முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐபேடை ஒரு மாற்று மணிக்கணினியாக பயன்படுத்துவது


விண்டோஸ் கணினிகள் மீது கசப்பு ஏற்பட்ட பின்னர் நான் ஆப்பிளுக்கு நகரலாம் என முடிவெடுத்தேன். (அடிக்கடி எழுதிக் கொண்டிருக்கும் போது கணினி மயக்கம் போட்டு விழுவது, எழுதிக் கொண்டிருந்த கோப்பை அப்படியே புதைத்து விடுவது என ஏகப்பட்ட பிரச்சனைகள்; ஒரு கட்டத்தில் நான் கூகிள் docsஇல் எழுதுவது மட்டுமே பாதுகாப்பு என நம்பும் இடத்துக்கு நகர்ந்திருந்தேன்.) என் நண்பர்களும் இதை பரிந்துரைத்தனர்நான் தினமும் 6-8 மணிநேரங்கள் அல்லது அதற்கு அதிகமாகக் கூட கணினியில் எழுத செலவிடுகிறேன். ஒரு தரமான, நம்பகத்தன்மை கொண்ட கணினி இருப்பது என்னைப் போன்றோருக்கு அவசியம். ஆனால் ஒரு சிக்கல் - ஆப்பிள் கணினிகளின் விலை எட்டா கிளை. நான் எகிறிக் குதித்து ஒரு ஆப்பிளைப் பறித்தால் என் சேமிப்பில் பாதி காலியாகிடும்நான் ஏதாவது குறுக்குவழி இருக்குமா என யோசித்த போது புளூடூத் கீபோர்டுகள் கண்ணில் பட்டன

வெளிநாட்டில் பலரும் டேப்லெட்டை புளுடூத் கீபோர்டுடன் சேர்த்து ஒரு மடிக்கணினிக்கு பதிலியாக பயன்படுத்துகிறார்கள். (உள்ளூரில் நான் இந்த சங்கதியை - சென்னையிலோ இங்கு பெங்களூரிலோ கண்டதில்லை.) 
இதில் இரு அனுகூலங்கள்:
1) சிக்கனம்:
ஐபேடை நீங்கள் 25,000 சுமாருக்கு வாங்கி விடலாம். 2000-10,000 வரை சுமாரில் இருந்து தரமான கீபோர்டுகள் கிடைக்கின்றன. ஆக, ஒரு மாற்று மேக்புக்கை நீங்கள் 66,000-72,000 செலவழித்து வாங்க வேண்டியிராமல் 27,000-35,000க்கே ரெடி பண்ணி விடலாம்

2) வசதி
சம்பிரதாயமான விண்டோஸ் கணினிகள் கனமானவை. லேப்டாப் வைத்ததும் உங்கள் தோள்பை முதுகை அழுத்த தொடங்கும். ஆனால் ஐபேட் ஒரு மெல்லிய நாவலின் எடை கொண்டது. அதை ஒரு சின்ன ஸ்லிங் பையிலோ (ஜோல்னா பையிலோ) வைத்து அல்லது மேலங்கி அணிவோர் அதற்குள்ளாகவோ வைத்து எங்கும் கொண்டு போகலாம்

வேகம்
விண்டோஸ் கணினியின் booting time அதிகம். அது கண்விழித்து சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு, சேலையை உதறி ஒழுங்காக கட்டிக் கொண்டு முகம் கழுவி, பல்துலக்கி, உச்சா போய் தலையை சீவி ஒழுங்காகி உங்களுக்கு தேவையான கோப்புகளை திறந்து கடைபரப்பிட இரண்டு மூன்று நிமிடங்களாவது பிடிக்கும். 8 GB Ram கொண்ட நல்ல விண்டோஸ் கணினிகள் சுலபத்தில் திறந்து தயாராகும் என்றாலும் ஐபேடின் வேகத்துக்கு இணையாகாது.
 நீங்கள் ஐபேடை திறந்த அரை விநாடியில் அது புன்னகையுடன் உங்களுக்காக தயாராக இருக்கும். நான் எப்போதுமே ஐபேட் திறப்பதை கண்ணின் இமை ஒன்று திறப்பதுடன் ஒப்பிடுவேன்; கண் எப்போதுமே விழித்துதான் இருக்கும், இமை தான் அதை மூடி ஓய்வு கொடுக்கும். இமையை யாராவது தொட்டால் உடனடியாய் அது விழித்துக் கொள்ளும். விண்டோஸ் கணினிகளோ நமது மற்ற உடலுறுப்புகளைப் போல. தூங்கும் போது உங்கள் விரலை யாராவது அசைந்தால் அநிச்சையாக அதை இழுத்து கொள்வீர்களே அன்றி விழிக்க மாட்டீர்கள். ஐபேட் இப்படித் தான் நமதுகண்ணுக்கு கண்ணாகஇருக்கிறது.

