(உலகக்கோப்பை துவங்கின புதிதில், போன மாதம் உயிர்மையில் எழுதின கட்டுரை. இப்போது உலகக்கோப்பை முடிந்த நிலையில் சற்றே ஜாலியாக இருக்கிறது மறுபடி படிக்க) உலகக் கோப்பை தொடர்கள் விநோதமானவை. பொதுவாக சொந்த ஊரில் போட்டி நடந்தால் உள்ளூர் அணிகள் தாம் வெல்லும். ஆனால் உலகக் கோப்பையில் நிலைமை நேர்கீழ். இந்தியாவைத் தவிர வேறெந்த அணியும் உலகக்கோப்பையை சொந்த ஊரில் வென்றதில்லை. அது போல் தொடர் நடக்கும் காலத்தில் வலுவாக உள்ள அணிகள் வெல்லும் என நினைப்போம். ஆனால் உலகக் கோப்பையில் சந்தம்மந்தமில்லாமல் ஒரு சாதாரண அணி அசாதாரணமாய் ஆடி கோப்பையை அடிக்கும். 88இல் ஆஸ்திரேலியா, 92இல் பாகிஸ்தான், 96இல் இலங்கை ஆகியவை சிறந்த உதாரணங்கள். ஆஸ்திரேலியா உச்சத்தில் இருந்த ரெண்டாயிரம் மட்டுமே விதிவிலக்கு. 2011இல் கூட இந்தியா எல்லாரும் எதிர்பார்த்த அணி அல்ல. இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அப்போது ஆட்டநிலையில் உச்சத்தில் இருந்தன. இந்தியாவின் வேகவீச்சாளர்கள் காயமுற்று, மூத்த மட்டையாளர்கள் களைத்து, சோர்ந்து போய் இருந்தனர். இந்திய அணித்தலைவர் தோனியே தொடர் முடிவில் இந்தியாவை ஒரு பழைய துருப்பிடித்த காரோட...