. சொல்ல ஒன்றும் இல்லாமல் இருக்காது: தம் கதைகளில் வரும் கணவர்களிடம், கணவர் தோரணை கொண்டோரிடம் நிறைய காதலைக் கொட்டுவார்கள். ஆனால் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது ஒட்டுமொத்த கோபமும் அவர் மீது திரண்டு விடுகிறது. இது போக ஆண் எழுத்தாளர்களுக்கு உள்ள சுதந்திரம் கூட பெண் எழுத்தாளர்களுக்கு இல்லையென்பதால் காதலையெல்லாம் பேசவே முடியாது. குறிப்புணர்த்தக் முடியாது. அவர்களுக்கு எப்போதுமே பாதிக்கப்பட்ட பெண், போராடி ஆணாதிக்க அரண்களைத் தகர்த்த போராளி கதையாடல்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...