
நமது செயல் நல்லதாக இருந்தாலும் அதற்கு ஒரு மோசமான நோக்கம் இருந்தால் அது நற்செயலா கெட்ட செயலா? எது ஒரு செயலின் இயல்பைத் தீர்மானிக்கிறது? ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
மோசமான நோக்கம் கொண்ட நற்செயலானது ஒரு மோசடியை அம்பலப்படுத்தினாலும் அது ஒரு கேடுகெட்ட கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரவோ அக்கட்சியின் பிரச்சாரத்துக்குத் துணை போகவோ பயன்படுத்தப்படும்போது, நமது செயலும் அதற்கேற்ப நிகழ்த்தப்படும்போது அதுவும் கேடுகெட்டதாகிறது. ஊழலுக்கு எதிராக இந்தியா எனும் India Against Corruption எனும் தலைப்பிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் நினைவிருக்கும். நல்ல போராட்டங்களே எனினும் நல்ல நோக்கம் கொண்ட போராட்டங்களா அவை என்றால் இல்லை. அவை மோடியைப் பிரதமராக்க வழியமைத்தன. அப்போராட்டங்களுக்கு பல்வேறு நடைமுறை உதவிகளையும் செயல்பாட்டாளர்களையும் ஆர்.எஸ்.எஸ் கொடுத்ததாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களே பின்னர் ஒப்புக் கொண்டனர். அப்போராட்டங்களின் நாயகனான அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு மென்-இந்துத்துவ ஆட்சியாளர் ஆனார். அன்னா ஹசரே ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பது அம்பலமான சேதி. அவர் பாஜக ஆட்சியில் நடந்த ஒரு முறைகேட்டுக்கும் இதுவரை வாய் திறக்கவோ போராடவோ இல்லை. தமிழ்நாட்டில் அவரைப் பாராட்டி புத்தகம் எழுதியவர் ஜெயமோகன். தீவிரமாக அவரை ஆதரித்த மற்றொரு பதிப்பகம் பத்ரியின் கிழக்குப் பதிப்பகம். மெல்ல மெல்ல மக்களுக்கு தவறான நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு நற்செயல் அது என விளங்கியது. இப்போதைய நூலக மோசடி சர்ச்சையும் அப்படியானதே. அது தன்னளவில் சரியானது - ஆனால் அது எப்படியான நோக்கம் கொண்டது என நாம் வினவினால் தமிழுணர்வு, இனவுணர்வு, திராவிட மரபு ஆகியவற்றின் குறியீடுகளாக உள்ள நூலகங்களையும் புத்தகங்களையும் ஒழிப்பதற்காக என்பது புலப்படும்.
நெருப்பை ஒரு விளக்கின் திரியில் சுடரேற்றப் பயன்படுத்தினால் வெளிச்சம் தரும். அதே நெருப்பை ஒரு நகரத்தையே தீக்கிரையாக்கப் பயன்படுத்தினால் அது அழிவைத் தரும். இப்போதைக்கு நூலக ஒழிப்பு அழிவுச் செயலாகவே உள்ளது.
கருத்துகள்