நம்பகத்தன்மை:
ஐபேடை நான் பயன்படுத்த தொடங்கி ஆறு மாதங்கள் ஆகின்றன - ஒருமுறை கூட அது crash ஆனதில்லை. ஒரு கோப்பு கூட தானாக அழிந்து காணாமல் போனதில்லை. ஆப்பிள் கணிகளை பல வருடங்களாக பயன்படுத்தி வருபவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். ஆனால் விண்டோஸ் கணிகள் நம்மை நடுத்தெருவில் கைவிட்டு காணாமல் போவதையே வழக்கமாக வைத்துள்ளன.
நீங்கள் அவசரமாக கணினியை திறக்க முயலும் போதுஇருங்க, அப்டேட் ஆகிக் கொண்டிருக்கிறது. 20% ...” என அது இன்னொரு பாதையில் ஓடிக் கொண்டிருக்கும். அது தயாராக பத்து நிமிடமோ இருபது நிமிடமோ ஆகலாம். ஆனால் ஐபேடிலோ இந்த அப்டேட்டிங் பின்னணியில், உங்களுக்கு தொந்தரவோ இன்றி, நடந்து முடிந்து விடும்.

இணக்கம்:
விண்டோஸ் ஒரு பூனை; ஒட்டாது. ஆனால் ஐபேட் உங்களுடைய உடம்பின் ஒரு பாகம் போல் ஆகி விடும். உங்கள் தேவைகள் என்னென்ன என ஏற்கனவே அவர்கள் உணர்ந்து வடிவமைத்தது போன்றிருக்கும் IOS. இந்தஇணக்கத்தைபொறுத்தமட்டில் நீங்கள் விண்டோஸை இதனோடு ஒப்பிடவே முடியாது.

மின்கலம்:
இன்று இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்க மின்கலம் கொண்ட மொபைல், மடிக்கணினிகள் வந்து விட்டன. ஆனாலும் அவை விலை அதிகமானவை. சில விண்டோஸ் கணினிகள் நிலையற்றதாக இருக்கும், ஆனால் மின்கலம் நீண்ட நேரம் வரும். தரமும் நீடித்த மின்கலமும் ஐபேடில் சிக்கன விலையில் சாத்தியமாகிறது

தமிழில் தட்டச்சுவது:
விண்டோஸில் நீங்கள் தமிழில் எழுத NHM போன்ற செயலிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும். அவை சிலநேரம் வேலை செய்யாமல் போய் விடும். அப்போது நீங்கள் செயலியை நீக்கி மீண்டும் துவக்க வேண்டும். இது போன்ற அலும்புகள் ஐபேடில் இல்லை - IOS இல் தமிழ் தட்டச்சும் இணைந்தே வருகிறது. ஆங்கிலத்தில் எழுதும் சுலபத்துடன் நீங்கள் தமிழிலும் புழங்கலாம்.

Word ~ Pages:
நீண்ட காலமாகவே மைக்ரோசாப்ட் வேர்டில் எழுதிப் பழகிய எனக்கு அது இல்லாமல் எப்படி இயங்குவது என தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. வேர்ட் அடிக்கடி கிராஷ் ஆவதால் நான் கூகிள் டாக்ஸுக்கு நகர்ந்த நிலையிலும் கூட வேர்ட் மீதான என் மையல் மாறவில்லை. ஆனால் ஐபேட் வாங்கிய பிறகு நான் Pages எனும் செயலியை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தேன். வேர்டை விட மேலான, சுலபமான செயலி அது என புரிந்து கொண்டேன். ஒரு கோப்பை அதில் தயாரித்து வேர்ட் / PDF / EPUB ஆக மாற்றி அனுப்புவதோ, டிரைவில் சேமிப்பதோ ஒரே படியில் செய்து விடலாம். மேலும், அது பின்னணியில் தன்னை சேமிப்பதை நீங்கள் உணரவே முடியாது; திறப்பதும் மூடுவதும் ஏதோ வெண்ணெய் தொண்டையில் வழுக்கி செல்வது போல நடக்கும். நமது பெரும்பாலான எழுத்து வேலைகளுக்கான வசதிகள் அதிலேயே உண்டு. வெர்ட் அடிப்படையில் ஒரு வடிவமைப்பு செயலி. ஏகப்பட்ட ஆயுதங்கள் தரித்து, பெரிய கவசரம் ஏந்தி வரும் ராட்சஸ மனிதனைப் போன்றது வெர்ட். நமக்குத் தேவை ஒரு மெல்லிய எளிய வேலையாள். கேட்டால் உடனே வந்து நிற்கும் செயலர் என்றால் Pages போதுமானது, கச்சிதமானது.

இனி ஐபேடை புளூடூட் கீபோர்டுடன் பயன்படுத்தி என் அனுபவத்தை சொல்கிறேன். இவ்வாறு வாங்கி பயன்படுத்த விரும்புவோர் இதை அறிந்து கொள்வது முக்கியம்.

(தொடரும்)

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...